உள்ளடக்கத்துக்குச் செல்

மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குலக்கல்வித் திட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1953-இல் சென்னை மாநில முதல்வர் ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றோரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இக்கல்விமுறை ஜாதி அமைப்பை பலப்படுத்தும் குலக் கல்வித் திட்டமென திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் எதிர்த்தன. ராஜாஜியின் காங்கிரசு கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பு உருவானதால் அவர் பதவி விலகினார்; திட்டமும் கைவிடப்பட்டது.

பின்புலம்

[தொகு]

1951 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாநிலத்தில் 21 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[1] 1950-51 நிதியாண்டில் சென்னை மாநில அரசு தொடக்கக் கல்விக்காக 6.87 கோடி ரூபாய்கள் செலவு செய்தது. இது அரசின் மொத்த வருவாயில் 11.5 விழுக்காடு. பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளிடையே பள்ளியில் சேர்த்தல் விகிதம் 47.8 ஆக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகள் (Directive principles) இந்திய அரசை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கல்வியளிக்கும்படி பணிக்கின்றன. இதற்கிணங்க சென்னை மாநில அரசின் கல்வித் துறை பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்க 1950-இல் ஒரு பத்தாண்டுத் திட்டத்தைத் தீட்டியது. இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஐந்து லட்சம் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; அதற்காக ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் 1950-51 நிதியாண்டில் இதற்காக ஐந்து லட்சம் ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு மாணவருக்கு கல்வியளிக்க ஆண்டொன்றும் ரூ. 22.80 செலவானது. இதில் அரசு ரூ.16.30-ஐ மட்டுமே அளித்து வந்தது. இவ்வாறான பற்றாக்குறை செயல்பாடுகளால் பள்ளியில் விலகும் மாணவர் விகிதம் கூடுதலாக இருந்தது. 1946-47 கல்வியாண்டில் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த 12,22,775 மாணவர்களில் 4,61,686 (37%) பேர் மட்டுமே 1950-51 கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பில் இருந்தனர். இத்தகைய கல்விச்சூழல் நிலவிய போது தான் ராஜாஜியின் காங்கிரசு அரசு சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது (ஏப்ரல் 10, 1952).[2]

முந்தைய கல்விச் சீர்திருத்த முயற்சிகள்

[தொகு]

1939ல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த போது இது போன்ற ஒரு சீர்திருத்த முயற்சியினை மேற்கொண்டார். அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவிகளும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் பள்ளி வந்தால் போதும், மற்ற பொழுதுகளை பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்கலாம். 1949-50 காலகட்டத்தில் பி. எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்த போது பத்து வட்டங்களில் சோதனை அடிப்படையில் பள்ளிகளில் நேர சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு பிற பகுதிகளிலும் விருப்பமிருந்தால் தேர்ந்தெடுக்கலாம் என்ற அடிப்படையில் விரிவாக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்திய பள்ளிகள் இரு நேரசுழற்சிகளாக செயல்பட்டன. இரு வேளையும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மாதம் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1951-இல் மாநிலத்தில் இருந்த 38,687 தொடக்கப்பள்ளிகளில் 155 மட்டுமே இம்முறையை செயல்படுத்தி வந்தன.[2]

சீர்திருத்தத்திற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள்

[தொகு]
  • ஆறு முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கல்வி அளிப்பதற்கு மிக அதிக அளவில் நிதி வேண்டும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தலில் உள்ள சிக்கல்களைத் தவிர கட்டமைப்பு வசதிகளும் தேவைப்பட்டன. தொடக்கப்பள்ளிகளில் பாதிக்கு மேல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. இச்சீர்திருத்த திட்டத்தின் மூலம் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படாமல் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.[3]
  • சென்னை மாநிலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. சராசரியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஐந்து வகுப்புகளுக்கு மூன்றுக்குக் குறைவான ஆசிரியர்களே இருந்தனர். 4,108 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வந்தன. 60 % பள்ளிகளில் ஐந்து வகுப்புகளுக்கு நான்குக்கு குறைவான ஆசிரியர்களே இருந்தனர்.[2][3]
  • இத்தகைய ஆசிரியர்-மாணவர் விகிதத்தால் ஆசிரியர்களின் வேலைப்பளு அளவுக்கதிகமானது. மாணவர்கள் நெடுநேரம் பள்ளியில் இருக்கும் நிலை உருவானது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்தது. புதிய ஆசிரியர்களை பணியமர்த்தாமல் இதனை சமாளிக்க அரசு விரும்பியது.[2]
  • ராஜாஜி, அப்போது நடைமுறையில் இருந்த துவக்கக் கல்வித் திட்டத்தை விட மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வித் திட்டத்தை அதிகம் விரும்பினார்.[4] காந்தியின் அடிப்படைக் கல்வித் திட்டம், வாழ்க்கை அனுபவத்தின் மூலம் கற்றலுக்கும் சுயசார்புடன் இயங்குவதற்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவும் வலியுறுத்தியது.[2]

திட்டம்

[தொகு]

1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. பள்ளி வேலை நேரம் இரு நேர முறைகளாகப் (shift) பிரிக்கப்படும். ஒவ்வொரு நேர முறையும் மூன்று மணி நேரம் கொண்டது.
  2. மாணவர்கள் ஒரு நேரமுறை மட்டுமே பள்ளியில் ஆசிரியர்களிடம் பாடங்கள் கற்பர்.
  3. இரண்டாவது நேரமுறையில் மாணவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து அவர்களது தொழிலைக் கற்பர்; மாணவிகள் தங்கள் தாயார்களிடமிருந்து சமையல் மற்றும் வீட்டு வேலைகளைக் கற்பர்.
  4. இத்தகு தொழில்கள் (கைவினை மற்றும் வேளாண்மை) செய்யும் பெற்றோர்கள் இல்லாத மாணவர்கள், இரண்டாம் நேர முறையை வேறொரு தொழில் செய்பவருடன் கழிக்கலாம்.
  5. இரண்டாம் நேர முறையில் தொழில்களைக் கற்பது தவிர மாணவர்கள் தமது ஊர்களில் பொதுப்பணிகளில் – கட்டிடங்கள் கட்டுதல், தூய்மைப்படுத்தும் வேலைகள், சாலைகளைச் செப்பனிடுதல் – ஈடுபடுத்தப்படுவர்
  6. இரண்டாம் நேரமுறைக்கு வருகைப்பதிவேதும் கிடையாது.

இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தினால் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் கூடினாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை.[2][3][4][5]

எதிர்ப்பு

[தொகு]

திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலமெங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை எதிர்த்தன. திராவிட இயக்கத்தினர் இத்திட்டம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமெனக் குற்றஞ்சாட்டினர். திட்டத்தின் எதிர்ப்பில் முக்கிய பங்காற்றிய பேரறிஞர் அண்ணா அதன் மேல் வைத்த குற்றச்சாட்டுகள்:[6][7][8][8][9]

  1. மாணவர்கள் தத்தமது குலங்களின் தொழிலைக் கற்பது மூலம், ஜாதி முறை நிரந்தரமாகும். ஏற்கனவே கல்வியில் முன்னணியில் உள்ள பிராமணர்களின் ஆதிக்கம் மேலும் பலப்படும்
  2. ஆசிரியர்களுக்கு வேலை நேரமும், பளுவும் கூடினாலும் அதற்கேற்றவாறு ஊதியம் கூடவில்லை
  3. ராஜகோபாலாச்சாரி சட்டமன்றத்தையும், அமைச்சரவையையும் கலந்தோசிக்காமல் தன்னிச்சையாக அத்திட்டத்தை கொண்டு வந்தார்.
  4. கிராமப்புறப் பள்ளிகளில் மட்டும் அறிமுகப்படுத்த அத்திட்டம் கிராமப்புற மாணவர்களின் கல்வியைப் பாழாக்கத் திட்டமிட்டு செயல்படுத்தப் பட்ட ஒன்றாகும்.

போராட்டங்களும் ஒத்திவைப்பும்

[தொகு]

1953 ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் அதற்கு எதிராக பெரியார் ராமசாமியின் தி.க வும் பேரறிஞர் அண்ணாவின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ராஜகோபாலாச்சாரி திட்டத்திற்கு ஆதரவாக வானொலியிலும், நாளிதழ்களிலும் பிரச்சாரம் செய்தார். ஜூலை மாதம் சட்டமன்றம் கூடிய போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. அண்ணாவின் அறிவுத்தலின் படி சென்னையில் இத்திட்டத்திற்கெதிராக கண்டன ஊர்வலம் நடத்திய திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம் 139-138 என்ற வாக்கு வித்தியாசத்தில் (பேரவைத் தலைவரின் வாக்குடன்) தோற்கடிக்கப்பட்டது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்தை கிடப்பில் போட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு வந்த தீர்மானம் 138-137 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் அதனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது.[5][10][11]

கைவிடப்பட்டது

[தொகு]

ஆகஸ்ட் 1953-இல் பருலேக்கர் குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்குள் பொதுமக்களுள் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பியிருந்தனர். ஆளும் காங்கிரசு உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால் ராஜகோபாலாச்சாரி திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்க கட்சிக்காரர்கள் தயாராகினர். இதனை அறிந்த ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954-இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பாளர். மே 18 1954-இல் கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியம், பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது.[12][13][14][15][16][17]

குறிப்புகள்

[தொகு]
  1. Yazali, P.172
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Appendix Q : Modified Scheme of Elementary Education, Madras". Archived from the original on 2011-09-27. Retrieved 2010-08-27.
  3. 3.0 3.1 3.2 "Appendix T : Modified Scheme of Elementary Education, Madras". Archived from the original on 2011-09-27. Retrieved 2010-08-27.
  4. 4.0 4.1 Bakshi, P.323
  5. 5.0 5.1 "Chapter XIV, A Review of Madras Legislative Assembly(1952-57)" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. Retrieved 2010-08-27.
  6. Vasantha Kandaswamy p.262-6
  7. Ryerson, P.89
  8. 8.0 8.1 Anna's Birth Centennial Anthology
  9. Indian Review Vol.54, P.332
  10. "Table XVII, A Review of Madras Legislative Assembly(1952-57)" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. Retrieved 2010-08-27.
  11. "Table XVI, A Review of Madras Legislative Assembly(1952-57)" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. Retrieved 2010-08-27.
  12. "Report, Director of Information and Publicity". Archived from the original on 2011-09-16. Retrieved 2010-08-27.
  13. Subramaniam, p.205
  14. Nehru Vol24, p.288
  15. "The Hindu report on 19 May 1954 : Scheme dropped". Archived from the original on 28 ஜூன் 2004. Retrieved 27 ஆகஸ்ட் 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  16. Kandaswamy, p51-52
  17. Gazette of India, p.88

மேற்கோள்கள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Rajaji, a Life by Rajohan Gandhi ( Chapter: Downfall)
  • The Rajaji Store by Rajmohan Gandhi