உள்ளடக்கத்துக்குச் செல்

கூடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடதுபுறத்தில் உயிருள்ள கோழிகளை அடைத்துவைக்கும் பஞ்சாரக் கூடைகள் உள்ளன. அதற்கு நேர் வலதுபுறத்தில், சீன மக்கள் குடியரசின் ஆய்னான் மாகாணத்திலுள்ள ஆய்-காவு நகரில் இறால் மற்றும் சிறிய மீன்களை விற்பனை செய்யப் பயன்படுத்தப்படும் தட்டையான கூடைகள் உள்ளன.

கூடை (Basket) என்பது பாரம்பரியமாக உறுதியான இழைகளால் செய்யப்படும் ஒரு கொள்கலன் ஆகும். இது மூங்கில், கொடி, பிரம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கின்றனர். கூடைகள் பெரும்பாலும் தாவரப் பொருட்களிலிருந்து செய்யப்பட்டாலும், குதிரை முடி, திமிங்கல எலும்பு, உலோகக் கம்பி போன்ற பிற பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். கூடைகளை பொதுவாக கையால் முடைகின்றனர். சில கூடைகள் மூடியுடன் அமைந்திருக்கும்; மற்றவை மேற்புறம் திறந்த நிலையில் இருக்கும்.

பயன்கள்

[தொகு]

கூடைகள் பயன்பாட்டுக்காகவும், அழகியல் நோக்கங்களுக்காகவும் பயன்படுகின்றன. சில கூடைகள் சடங்கு ரீதியானவை, அதாவது சமய ரீதியான பயன் உள்ளவை. [1] கூடைகள் பொதுவாக அறுவடை, சேமிப்பு, பொருட்களை எடுத்துவர பயன்படுத்தப்பட்டாலும், [2] சமையல், விதைகள் அல்லது தானியங்களைப் பதப்படுத்துதல், மீன் பொறிகள், சலவை உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தபடுகின்றன. சிலவகைக் கூடைகள் சல்லடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வரலாறு

[தொகு]
இளைஞன் ஒருவன் பனைக்கூடையை முடைகிறான்.

கூடைகள் முடைவது கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, எளிய கொள்கலன்களை உருவாக்க மக்கள் மரப்பட்டைகளைப் பயன்படுத்தினர். சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் பிற பொருட்களைக் கொண்டு செல்ல இந்தக் கொள்கலன்கள் பயன்பட்டன; இருப்பினும், சிலமுறை பயன்படுத்தியவுடனேயே அவை சிதைந்து போயின. மரப்பட்டைக் கொள்கலன்களுக்குத் துணையாக, மரப்பட்டை கீற்றுகள் அல்லது பிற தாவரப் பொருட்களைக் கொண்டு பின்னுவது அடுத்த கட்டமாக அமைந்தது; இதைத் தொடர்ந்து, முழுமையாக முடையப்பட்ட கூடைகள் உருவாக்கப்பட்டன. தண்ணீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு மிகவும் இறுக்கமாகப் பின்னப்பட்ட கூடைகளே கடைசிப் புத்தாக்கமாகத் தோன்றுகிறது. [ சான்று தேவை ]

மண் நிலைகளைப் பொறுத்து, தொல்லியல் பதிவுகளில் கூடைகள் பாதுகாக்கப்படலாம் அல்லது பாதுகாக்கப்படாமலும் போகலாம். மத்திய கிழக்கில் உள்ள தொல்லியல் தளங்கள், கி.மு. கி.மு 8000-ஆம் ஆண்டு வாக்கில் பாய்களைச் செய்வதற்கும், ஒருவேளை கூடைகளைச் முடைவதற்கும் கூட, நெசவு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதைக் காட்டுகின்றன. [ சான்று தேவை ] ஓயாசிஸ்அமெரிக்காவில் கி.மு 7000 [1] ஆம் ஆண்டு முதல் முறுக்கப்பட்ட கூடைகள் இருந்து வருகின்றன. கி.மு. 3000 இல் பின்னிப்பிணைந்த நுட்பங்களால் செய்யப்பட்ட கூடைகள் பொதுவாக இருந்தன.

கூடைகள் துவக்கத்தில், பொருட்களை எடுத்துச் செல்லவும் அவற்றைச் சேமிக்கவும், வீட்டில் சிதறிக்கிடக்கும் பொருட்களை வைக்கவும் பயன்படும் பல்நோக்குக் கலன்களாக வடிவமைக்கப்பட்டன. ஒரு பிராந்தியத்தில் கிடைக்கும் தாவரங்கள், கூடை முடைய பயன்படுத்தப்படும் பொருட்களின் தேர்வில் தாக்கத்தைச் செலுத்துகின்றது. இது முடைதல் நுட்பத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பிரம்பு மற்றும் அரேகேசி அல்லது பனை மரக் குடும்பத்தைச் சேர்ந்த பிற தாவரப் பொருட்கள், மிதவெப்ப மண்டலங்களின் மெல்லிய புற்கள், மற்றும் அகன்ற இலைகளைக் கொண்ட வெப்பமண்டல புரோமிலியாட்கள் ஆகிய ஒவ்வொன்றையும் கூடையாக உருவாக்க, முறுக்குவதற்கும் முடைவதற்கும் வெவ்வேறு முறைகள் தேவைப்படுகின்றன. கூடை முடையும் பழக்கம் ஒரு கலையாகப் பரிணமித்துள்ளது. கூடை முடைபவர்களுக்கு உள்ள கலைச் சுதந்திரம் வண்ணங்கள், பொருட்கள், அளவுகள், வடிவங்கள், நுணுக்கங்களில் பரந்த அளவிலான தேர்ந்தெடுத்தலை அளிக்கிறது.

தலையில் கூடையைச் சுமந்து செல்லும் வழக்கம், குறிப்பாக கிராமப்புறப் பெண்களிடையே, நீண்ட காலமாக இருந்து வருகிறது. பண்டைய கிரேக்க கலையில் இதன் சித்தரிப்புகள் 'கனெஃபோரே' என்று அழைக்கப்படுகின்றன.

மூலப்பொருட்கள்

[தொகு]

கூடை தயாரிப்பாளர்கள் பின்வருவன உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்:

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Hopi Basketry". Northern Arizona Native American Culture Trail. Archived from the original on March 28, 2012. Retrieved Nov 13, 2011.
  2. "About Baskets". Archived from the original on September 3, 2018. Retrieved April 2, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூடை&oldid=4515148" இலிருந்து மீள்விக்கப்பட்டது