குளத்தங்கரை அரசமரம் (சிறுகதை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.[1] ஆனால் இது ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய 'கடேர் கதா' என்ற சிறுகதையின் தழுவல் என்பதும் ஆதாரங்களுடன் சொல்லப்படுகிறது.

குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்ற வெளிப்படையான பிரச்சாரக் கருத்துடன் இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின் பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் ......ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.

காலம்

குளத்தங்கரை அரசமரம் என்ற 'ஒரு சிறிய கதை' முதலில் ஸூ.பாக்யலக்ஷ்மி அம்மாள் என்பவர் பெயரில், 1915 ஆம் ஆண்டு ' விவேக போதினி', செப்டம்பர், அக்டோபர் மாத இதழ்களில் இரு பகுதிகளாக (ஒரு சிறிய கதை) என அடைப்புக் குறிகளுடன் THE PEEPUL TREE NEAR THE TANK

( A SHORT STORY) என்ற துணைத் தலைப்புகளுடன் வெளியானது

பின்னர் இக்கதையையும் சேர்த்து இவை "சந்திரகுப்தன் சரித்திராசிரியர் வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டுள்ளன" என 'மங்கையர்க்கரசியின் காதல் முதலிய சிறுகதைகள்' என்ற தலைப்பில், ஐந்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பாகப் புதுச்சேரி கம்ப நிலையப் பிரசுரம் ௪ (4), விலை அணா க0 (10) குறிப்பிட்டு வெளியானது. குளத்தங்கரை அரசமரம் கதை இங்கு குறிப்பிட்ட தொகுப்பில் கடைசிக் கதையாக ( 5 ஆவது கதையாக) வைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுப்பு 1917 ல் வெளிவந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.ஆனால், உறுதியான, ஏற்றுக்கொள்ளத் தக்க ஆதாரங்களில்லை. ஆனால் இவை சந்திரகுப்தன் சரித்திராசிரியர் வெ.ஸூப்ரஹ்மண்ய ஐயரால் எழுதப்பட்டவை என்ற முதற்பக்க ஆசிரியர் விவரக்குறிப்பின் அடைப்படையில் பார்த்தால் உறுதியாக 1918 க்குப் பின்னரே தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் சந்திரகுப்தன் சரித்திரம் வெளியான ஆண்டு உறுதியாக 1918.

கம்ப நிலையப் பிரசுரம் ௪ , ஐந்து கதைகளுடன் பிரசுரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடாமல்தான் வெளியாகியுள்ளது. பின்னர், வ.வே.சு ஐயர் மறைவுக்குப் பின், 1927 ல், மூன்று கதைகள் சேர்த்து எட்டுக்கதைகள் கொண்ட தொகுப்பாக மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது.

கால அடிப்படையில், வ.வே.சு ஐயருக்கு வெகுமுன்னரே பாரதியார் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இன்னும் பல கதைகளின் தொகுப்புகளும் உள்ளன என்று ஆய்வாளர்கள் கண்டுரைத்துள்ளார்கள். அத்தகைய தொகுப்புகளைப் -புதிய வகையான-சிறுகதைத் தொகுப்புகள் எனக் கருத முடியாது என்ற விவாதமும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]