குலதெய்வம் ராஜகோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்படும் வி. ஆர். ராஜகோபால் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை, மற்றும் குணசித்திர நடிகர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் தமிழ்நாடு மாநிலம், இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டராமாணிக்கம் என்ற ஊரில் பிறந்தார்.[1] சிறு வயதிலேயே நாடகங்களில் ஈடுபாடு கொண்ட இவர் தெருக்கூத்து நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 12வது அகவையில் பள்ளத்தூர் அருணாச்சலம் செட்டியாரின் பாய்ஸ் நாடக நிருவனத்தில் சேர்ந்தார். பின்னர் மதுரையில் அன்று பிரபலமாக இருந்த கலைமணி நாடகக் குழுவில் சேர்ந்து நடித்தார். என். எஸ். கிருஷ்ணனின் நாடகக் குழுவில் சேர்ந்து நகைச்சுவை நடிகராக நடித்தார்.[1]

திரைப்படங்களில்[தொகு]

1954 ஆம் ஆண்டில் வெளிவந்த நல்லகாலம் திரைப்படம் ராஜகோபால் நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். தொடர்ந்து எம். கே. தியாகராஜ பாகவதர் இயக்கி நடித்த புது வாழ்வு திரைப்படத்தில் நடித்தார்.[1] 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த ஏவிஎம்மின் குலதெய்வம் திரைப்படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக ராஜகோபால் நடித்தார். இப்படத்தில் இவரின் சிறப்பு நடிப்புக்காக "குலதெய்வம்" என்ற பெயரும் இவரது பெயருடன் சேர்ந்து கொண்டது. அன்றில் இருந்து இவர் குலதெய்வம் ராஜகோபால் என அழைக்கப்பட்டார்.[2]

நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த இவர், சொந்தப் படம் தயாரிக்க பணம் முதலீடு செய்து பெரும் இழப்பை சந்தித்தார். பல ஆண்டுகள் நடிப்புத் துறையில் இருந்து விலகி இருந்தார். பின்னர் கே. பாக்கியராஜின் எங்க சின்ன ராசா, பவுனு பவுனுதான், ஆராரோ ஆரிரரோ ஆகிய படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்[தொகு]

 1. சித்தி
 2. சபாஷ் மீனா
 3. மன்னாதி மன்னன்
 4. எல்லைக்கோடு
 5. நத்தையில் முத்து
 6. மகாலட்சுமி
 7. இல்லறமே நல்லறம்
 8. நான் வளர்த்த தங்கை
 9. அபலை அஞ்சுகம்
 10. எங்கள் குலதேவி
 11. கல்யாணிக்கு கல்யாணம்
 12. தங்கப்பதுமை
 13. தலை கொடுத்தான் தம்பி
 14. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்
 15. எங்கள் செல்வி
 16. குறவஞ்சி
 17. குழந்தைகள் கண்ட குடியரசு
 18. யானைப்பாகன்

வில்லுப்பாட்டுக் கலைஞராக[தொகு]

ராஜகோபால் சிறந்த வில்லுப்பாட்டுக் கலைஞராகவும் புகழ் பெற்றிருந்தார். ஐயப்பன் சரித்திரம், முருகன் பெருமை, ஐயனார் கதை, நல்லதங்காள், ஆணு அண்ணன்மார் அருக்காணி தங்கை போன்ற பல வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை மேடையேற்றினார். என். எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும் வில்லுப்பாட்டாகத் தயாரித்து வழங்கினார்.[1]

மேற்கோள்கள்[தொகு]