கூத்தநூல்
கூத்தநூல் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று 'கூத்தநூலார்' என்னும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படும் கூத்தநூல். மற்றொன்று பிற்காலச் சாத்தனார் செய்த கூத்தநூல்.
கூத்தநூலார் செய்த கூத்தநூல்
[தொகு]தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியரும், சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் தாம் மேற்கோள் காட்டும் பாடல்கள் கூத்தநூலார் பாடல்கள் என்கின்றனர். கூத்த்தூலார் பாடல்களைக் ‘கூத்தநூல்’ பாடல்கள் என நாம் எடுத்துக்கொள்கிறோம்.
இசைநூலும், கூத்தநூலும் பிறன்கோள் கூறின – இது பேராசிரியர் கூற்று. [1]
குழல்வழி யாழ் எழீஇத் தண்ணுமைப் பின்னர் முழவியம்பல் ஆமந்திரிகை – இது அடியார்க்கு நல்லார் எடுத்துக்காட்டு. [2]
இவற்றால் நாம் அறிவது ‘கூத்தநூல்’ என்னும் நூல் ஒன்று இருந்தது என்பது.
‘பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக’ – இந்த அடி கொண்ட பாடலைக் கூத்தநூலார் பாடியது என ஓரிடத்திலும், மதிவாணனார் நாடகத்தமிழ்நூலில் உள்ளது என மற்றோரிடத்திலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
இதனால் கூத்தநூல் என்பதும், மதிவாணனார் நாடகத்தமிழ் என்பதும் ஒன்று என அறிஞர்கள் கருதுகின்றனர். [3]
சாத்தனார் செய்த கூத்தநூல்
[தொகு]கூத்தநூல் என்னும் கூத்து இலக்கண நூலை சங்க காலத்தினைத் சேர்ந்தது என்கின்றனர். இதன் ஆசிரியர் சாத்தனார் என்னும் புலவர். இந்தச் சாத்தனார் சங்ககாலச் சாத்தனார் அல்லர்.[4] இந்நூலானது பாயிரம், சுவை நூல், தொகை நூல் என் முப்பிரிவுகளைக் கொண்டதாகும். பாயிரம் நூல் வந்தவழியினைக் குறிப்பிடுகின்றது. 'சுவை நூல்' 156 நூற்பாக்களினைக் கொண்டு பத்துப் பிரிவுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் பரிணாமத்தினைப் பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது ஓசை; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இந்நூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன.
“ | மோனத்து இருந்த முன்னோன் கூத்தில் உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே நாட்டியம் பிறந்தது நாடக வகையே |
” |
— (கூத்தநூல் - தோற்றுவாய்) |
கவிஞர். பால பாரதி சு. து. சு. யோகியார் என்பவரால் கூத்தநூல் வெளியிடப்பெற்றது. [5]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ நூலின் உத்திகள் என்று தொல்காப்பியத்தில் 32 உத்திகள் கூறப்படுகின்றன. (மரபியலில் உள்ள இந்த நூற்பாவைச் இடைச்செருகல் என்கின்றனர்) இவற்றில் 13-வது உத்தி ‘பிறன் உடம்பட்டது தான் உடன்படுதல்’ இதற்கு உரை எழுதும் பேராசிரியர் இசைநூலும், கூத்தநூலும் பிறன்கோள் கூறின என எடுத்துக்காட்டியுள்ளார்.
- ↑ மாதவியின் நடனம் அரங்கேற்றப்படும்போது இசைக்கருவிகள் ஒத்து இயங்கின எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. அதற்கு உரை எழுதும்போது அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டு தந்து அதனைக் கூத்தநூலாசிரியர் பாடல் எனக் குறிப்பிடுகிறார்.
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 196 முதல்
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 198
- ↑ 'தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற தன் நூலில் 39 ஆம் பக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவிருந்த பேராசிரியர் டாக்டர் ஆறு. அழகப்பன் குறிப்பிடுகின்றார். இந்நூல் தமிழ்நாடு, இயல் - இசை, நாடக மன்றத்தால் 1968 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.