உள்ளடக்கத்துக்குச் செல்

கு. பத்மநாபன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. பத்மநாபன்
K. Pathmanaban
மலேசிய சுகாதார துணை அமைச்சர்
பதவியில்
1981–1990
முன்னையவர்சுலைமான் டாவூட்
பின்னவர்முகமது பரித் அரிபின்
மலேசிய மனிதவள துணை அமைச்சர்
பதவியில்
1974–1981
முன்னையவர்அப்துல்லா மஜீத்
பின்னவர்சக்காரியா அப்துல் ரகுமான்
தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதி
பதவியில்
1974–1990
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்மாரிமுத்து தங்கவேலு
பாரிசான்; மஇகா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 ஜூன் 1937
புக்கிட் பெர்த்தாம் தோட்டம், லிங்கி, நெகிரி செம்பிலான்
இறப்பு9 சூன் 2001 (வயது 64)
பந்தாய் மருத்துவ மையம், கோலாலம்பூர்
குடியுரிமைமலேசியர்
தேசியம் மலேசியா
அரசியல் கட்சி மஇகா
துணைவர்டத்தின் பிரேமா
பிள்ளைகள்பிரவீன்; பிரசாந்த்; பிரமோகன்
கல்விஆர்வர்டு பல்கலைக்கழகம், (முதுகலை வணிக மேலாண்மை) (1970).
பணிஅரசியல்வாதி

கு. பத்மநாபன் அல்லது பத்மநாபன் குஞ்சம்பு (ஆங்கிலம்: K. Pathmanaban அல்லது Pathmanaban Kunjamboo; மலாய்: K. Pathmanaban; சீனம்: 路径班) (10 சூன் 1937 – 9 சூன் 2001) (வயது 64) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 1981 முதல் 1990 வரை மலேசிய சுகாதார துணை அமைச்சர்;[1] 1974 முதல் 1981 வரை மலேசிய தொழிலாளர் துறை துணை அமைச்சர்; 1974 முதல் 1990 வரை தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

இவர் மலேசிய இந்தியர் காங்கிரசு கட்சியின் உதவித் தலைவரும், மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரியின் (MILA University) நிறுவனரும் ஆவார்.[2] மலேசிய இந்தியர்களுக்கான இவரின் சேவைகளையும் பங்களிப்புகளையும் நினைவுகூரும் வகையில் நெகிரி செம்பிலான், ரொம்பின் நகரில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளிக்கு டத்தோ கு. பத்மநாபன் தேசிய வகை தமிழ்ப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[3]

வாழ்க்கை

[தொகு]

நெகிரி செம்பிலான், லிங்கி வட்டாரத்தின் புக்கிட் பெர்த்தாம் தோட்டத்தில் பிறந்த பத்மநாபன்; மிகச் சாதாரண, பின்தங்கிய குடும்பச் சூழலில் வளர்ந்தவர். அவரின் தந்தையார் குஞ்சம்பு, தொடக்கக் கல்விக்காக பத்மநாபனைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பினார்.[4]

பின்னர் மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பிற்குச் சென்றார். அப்போது தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படித்தார். மலாயா பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக இந்திய ஆய்வியல் துறை தொடங்கப்பட்டபோது, அதன் தொடக்க ஆண்டிலேயே, அந்தத் துறையில் சேர்ந்து படித்தார்.[4]

1959-ஆம் ஆண்டில் பட்டப் படிப்பை முடித்த பத்மாநாபன், அரசாங்கத் துறையில் சேர்ந்தார். மலேசிய அரசாங்க நிதியுதவியைப் பெற்று அமெரிக்காவில் உள்ள ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாகத் துறையில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றார். 1974-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வரை, தொழிலாளர் அமைச்சிலும்; பின்னர் பிரதமர் துறையின் பொருளாதார திட்டமிடல் பிரிவிலும் பணியாற்றினார்.[4]

தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதி

[தொகு]

1974-ஆம் ஆண்டில் மஇகா-தேசிய முன்னணி சார்பில் தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்மாநாபன், 1990-ஆம் ஆண்டு வரை அந்தத் தொகுதியைத் தற்காத்துக் கொண்டார்.[4]

1990-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அவருக்கு தெலுக் கெமாங் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து அரசியலில் இருந்தும் அவர் விலகிக் கொண்டார்.[4] அரசியலில் இருந்து ஒதுங்கிய பின்னர், சில வணிக முயற்சிகளிலும் பல சமூகச் சேவைகளிலும் பத்மாநாபன் ஈடுபட்டார்.

மணிப்பால் மருத்துவக் கல்லூரி

[தொகு]

மலேசிய நாட்டின் முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் மணிப்பால் மருத்துவக் கல்லூரி; மலேசியாவில் முதல் தனியார் மருத்துவக் கல்லூரியாக உருவாக்கப்படுவதற்கு பத்மாநாபன் பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். மலேசிய சுகாதார துணை அமைச்சராக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு மணிப்பால் மருத்துவக் கல்லூரி மலேசியாவில் செயல்பட அடித்தளம் அமைத்துத் தந்தார்.[4][5]

இந்தியா-மலேசியா இரு நாடுகளுக்கு இடையிலான இரட்டை மருத்துவத் திட்டத்திற்கு, மலேசியப் பிரதமர் மற்றும் இந்தியப் பிரதமர்; மற்றும் இரு அரசாங்கங்களின் ஒப்புதலைப் பெறுவதில் பத்மாநாபன் மிக முக்கியப் பங்கு வகித்தார். மருத்துவக் கல்லூரியை அமைப்பதன் முக்கிய நோக்கம், குறிப்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு, மலிவு விலையில் உயர்தர மருத்துவக் கல்வி வாய்ப்புகளை வழங்குவதாகும்.

மலேசிய இந்தியர்களின் உரிமைகள்

[தொகு]

மலேசிய இந்தியர்களின் உரிமைகள்; மற்றும் அவர்களின் கல்வித் துறை உரிமைகள்; ஆகியவற்றுக்காக பத்மநாபன் தீவிரமாகப் போராடியுள்ளார். மலேசிய இந்தியர் சமூகத்தை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி வந்தார். மஇகாவின் கல்விக் குழுவிற்குத் தலைமை தாங்கிய அவர், அரசுப் பல்கலைக்கழகங்களால் நிராகரிக்கப்பட்ட அனைத்து மாணவர்கள் பற்றிய தகவல்களையும் சேகரித்தார்.

வெட்டுநிலை புள்ளியைத் (cut-off point) தவறவிட்ட மலேசிய இந்தியர் மாணவர்களுக்கு கூடுதல் இடங்களைப் பெறுவதற்காக, மலேசிய இந்தியர் காங்கிரசு பிரதிநிதிககுடன் பத்மநாபன், மலேசியாவின் ஒவ்வொரு பல்கலைக்கழகத் துணைவேந்தரையும் சந்தித்தார்.[6] அந்த வகையில் மலேசிய இந்தியர் மாணவர்கள் பலருக்கு மலேசியப் பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் கிடைத்தன.

மஇகா தலைவர் துன் ச. சாமிவேலு அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக பத்மநாபன் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் என்றும் அறியப்படுகிறது.

இறப்பு

[தொகு]

டத்தோ கு. பத்மநாபன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக கோலாலம்பூரில் உள்ள பந்தாய் மருத்துவ மையத்தில் சூன் 9, 2001 அன்று அதிகாலை 1 மணியளவில்; தம்முடைய 64-ஆவது பிறந்த நாளைக் கொண்டாட ஒரே ஒரு நாள் எஞ்சியிருந்த நிலையில் காலமானார்.[4]

அவரின் உடல் செராஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள இந்து தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகள் போர்ட்டிக்சன் நகரில் நடைபெற்றன.

நினைவு

[தொகு]

மலேசிய இந்தியர் வரலாற்றில் தடம் பதித்தவர்களில் டத்தோ கு. பதபநாபன் அவர்களும் ஒருவராவார். மலேசிய இந்தியர்களின் நினைவுகளில் என்றும் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "MALAYSIAN DEPUTY MINISTER OF HEALTH DATUK K PATHMANABAN". www.nas.gov.sg. Retrieved 2 February 2026.
  2. ↑ "Milestones & History". MILA University. Archived from the original on 17 January 2025. Retrieved 17 January 2025.
  3. ↑ "SJKT Dato' K. Pathmanaban is setting a strong example in the Tamil school community". www.instagram.com. Retrieved 2 February 2026.
  4. 1 2 3 4 5 6 7 "டத்தோ கு. பத்மநாபன்: அறிவாற்றல் – அரசியல் விசுவாசம் – சமூக நோக்கு – ஒருங்கிணைந்த மகத்தான தலைவர் | Selliyal - செல்லியல்". Selliyal. 12 June 2022. Retrieved 2 February 2026.
  5. ↑ "Manipal University College Malaysia (MUCM); It was through the vision of Dr. Ramdas Pai, Chancellor of Manipal University, and the instrumental efforts of the late Datuk K Pathmanaban". MUCM ICON-IPEPC. Retrieved 2 February 2026.
  6. ↑ Samy Vellu and the Blue Book

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._பத்மநாபன்&oldid=4459613" இலிருந்து மீள்விக்கப்பட்டது