கு. கதிரைவேற்பிள்ளை
உவைமன் கு. கதிரைவேற்பிள்ளை | |
---|---|
பிறப்பு | 1829 வல்வெட்டித்துறை, இலங்கை |
இறப்பு | ஏப்ரல் 14, 1904 (அகவை 74–75) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | வழக்கறிஞர், நீதிபதி |
அறியப்படுவது | பேரகராதி தொகுத்தவர் |
பெற்றோர் | க. குமாரசுவாமி முதலியார், சிவகாமி |
பிள்ளைகள் | க. பாலசிங்கம் |
உறவினர்கள் | 'இந்துபோர்ட்' சு. இராசரத்தினம் (மருமகன்) |
வைமன் கு. கதிரைவேற்பிள்ளை (C. W. Catheravalupully, 1829 - 14 ஏப்ரல் 1904) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், பத்திரிகாசிரியரும் ஆவார். தமிழ்ச் சொல் அகராதி தொகுத்தவர்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]கதிரைவேற்பிள்ளை யாழ்ப்பாண மாவட்டம், உடுப்பிட்டியைச் சேர்ந்த க. குமாரசுவாமி முதலியார், வல்வெட்டித்துறை புண்ணியமூர்த்தியின் மகள் சிவகாமி[1] ஆகியோருக்கு 1829 ஆம் ஆண்டில் வல்வெட்டித்துறையில் பிறந்தார்.[2] இவருடன் கூடப் பிறந்தவர்கள் சபாபதி முதலியார் (இ. 1884), மீனாட்சிப்பிள்ளை ஆகியோர். தாய்வழிப்பேரன் புண்ணியமூர்த்தி மணியகாரன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட திண்ணைப் பாடசாலையில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளமையிலேயே ஆங்கிலத்திலும், தமிழிலும் புலமை பெற்றிருந்தார். 1841 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டை செமினறியில் சேர்ந்து உயர்கல்வி கற்றார்.[1] செமினறியில் தனது ஆசிரியராக இருந்த வைமன் என்பவரின் பெயரைத் தனது முதல் பெயராக சேர்த்துக் கொண்டார். இதனால் இவர் வைமன் கு. கதிரவேற்பிள்ளை என அழைக்கப்பட்டார்.[1]
ஆசிரியப் பணி
[தொகு]கல்வியை முடித்துக் கொண்ப்ட கதிரவேற்பிள்ளை 1848 முதல் 1851 வரை வட்டுக்கோட்டை செமினரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1851 ஆகது 1 இல் இருந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் (உவெசுலியன் கல்லூரி) ஆசிரியராகச் சேர்ந்தார்.[1] மத்திய கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் 1853 மே 6 அன்று “லிற்ரரி மிரர்” (Literary Mirror) என்னும் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். 1855 ஏப்ரல் 24 அன்று ஆசிரியத் தொழிலில் இருந்து விலகிக் கொண்டு வழக்கறிஞர் தொழிலில் இறங்கினார்.
வழக்கறிஞர் பணி
[தொகு]லிற்ரறி மிரர் பத்திரிகை மூலம் கதிரவேற்பிள்ளையின் திறமையை அறிந்து கொண்ட பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி லீச்சிங் என்பவர் அவரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தினார். சட்டத்துறையில் மேலும் கற்க விரும்பி கொழும்பில் இருந்த தோமசு ட்றஸ்ட் என்பவரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார்.[1] 1858 மே 5 இல் கொழும்பில் சட்டவறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.[3]
1863 பெப்ரவரி 6 அன்று "சிலோன் பேட்ரியாட்" (Ceylon Patriot, இலங்காபிமானி) என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்து நாகரிகம், தமிழரின் சுதேச வைத்தியம் என பல துறைகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டார்.[3]
திருமணம்
[தொகு]கதிரவேற்பிள்ளை 1862 ஆம் ஆண்டில் உடுப்பிட்டியைச் சேர்ந்த முருகேசர் என்பவரின் மகளை மணந்தார். இவர்களுக்கு குமாரசாமி எனும் மகனும், திருத்தாட்சிப்பிள்ளை, பூம்பாவைப்பிள்ளை, சகுந்தலைப்பிள்ளை என்னும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். மகன் குமாரசாமி இளம் வயதிலேயே காலமானார். 1872 ஆம் ஆண்டில் மனைவி காலமானார்.[1] பின்னர் 1874 ஆம் ஆண்டில் கோப்பாய் கதிரேசு என்பவரின் மகள் சிவகாமிப்பிள்ளையை திருமணம் புரிந்து கொண்டார். சிவகாமியின் சகோதரர் சுப்பிரமணியம் என்பவருக்கு தனது தங்கை மீனாட்சியைத் திருமணம் செய்து கொடுத்தார். சுப்பிரமணியம்-மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவரே 'இந்துபோர்ட்' சு. இராசரத்தினம் ஆவார்.[1] கதிரவேற்பிள்ளைக்கும் சிவகாமிப்பிள்ளைக்கும் பிறந்தவர் க. பாலசிங்கம் (1876-1952). இவர் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை ஆகியவற்றின் உறுப்பினராக இருந்தவர்.
நீதிபதிப் பணி
[தொகு]இலங்கையின் பிரித்தானிய ஆளுனராக இருந்த சேர் வில்லியம் கிரெகரி இவரை 1872 மே 21 அன்று ஊர்காவற்துறை நீதிபதியாக நியமித்தார்.[3] 1884 ஆம் ஆண்டில் இலங்கை குடியுரிமை சேவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பருத்தித்துறை, மல்லாகம் சாவகச்சேரி ஆகிய நகரங்களில் காவல்துறை நீதிபதியாகவும், யாழ்ப்பாணம் உயர்நீதிமனற நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.[2]
கதிரவேற்பிள்ளை 1898 நவம்பரில் தனது அரசபணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[3]
அகராதி வெளியிடல்
[தொகு]கதிரைவேற்பிள்ளை நீதிபதியாகப் பதவியில் இருந்த காலத்தில் தமிழ் மொழியில் பேரகராதி ஒன்றினைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இவருக்கு சொற்குறிப்புகளை உதவியுள்ளார்.[2] உடுப்பிட்டி ஆறுமுகம் பிள்ளை, ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர்[4] ஆகியோரும் அகராதி ஆக்கத்திற்கு உதவியுள்ளனர்.[2] கதிரைவேற்பிள்ளையால் 1904 ஆம் ஆண்டில் வண்ணார்பண்ணை வி. சபாபதி ஐயரின் அச்சியந்திரசாலையில் 328 பக்கங்களில் அச்சிட்டு வெளியிடப்பட்ட தமிழ்ச் சொல் அகராதி அகர வரிசை வரையுமே கொண்டிருந்தது.[2] பேரகராதியைத் தொகுத்து முடிப்பதற்கிடையில் அவர் காலமாகிவிடவே, அவரது மகன் க. பாலசிங்கம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் கொண்டு பேரகராதியை முழுமையாக்கி வெளியிட்டார்.[2] 344 நூல்களிலிருந்து இவ் அகராதிக்கு மேற்கோள்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கதிரைவேற்பிள்ளை "தர்க்க சூடாமணி" என்ற நூலை 1862 இல் யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார். இது மின்னூலாக உவேசா நூலகத்தில் கிடைக்கிறது.[5]
வைமன் வீதி
[தொகு]யாழ்ப்பாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய காலத்தில் கதிரவேற்பிள்ளை 1885 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரில் குடியேறினார். நல்லூரில் உள்ள வீடொன்றை விலைக்கு வாங்கினார். இவர் வாழ்ந்த வீடு "வைமன் வீடு" எனவும், வீடு அமைந்திருந்த வீதி "வைமன் வீதி" எனவும் பெயர் பெற்றது. இப்பெயர் இன்றும் வழக்கில் உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "மண்ணின் மைந்தர்கள்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2015.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 கணபதிப்பிள்ளை, மு. தென்புலோலியூர் (1967). ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள். சென்னை: பாரி நிலையம். pp. 61–62.
- ↑ 3.0 3.1 3.2 3.3 மார்ட்டின், ஜோன் எச். (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. தெல்லிப்பழை: American Ceylon Mission Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
- ↑ "பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை". பார்க்கப்பட்ட நாள் 7 சூன் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கதிரவேற்பிள்ளை, கு., வைமன் (1862). தர்க்க சூடாமணி (PDF). யாழ்ப்பாணம்: Ripley & Strong Printers.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link)