கூத்தன் சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூத்தன் சேதுபதி (கி.பி. 1622 - கி.பி. 1635) என்பவர் இராமநாதபுரம் சமஸ்தான மன்னராக உடையான் ரெகுநாத சேதுபதிக்கு அடுத்து ஆட்சிக்கு வந்து 14 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவராவார்.

பணிகள்[தொகு]

இராமநாதபுர இராச்சியத்தில் பாயும் வைகை ஆற்றை வழிமறித்து அதன் தெற்கு நோக்கிச் செல்லுமாறு ஒரு பெரிய கால்வாயினை மன்னர் கூத்தன் சேதுபதி வெட்டுவித்தார். வெள்ளக் காலங்களில் வைகை ஆற்றில் வரும் நீரை இந்தக் கால்வாய் வழியாக திருப்பி அதில் வரும் நீரைத் தேக்க புதிய கண்மாய்களும், ஏந்தல்களும் ஏற்படுத்தி வறண்ட நிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டன. இதன் காரணமாக இந்தக் கால்வாய் கூத்தன் கால் என இவர் பெயராலேயே அழைக்கப்பட்டு, இன்றுவரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த சேதுபதி மன்னரால் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் பல புதிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் கோயிலின் முதல் சுற்றுப் பிரகாரத்தை இந்த மன்னர்தான் அமைத்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இந்தப் பிரகாரச் சுவற்றினை ஒட்டி மகா மண்டபம் ஒன்றினை நிர்மாணித்ததுடன் அந்த மதிலின் தென்பகுதியில் விநாயகருக்கு ஒரு சிற்றாலயத்தையும் அமைத்துள்ளார். மேலும் இந்தக் கோயிலின் நடமாளிகையையும் இந்த மன்னரே அமைத்தார் என்பது கல்வெட்டுச் செய்தி வாயிலாக தெரியவருகிறது. மேலும் இந்தக் கோயிலின் ஆண்டுவிழாக்கள், பூசைகள் போன்றவற்றை நடத்த தேவைப்படும் செலவுகளுக்காக சில கிராமங்களை சர்வமானியமாக வழங்கியுள்ளார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. எஸ். எம். கமால் (2003). "சேதுபதி மன்னர் வரலாறு/ii. கூத்தன் சேதுபதி". நூல். சர்மிளா பதிப்பகம். pp. 25–28. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூத்தன்_சேதுபதி&oldid=2768041" இலிருந்து மீள்விக்கப்பட்டது