குளுக்கோசு மானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1993-2005 வரையிலான நான்கு தலைமுறை குளுக்கோசு மானிகள். தேவையான இரத்த மாதிரியின் அளவு 30μl முதல் 0.3μl வரையாகும். சோதனை நேரம் 5 செக்கன்கள் முதல் 2 நிமிடங்கள் வரை வேறுபடுகின்றது. தற்கால மானிகளிற் பெரும்பாலானவை 5 செக்கன்களில் முடிவைத் தருகின்றன.

குளுக்கோசு மானி என்பது, இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் செறிவை அண்ணளவாக அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு மருத்துவக் கருவி. நீரிழிவு நோய், இரத்தச் சர்க்கரைக் குறைவு நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் இரத்தக் குளுக்கோசை அளவிட்டுக் கொள்வதில் முக்கியமான ஒன்றாக இது உள்ளது. விரல் நுனியில் அல்லது உடலின் குறிக்கப்பட்ட சில இடங்களில் ஊசியால் குத்திப் பெறப்படும் சிறிய அளவான இரத்தைத்தை, மானியில் பொருத்தப்படும் எறியக்கூடிய சோதனைக் கீற்று ஒன்றில் இடும்போது இரத்ததில் இருக்கும் குழுக்கோசின் அளவை மில்லிகிராம்/டெசிலீட்டர் (mg/dl) அல்லது மில்லிமோல்/லீட்டர் (mmol/l) அலகில் கணக்கிட்டுத் தருகின்றது.

ஏறத்தாழ 1980இலிருந்து நீரிழிவு தொடர்பான முகாமையில் கூடிய அளவு நேரத்துக்கு இரத்தக் குளுக்கோசுச் செறிவைச் சாதாரண மட்டத்தில் வைத்திருப்பதே இலக்காக உள்ளது. இதற்கு, வீட்டில் ஒரு நாளில் பல தடவைகள் இரத்தக் குளுக்கோசை அளவிடுவது முக்கியமானதாக உள்ளது. இதனால் நீரிழிவு நோயால் அல்லது இரத்தச் சர்க்கரைக் குறைவு நோயால் ஏற்படக்கூடிய நீண்டகாலப் பிரச்சினைகளையும், உயிராபத்தை விளைவிக்கக்கூடிய குறுகிய காலப் பிரச்சினைகளையும் குறைக்க முடிகிறது. இதன் காரணமாகத் தற்காலத்தில் குளுக்கோசு மானிகள் நீரிழிவு நோயாளிகளுக்கு இன்றியமையாத ஒன்றாகி உள்ளது.

இயல்புகள்[தொகு]

குளுக்கோசு மானிகள் பல்வேறு வகையான இயல்புகளைக் கொண்டுள்ளன. இவ்வியல்புகள் தயாரிப்பு மாதிரிகளைப் பொறுத்து வேறுபடுகின்றன.

அளவு: இன்று குளுக்கோசு மானிகள் பல அளவுகளில் கிடைக்கின்றன. இடத்துக்கிடம் எடுத்துச் செல்லவேண்டிய தேவை இருப்பதால் அளவு சிறிதாகிக்கொண்டே வருகிறது. தற்காலத்தில் குளுக்கோசு மானியின் சராசரி அளவு உள்ளங்கையின் அளவை ஒத்திருப்பதாகக் கொள்ளலாம்.

சோதனைக் கீற்று: குளுக்கோசுடன் வினை புரியக்கூடிய வேதிப்பொருள் பூசப்பட்ட இக் கீற்று சோதனையின் போது மானியுள் செருகப்படுகிறது. இக்கீற்றில் அதற்கென உள்ள பகுதியில் ஒரு சிறிதளவு இரத்தம் இடப்படும்போது மானி அதிலுள்ள குளுக்கோசுச் செறிவைக் காட்டுகிறது. ஒரு கீற்றை ஒரு சோதனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். சில மானிகள் கீற்றுகளுக்குப் பதிலாகப் பல சோதனைகளுக்குப் பயன்படக்கூடிய சிறிய தட்டுக்களைப் பயன்படுத்துகின்றன. இக்கீற்றுக்களின் இயல்புகள் ஒவ்வொரு உற்பத்தித் தொகுதியிலும் வேறுபட்டு அமையக்கூடும் என்பதால் இக்கீற்றுக்களின் மீது அல்லது அவற்றைக் கொண்டிருக்கும் பேழையின் மீது ஒரு எண்குறி இடப்பட்டிருக்கும். சோதனையின் போது இந்த எண்குறையை மானியில் உள்ளிட வேண்டும்.

இரத்த மாதிரியின் கனவளவு: சோதனைக்குத் தேவையான இரத்த மாதிரியின் அளவு மானிகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. இது 0.3 முதல் 1.0 மைக்குரோ லீட்டர் வரை வேறுபடக்கூடும். பழைய குளுக்கோசு மானிகளுக்குக் கூடிய அளவு இரத்த மாதிரி தேவையாக இருந்தது.

இரத்தம் எடுப்பதற்கான இடம்: சோதனைக்கான இரத்த மாதிரி பெரும்பாலும் விரல் நுனிகளில் இருந்தே எடுக்கப்படுகிறது. சில மானிகள் முன்னங்கை போன்ற பிற இடங்களில் இருந்தும் இரத்த மாதிரி எடுப்பதற்கான வசதிகளைக் கொண்டுள்ளன.

சோதனை நேரம்: இரத்தக் குளுக்கோசைக் கணக்கிட்டு அறியத்தருவதற்கான நேரமும் மானிக்கு மானி வேறுபடுகின்றது. இந்நேரம் 3 முதல் 60 செக்கன்கள் வரை இருக்கலாம்.

அலகு: குளுக்கோசு மானிகள் இரத்தக் குளுக்கோசின் அளவை மில்லிகிராம்/டெசிலீட்டர் (மிகி/டெலீ-mg/dl) அல்லது மில்லிமோல்/லீட்டர் (மிமோல்/லீ-mmol/l) அலகில் தருகின்றன. அமெரிக்கா, பிரான்சு, சப்பான், இந்தியா போன்ற நாடுகளில் மிகி/டெலீ அலகையே விரும்புகின்றனர். இங்கிலாந்து, கனடா, ஆசுத்திரேலியா போன்ற நாடுகளில் மிமோல்/லீ அலகே பயன்பாட்டில் உள்ளது. செருமனியில் இரண்டு அலகுகளுமே பயன்பாட்டில் உள்ளன. சில மானிகள் ஏதாவது ஒரு அலகில் மட்டுமே குளுக்கோசுச் செறிவைத் தரக்கூடியதாக உள்ளன. வேறு சிலவற்றில் விரும்பிய அலகைத் தெரிவு செய்யக்கூடிய வசதி உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளுக்கோசு_மானி&oldid=2918234" இலிருந்து மீள்விக்கப்பட்டது