கென் ஆறு
கென் ஆறு Ken River | |
---|---|
கென் ஆறு | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் |
மண்டலம் | பண்டெல்கண்ட் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | அகிர்வன் |
⁃ அமைவு | கைமுர் சரகம், கட்னி மாவட்டம், மத்தியப் பிரதேசம் |
⁃ ஏற்றம் | 550 m (1,800 அடி) |
முகத்துவாரம் | யமுனை ஆறு |
⁃ அமைவு | சில்லா மலை, பாண்டா மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 25°46′N 80°31′E / 25.767°N 80.517°E |
நீளம் | 427 km (265 mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 310 m3/s (11,000 cu ft/s)[1] |
கென் ஆறு (Ken River), என்பது மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றாகும், மேலும் இது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது. இது யமுனை ஆற்றின் துணை நதியாகும்.
ஆற்றோட்டம்
[தொகு]கென் ஆறு கட்னி மாவட்டத்தில் பார்னர் மலைத்தொடரின் வடமேற்கு சரிவுகளில் உள்ள அகிர்கவன் கிராமத்திற்கு அருகில் உருவாகிறது.[2] இது 427 கி.மீ. தூரம் பயணித்து உத்தரப்பிரதேசத்தில் பண்டா மாவட்டம் சில்லா கிராமத்தில் யமுனாவுடன் இணைகிறது (25°46′N 80°31′E / 25.767°N 80.517°E).
கென் ஆற்றின் ஒட்டுமொத்த வடிநிலம் 28,058 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 12,620 கி.மீ. 2 சோனார் நதியின் மிகப் பெரிய துணை நதியைச் சேர்ந்தது. இதன் முழுப் பகுதியும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இதன் 427 கிலோமீட்டர்கள் (265 mi) பயணத்தில் இதன் துணை நதிகளான பவாஸ், தேவர், கைத், இடது கரையில் உள்ள பைங்க், வலதுபுறத்தில் கோப்ரா மற்றும் பியர்மா நதிகளிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது. இதன் மொத்த நீளம் 427 கிலோமீட்டர்கள் (265 mi). இதில் 292 கிலோமீட்டர்கள் (181 mi) மத்தியப் பிரதேசத்திலும், 84 கிலோமீட்டர்கள் (52 mi) உத்தரப் பிரதேசத்திலும், 51 கிலோமீட்டர்கள் (32 mi) இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான எல்லையாகவும் பாய்கின்றது.[3]
பிஜாவர்-பன்னா மலைகளைக் கடந்து, கென் ஆறு 60 கி. மீ. நீளத்திற்கு, 150-180 மீ ஆழமான பள்ளத்தாக்கு பகுதிகளில் அருவிகளை உருவாக்கும் வகையில் இதனுடைய பாதை அமைகின்றது. இந்த பள்ளத்தில் பல நீரோடைகள் கென்னுடன் இணைகின்றன. கென் பள்ளத்தாக்கு ரேவா பீடபூமியை சட்னா பீடபூமியிலிருந்து பிரிக்கிறது.
சுற்றுலா
[தொகு]கென் ஆற்றின் ரானே நீர்வீழ்ச்சி மற்றும் கென் கரியால் சரணாலயம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலங்களாக உள்ளன. இங்கு உருவான பாறைகள் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன. இவை கிரானைட், டோலமைட் மற்றும் குவார்ட்சு முதலானவற்றால் ஆனவை. கென் மற்றும் சிம்ரி நதிகளின் சங்கம பகுதியில் கங்காவ் அணை கட்டப்பட்டுள்ளது.[4] கென் நதி பன்னா தேசியப் பூங்கா வழியாகச் செல்கிறது.[5]
கென் ஆற்றின் கரையில் இந்த பிராந்தியத்தின் ராஜபுத்திரர்கள் பயன்படுத்திய சில அரண்மனைகள் உள்ளன. இப்போதெல்லாம், இந்த அரண்மனைகளில் சில தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூர் காவல்துறையினருக்கு கவலை அளிக்கக் காரணமாகின்றன. இந்த அரண்மனைகள் இடிந்துபோகும் நிலையில் உள்ளன. இவை கட்டப்பட்ட மலையின் கீழே இருந்து சுவர்களைக் காண்பது கடினம். முக்கிய கட்டிடங்களின் இடிபாடுகள் இன்னும் உள்ளன. இந்த அரண்மனைகளில் சில நல்ல மலையேற்ற பயிற்சியைத் தருகின்றன.
சாஜர் அல்லது சாசர், போன்ற அரிய விலைமதிப்பற்ற பிரபலமான இரத்தின கல் வகை கொண்ட ஒருங்கு முனைப்புக்கள் இங்குள்ளன. பண்டா நகரம் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
நதிகள் இணைப்பு
[தொகு]மத்தியப் பிரதேச மாநிலத்தின் நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ் பேட்வா ஆறு, கென் ஆற்றுடன் இணைக்க 25 டிசம்பர் 2024 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.[6][7] இந்த ஆறுகளின் இணைப்பால் மத்தியப் பிரதேசத்தில் வாழும் 44 இலட்சம் மக்களும்; உத்தரப் பிரதேசத்தில் வாழும் 21 இலட்சம் மக்களும் பயன் பெறுவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hydrology" (PDF). nwda.gov.in. National Water Development Authority. Retrieved 22 April 2014.
- ↑ "Chapter 2 – Physical Features" (PDF). Archived from the original (PDF) on 7 November 2007. Retrieved 2010-07-15.
- ↑ "A Watershed" (PDF). Envis Madhya Pradesh. Archived from the original (PDF) on 2011-07-21. Retrieved 2010-07-15.
- ↑ "Khajuraho Attractions". Sulekha. Archived from the original on 10 January 2016. Retrieved 2010-07-15.
- ↑ "Ken River Lodge". Nature Safari India. Archived from the original on 2010-07-24. Retrieved 2010-07-15.
- ↑ Modi lays foundation stone of Ken-Betwa river linking project
- ↑ நாட்டின் முதல் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்