கூட்டுறவு சங்கம்
கூட்டுறவுச் சங்கம் (Co-operative Society), என்பது கூட்டாகச் சொந்தமான மற்றும் ஜனநாயக ரீதியாக நிர்வகிக்கப்படும் வணிகத்தின் மூலம் தங்கள் பகிரப்பட்ட பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரத் தேவைகளை நிறைவு செய்ய தானாக முன்வந்து ஒன்றிணையும் தனிநபர்களின் சுதந்திரமான குழுவின் அமைப்பாகும்.[1] பொதுவான பொருளாதார நலனை அடைவதற்காக ஒன்றாகக் கைகோர்த்து சுய உதவி மற்றும் பரஸ்பர உதவி என்ற கொள்கையின் மூலம் சமூகத்தின் ஏழைப் பிரிவுகளின் நலனுக்கு சேவை செய்வதே கூட்டுறவு சங்கத்தின் நோக்கமாகும்.
கூட்டுறவுச் சங்கத்தை அமைத்தல்
[தொகு]ஒரு கூட்டுறவுச் சங்கத்தை நிறுவ குறைந்தபட்சம் 10 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். மேலும் பங்குத் தொகையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தி இரசீது வைத்திருக்க வேண்டும். தமிழ்நாடு கூட்டுறவு சங்கஙகளின் (நான்காவது திருத்தத்) சட்டம், 2008-இன்[2]கீழ் தொடக்கக் கூட்டுறவு சங்கங்கள் தங்களுக்கான நோக்கங்கள் குறித்த துணை விதிகளை வகுத்துக் கொண்டு, பின் அதனை சரகக் கூட்டுறவு துணைப்பதிவாளரிடம் சான்று பெற வேண்டும். சரக துணைப்பதிவாளர் வழங்கும் சான்றிதழில் சங்கத்தின் பெயர் மற்றும் துவங்கப்பட்ட நாள் மற்றும் செயல் துவங்கிய நாள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த துணை விதிகளின் கீழ் சங்கம் செயல்பட வேண்டும்.
நிர்வாகக் குழு
[தொகு]நேரடித் தேர்தல் முறையில் தொடக்கக் கூட்டுறவு சங்க உறுப்பினர்களால் 7 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சஙகத் தலைவர் மற்றும் துணைத் தலைவரைத் தேர்வு செய்வர். நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். நிர்வாகக் குழு மாதம் ஒரு முறையாவது கூட்டப்பட வேண்டும். தொடர்ந்து மூன்று முறை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிர்வாகியின் பதவிக்காலம் தானாவே இரத்து ஆகிவிடும்.
பொதுக் குழு
[தொகு]ஆண்டு தோறும் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் அடங்கிய பொதுக் குழு கூட்ட வேண்டும். பொதுக் குழுவில் நிதியாண்டில் நடைபெற்ற வரவு-செலவு, ஆஸ்தி-பொறுப்பு பட்டியல் மற்றும் இலாப-நட்டக் கணக்குகள் உள்ளிட்ட ஆண்டறிக்கை வாசிக்க வேண்டும். மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கூட்டத்திற்கு வந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறவேண்டும். மேலும் பொதுக்குழுவின் ஒப்புதலுடன் நிதியாண்டில் சங்கம் ஈட்டிய இலாபத்தை பிரித்தல் வேண்டும். இலாபத்தில் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத்தொகையைப் பிரித்துத் தர வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும்.
சங்க நிதியைக் கையாளுதல்
[தொகு]நிதிகளை முதலீடு செய்தல், ஊழியர்களின் பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற நிதி தொடர்பான விசயங்களுக்கு அதனுடன் தொடர்புடைய சட்டம் மற்றும் மற்றும் விதிகளை அனுசரித்து செயல்பட வேண்டும்.
வைப்பு நிதி பெறுதல் & கடன் வழங்குதல்
[தொகு]ஒரு உறுப்பினர் சங்கத்தில் செலுத்தியிருக்கும் பங்குத் தொகைக்கு ஏற்ப வெந்நிலை (தனிநபர்) ஜாமீன் கடன் வழங்கப்படுகிறது. பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கம் எனில் உறுப்பினர்களிடம் மாதாமாதம் சிக்கன நிதியை ஊதியத்திலிருந்து வசூலிக்க வேண்டும். அதற்கு ஆண்டிற்கு ஒரு முறை வட்டி கணக்கிட்டு, உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் போது திருப்பித் தர வேண்டும்.
சங்கப் பணியாளர்கள்
[தொகு]மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மண்டல இணைப்பதிவாளரின் பரிந்துரையின் பேரில் சங்கப் பணியாளர்கள் சங்கத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
கூட்டுறவு சங்கங்களின் வகைகள்
[தொகு]- நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்
- தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள்[3]
- வேளாண் விளைபொருள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள்[4]
- கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள்
- மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள்
- பணியாளர்கள் கூட்டுறவுச் சிக்கன நாணய சங்கங்கள்[5]
- பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள்[6]
- பனை வெல்லம் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள்
- உற்பத்தியாளர் / சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கங்கள்
- வீட்டு வசதி கூட்டுறவுச் சங்கங்கள்
- நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்கள்
- தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள்
- நகர கூட்டுறவுச் வங்கிகள்
- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
- மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுப் பண்டகசாலைகள்
- மாநில அளவிலான கூட்டுறவுச் சங்கங்கள்:-