கு. ப. ராஜகோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட கு. ப. ராஜகோபாலன் (ஜனவரி 1902 - ஏப்ரல் 27, 1944) ஒரு தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும் அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்று அழைக்கப்படுகிறார்.[1][2]

வாழ்க்கை வரலாறு[தொகு]

கு. ப. ரா கும்பகோணத்தில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் பட்டாபிராமையர்- ஜானகி அம்மாள். திருச்சி கொண்டையம்பேட்டைப் பள்ளியில் ஆரம்பக் கல்வியும், தேசியக் கல்லூரியில் இடைநிலை (இண்டர்மீடியட்) கல்வியும் பெற்றார். கும்பகோணம் அரசினர் கல்லூரியில் வடமொழியை சிறப்புப் பாடமாகக் கொண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது 24ஆம் வயதில் அம்மணி அம்மாளை மணந்தார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். கண்புரை நோயின் காரணமாக கண் பார்வை குன்றியதால் அப்பணியில் இருந்து விலகினார். கண் பார்வை குன்றிய நிலையிலும் மணிக்கொடி போன்ற இதழ்களில் அவரது இலக்கியப் படைப்புகளை எழுதி வெளியிட்டார்.[1]

மருத்துவ சிகிச்சைக்குப்பின் கண் பார்வை மீண்டும் கிட்டியது. சென்னைக்கு இடம்பெயர்ந்து முழுநேர எழுத்தாளராக மாறினார். மணிக்கொடி, கலைமகள், சுதந்திர சங்கு, சூறாவளி, ஹனுமான், ஹிந்துஸ்தான் போன்ற இதழ்களில் அவரது படைப்புகள் வெளியாகின. வ. ராமசாமி ஆசிரியராக இருந்த ”பாரத தேவி” என்ற இதழிலும், கா. சீ. வெங்கடரமணி நடத்திய ”பாரத மணி” இதழிலும் சிலகாலம் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின் போது கும்பகோணத்துக்கு மீண்டும் திரும்பி ”மறுமலர்ச்சி நிலையம்” என்ற பெயரில் புத்தக நிலையம் ஒன்றை நடத்தினார். 1943ஆம் ஆண்டு கிராம ஊழியன் இதழின் சிறப்பாசிரியராகப் பொறுப்பேற்றார். அதற்கு அடுத்த ஆண்டு அவ்விதழின் ஆசிரியரானார். ஆனால் இழைய அழுகல் நோயால் தாக்கப்பட்டு 1944ஆம் ஆண்டு இறந்தார்.[1]

கு. ப. ரா. வின் தங்கை சேது அம்மாளும் அறியப்பட்ட ஒரு எழுத்தாளர்.[2]

படைப்புகள்[தொகு]

கு. ப. ரா தனது இயற்பெயரிலும் ”பாரத்வாஜன்”, "கரிச்சான்', "சதயம்” போன்ற புனைப்பெயர்களிலும் படைப்புகளை வெளியிட்டார்.

  • அகலியை (13 ஓரங்க நாடகங்களின் தொகுப்பு)
  • கண்ணன் என் கவி (சிட்டி பெ. கோ. சுந்தரராஜனுடன்) இணைந்து எழுதிய இலக்கியத் திறனாய்வு நூல்)
  • பாரதியே மகாகவி (சிட்டியுடன் இணைந்து எழுதிய நூல்)
  • ஆறு நவயுக நாவல்கள்
  • ஸ்ரீஅரவிந்த யோகி
  • டால்ஸ்டாய் வாழ்க்கையும் உபதேசமும்
  • வேரோட்டம் (முற்றுப்பெறவில்லை)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._ப._ராஜகோபாலன்&oldid=1885014" இருந்து மீள்விக்கப்பட்டது