குற்றப்பத்திரிகை (திரைப்படம்)
| குற்றப்பத்திரிகை (திரைப்படம்) | |
|---|---|
| இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
| தயாரிப்பு | ரவி யாதவ் |
| கதை | ஆர். கே. செல்வமணி |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | ராம்கி ரகுமான் ரம்யா கிருஷ்ணன் ரோஜா |
| ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
| கலையகம் | யாதவாலயா பிலிம்ஸ் |
| வெளியீடு | 23 மார்ச் 2007 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
குற்றப்பத்திரிகை (Kuttrapathirikai) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான ஆர். கே. செல்வமணி இயக்கிய இந்திய தமிழ் திரைப்படமாகும். இந்த படத்தில் ராம்கி, ரகுமான், ரம்யா கிருஷ்ணன், ரோஜா ஆகியோர் நடித்தனர். இப்படத்தை ரவி யாதவ் யாதவாலய பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் தயாரித்தார். படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் இராஜீவ் காந்தி படுகொலையையும், ஈழப் போரையும் பின்னணியாகக் கொண்டது. இந்த படத்தின் தயாரிப்பு 1991 இல் தொடங்கி 1992 இல் நிறைவடைந்தது. ஆனால் கடுமையான அரசியல் செய்திகளைக் கொண்ட இத்தகைய படத்தை தணிக்கை வாரியம் அனுமதி மறுத்ததால் பதினைந்து ஆண்டுகள் படம் முடங்கிப் போனது; படம் இறுதியாக 2007 மார்ச்சில் பல வெட்டுக்களுடன் வெளியிடப்பட்டது.[1]
கதைக்களம்
[தொகு]ஒரு மூடுந்து மற்றும் அம்பாசிடர் மகிழுந்தில் வந்த ஒரு குழுவினர் ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் நுழைந்து, காவலாளியை நோக்கி சுடத் தொடங்கி, ஈ.பு.வி.மு தலைவர் பத்மநாபா உட்பட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களைக் கொல்லத் தொடங்குகின்றனர். பின்னர் அவர்கள் சோதனைச் சாவடியில் இருந்த காவலர்களைக் கொன்றுவிட்டு செல்கின்றனர்.
ராமகிருஷ்ணன் ( ராம்கி ), அருண் ( ரகுமான் ) ஆகியோரால் அவர்கள் பிடிபடுகின்றனர். துரத்தல் களோபரத்தில் அதில் சிக்கிய திவ்யாவை ( ரம்யா கிருஷ்ணன் ) ராமகிருஷ்ணன் காப்பாற்றுகிறார். ராமகிருஷ்ணன் தலைவர் சிவராசனை ( மன்சூர் அலி கான் ) விசாரிக்கும்போது, அவர் அமைதியாகவே இருக்கிறார். பிடிபடாத மற்றொரு புலி உறுப்பினர் ( இராஜேஷ் ) சுபா சுந்தரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன் கூட்டாளிகளை விடுவிக்கிறார். ராமகிருஷ்ணன் அவர்களை விடுவித்து, அவர்கள் இலங்கைக்குச் செல்கிறனர்.
திவ்யா தனது மகிழுந்தை வாகனங்கள் நிறுத்த தடைசெய்த பகுதியில் நிறுத்திவிட்டு மகிழுந்தை எடுக்க மறுக்கிறாள். போக்குவரத்து காவலர் வந்து கேட்கும்போது, அவள் ராமகிருஷ்ணனின் வணிக அறிமுக அட்டையைக் காட்டுகிறாள். அருண் காரை பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறான். மேலும் திவ்யா தனக்குக் காட்டிய அறிமுக அட்டையையும் கிழித்து எறிகிறான்.
திவ்யா ராமகிருஷ்ணனிடம் புகார் அளித்து, மகிழுந்தை வாங்கித் தருமாறும், அருணை மன்னிப்பு கேட்குமாறும் செய்யக் கேட்கிறாள். ராமகிருஷ்ணன் அருணை அவளின் மகிழுந்தைத் திருப்பித் தரவைக்கிறார். பின்னர் ராமகிருஷ்ணனும் திவ்யாவும் திருமணம் செய்து கொள்கின்றனர்.
ஒரு நாள் நடக்கும் அதிகாரிகள் கூட்டத்தில், டிஜிபி ( எம். என். நம்பியார் ) மாநில அரசு கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும், அப்போது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
சிவராசன், தாணு மற்றும் 12 பேர் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திலிருந்து கோடியக்கரைக்கு ஒரு படகில் வருகின்றனர். அவர்களை கடத்தல்காரர் சண்முகம் வரவேற்கிறார். அவர் அவர்களுக்கு தங்குமிடத்தை அளிக்கிறார். சிவராசன் தங்கக் கட்டிகள் கொண்ட பெட்டியத் தந்து தன் பணிகளுக்கு தேவைப்படும் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார். ஒளிப்படக் கலைஞர் ஒருவர் வேண்டும் என்பதற்காக சிவராசன் சுபா சுந்தரத்தின் வீட்டிற்குச் செல்கிறார். பின்னர் சுபாசுந்தரம் ஹரிபாபுவை சிவராசனுக்கு அறிமுகப்படுத்துகிறார். சிவராசன் ஹரிபாபுவை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களையும் ஒளிப்படம் எடுக்குமாறு கூறுகிறார். அவர் அதன் தேவை குறித்து கேட்கும்போது, உலகம் முழுவதும் வெளியிடப்படும் ஒரு புத்தகத்திற்கு படங்கள் தேவைப்படுகின்றன என்று சிவராசன் கூறுகிறார். இராஜீவ் காந்தி ( அனுபம் கெர் ) தேர்தல் பொதுக்கூட்டத்துக்காக திருபெரும்புதூர் வருவார் என்றும், அவருக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருப்பதால் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்றும் டிஜிபி தெரிவிக்கிறார். சிவராசனும் மற்ற விடுதலைப் புலி உறுப்பினர்களும் தேர்தல் பரப்புரையின் போது ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டமிடுகிறனர். பின்னர் அவர்கள் படுகொலைக்கான முன் பயிற்சியை நடத்தி இடைக்கச்சு வெடிகுண்டைத் தயாரிக்கின்றனர்.
ராஜீவ் காந்தி திருபெரும்புதூர் வந்து, ராமஜென்மபூமி மற்றும் இலங்கை பிரச்சினை குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கருத்துகளைத் தெரிவிக்கிறார். பின்னர் அவர் இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பொதுக்கூட்ட இடத்திற்கு வருகிறார். ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்க தாணு ரகசியமாக உள்ளே வருகிறார். அருண் அவளை அனுமதிக்கவில்லை. ராஜீவ் காந்தி வந்தவுடன், ஒரு பெண் காவலர் தாணுவைத் தடுக்கும்போது, தாணுவை தனக்கு மாலை அணிவிக்க அனுமதிக்கிறார். அவள் வெடிகுண்டை இயக்குகிறாள். குண்டுவெடிப்புக்குப் பிறகு குழப்பம் ஏற்படுகிறது.
ஹரிபாபுவின் சக ஊழியர் ஒருவர், குண்டுவெடிப்பால் ஹரி இறந்துவிட்டதாக சுபா சுந்தரத்திற்கு தொலைபேசி செய்கிறார். ஹரியின் ஒளிப்படமியை அவசியம் எடுத்து வருமாறு சுபா அவரிடம் கூறுகிறார்.
இராஜீவ் காந்தியின் மரணத்தால் சென்னை நகரில் கலவரம் வெடிக்கிறது. பதற்றம் காரணமாக விடுதி உரிமையாளர் சிவராசனையும் மற்றும் பிறரையும் வெளியேறச் சொல்கிறார். அவர்கள் அனைவரும் ஒரு மாருதி வேனில் புறப்படுகின்றனர். கலவரக்காரர்கள் திமுக கொடிக்கம்பத்தை வெட்ட முற்படுகின்றனர். ஆனால் ஒரு திமுக தொண்டர் ( சந்திரசேகர் ) அவர்களுடன் சண்டையிடுகிறார். ராமகிருஷ்ணன் தலையிட, தொண்டர் தாங்கள் பலவீனமானவர்கள் அல்ல, தங்கள் கட்சியை ஒரு குடும்பமாக கருதுவதால் தங்கள் கட்சி உத்தரவுகளைக் கடைபிடிக்கிதோம் என்று கவிதையைச் சொல்கிறார். இந்த துரதிர்ஷ்டவசமான நேரத்தில், மக்களைக் கட்சிக்கு எதிராக தூண்டிவிட்டு மனச்சோர்வடையச் செய்யலாம், ஆனால் தொண்டர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது என்று மு. கருணாநிதியின் குரல் ஒலிக்கிறது.
அதிகாரிகள் இடைநீக்கம் தொடர்பாக அருண் டிஜிபியுடன் பேச வருகிறார். காங்கிரஸ் தலைவர் ஒருவர் தன் கட்சியினரை விடுவிக்குமாறு டிஜிபியிடம் கேட்டுக்கொள்கிறார். போக்கிரிகளும், குண்டர்களும் இந்த குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவர். இச்சமயத்தில் கட்சி உறுப்பினர்களுக்கும் போக்கிரிகளுக்கும் இடையில் வேறுபாட்டைக் காண முடியாது என்று டிஜிபி கூறுகிறார். அதிகாரிகள் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்று அருண் கேட்கிறார். காங்கிரஸ் தலைவர் அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார். குண்டு வெடித்த இடத்திலிருந்து போலீசார் ஓடிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கூறும்போது அருண் பொறுமை இழக்கிறார். கட்சிக்காரர்கள் யாரும் இல்லாத இடத்தில், போலீசார் மட்டுமே இருந்தனர், பொதுமக்கள் இறந்ததாக அருண் கூறுகிறார். குண்டுவெடிப்பு பற்றி கட்சிக்காரர்களுக்கு முன்பே தெரியுமா என்று அருண் கேட்க, அவர் உடனடியாக வெளியேறுகிறார்.
இந்த வழக்கை விசாரிக்க புது தில்லியிலிருந்து கார்த்திக்கேயன் ( விஜயகுமார் ) வருகிறார். தங்கள் பணியின் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக சிவராசன் கூறுகிறார். மேலும் தமிழ்நாடு கடற்கரை இந்தியக் கடற்படையின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது, எனவே கடல் வழியாக தப்பிக்க முடியாது என்று கூறுகிறார். மற்றொரு விடுதலைப் புலிகளின் தளபதி (ராஜேஷ்), கார்த்திக்கேயன் ஒரு திறமையான அதிகாரி என்றும், தங்களின் பழைய தொடர்புகளை பயன்படுத்தக்கூடாது என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை அவர்கள் தலைமறைவாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
கார்த்திகேயன் சென்னை வருகிறார். வழக்கைத் தீர்ப்பதற்கான ஒரே ஒரு வழியை மட்டுமே நம்பக்கூடாது என்று அதிகாரிகளிடம் கூறுகிறார். பத்திரிகைகளில் வதந்திகளைப் பரப்புவதன் மூலம் அவர்களைத் திசைதிருப்ப முடியும் என்றும் அவர் கூறுகிறார். அவர் படுகொலை நடந்த இடத்திற்கும், பின்னர் தலைமையகத்திற்கும் சென்று, ஹரிபாபுவின் ஒளிப்படக் கருவியிலுள்ள படச் சுருளிளிருந்து படங்களை எடுக்குமாறு ராமகிருஷ்ணனிடம் கூறுகிறார். திருத்துறைப்பூண்டியில், சங்கர் பிடிபடுகிறார், அவரது நாட்குறிப்பின் அடிப்படையில், அதிகாரிகள் நளினியின் தாய், சகோதரர், இறுதியாக நளினி, முருகன் ஆகியோரைக் கைது செய்கின்றனர். அவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில், சுபா சுந்தரம், சண்முகம் ஆகியோரைக் கைது செய்கின்றனர். மேலும் பாதுகாப்பான ஒரு வீடு மற்றும் கடற்கரைகளில் ஒரு பெரிய ஆயுதக் கிடங்கு ஆகியவற்றைக் கண்டுபிடிக்கின்றனர்.
இதற்கிடையில், சிவராசன் உள்ளிட்டவர்கள் மைசூருக்கு நகர்ந்து அறிவுறுத்தல்களின்படி தலைமறைவாக உள்ளனர். சிவராசன் ஒரு பணி மட்டுமே முடிந்ததாகக் கூறுகிறார். மைசூருக்கு அருகிலுள்ள கொனகுண்டேவில் சிவராசன் மற்றும் பலர் பதுங்கியிருப்பதாக புலனாய்வுக் குழுவிற்கு தகவல் கிடைக்கிறது. அவர்கள் அந்த இடத்தைச் சுற்றிவளைக்கின்றனர். ஒரு மோதல் நடக்கிறது. அனைத்து ஆதாரங்களையும் அழித்து, சிவராசனும் சுபாவும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஜெயலலிதாவின் வெற்றி கொண்டாட்டத்தில், புலிகள் அவரைக் கொல்லத் திட்டமிடுகின்றனர். ஆனால் ராமகிருஷ்ணன் அவரை அடையாளம் கண்டு சுட்டுக் கொல்கிறார். மற்றவர்களைப் பற்றி அறிய முயற்சிக்கும்போது, அதிகாரி வேடமணிந்த ஒரு போராளி அந்தப் போராளியைக் கொல்கிறார். ராமகிருஷ்ணன் பின்னர் அவரைத் துரத்திச் சென்று கொல்கிறார். பின்னர் ராமகிருஷ்ணனின் மனைவியைக் கொன்றுவிடுவதாக தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர். அருண் ராமகிருஷ்ணனின் வீட்டிற்குச் சென்று, அவர் பலத்த காயமடைந்த நிலையிலும், அந்த தீவிரவாதியைக் கொகிறார். மற்றொரு விடுதலைப் புலிகளின் தளபதி (ராஜேஷ்) முதலமைச்சரை தனது போலீஸ் ஜீப்பில் பொருத்தப்பட்ட வெடிகுண்டு மூலம் கொல்லத் திட்டமிட்டு, முதல்வரின் காரில் மோதுகிறார். ராமகிருஷ்ணன் தனது காரை மோதி கடலில் குதிக்கிறார். இறுதியில், அருண் மற்றும் கீதா யுனைடெட், ராமகிருஷ்ணன் மற்றும் திவ்யாவுக்கு குழந்தைகள் பிறக்கின்றன, நால்வரும் கடற்கரையில் காணப்படுகின்றனர். துப்பாக்கியை வைத்திருக்கும் ஒரு போராளி இறுதிக் காட்சியில் "இனி வன்முறை இல்லை" என்ற செய்தியுடன் காட்டப்படுகிறார்.
நடிகர்கள்
[தொகு]- ஏ.சி.பி ராமகிருஷ்ணன் ஐபிஎஸ் ஆக ராம்கி
- அருண் ஐபிஎஸ் ஆக ரகுமான்
- திவ்வயாவாக ரம்யா கிருஷ்ணன்
- கீதாவாக ரோஜா
- ரேகாவாக மோகினி
- கார்த்திகேயனாக விஜயகுமார்
- ஹரிபாபுவாக லிவிங்ஸ்டன்
- இராஜீவ் காந்தியாக அனுபம் கெர்
- டி.ஜி.பி. ஆக மா. நா. நம்பியார்
- சிவராசனாக மன்சூர் அலி கான்
- விடுதலைப் புலி தலைவராக இராஜேஷ்
தயாரிப்பு
[தொகு]இந்தப் படத்திற்கான தயாரிப்புப் பணிகள் 1991 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் உள்ளடக்கம் இராஜீவ் காந்தி படுகொலை மற்றும் ஈழப் போர் பின்னணியைக் கொண்டதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.[2] இந்தப் படத்தின் பணிகள் 1991 சூலையில் தொடங்கப்பட்டு 1992 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது. 1992 அக்டோபரில் வெளியிடத் திட்டமிடப்பட்டது. [3] [4]
2006 திசம்பரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பின் வழியாக, சில வெட்டுக்களுக்குப் பிறகு 'ஏ' (பெரியவர்களுக்கு மட்டும்) சான்றிதழுடன் படத்தைத் திரையிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்து. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் நீதிமன்றம் வாரியத்திற்கு நான்கு வாரங்களுக்குள் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது. இந்தப் படம் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் சில பிரிவுகளும் படத்தின் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா, நீதிபதி கே. சந்துரு ஆகியோர் படத்தைப் பார்த்தனர், அதில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். முந்தைய தீர்ப்பில் வெட்ட உத்தரவிட்டக் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிமன்றம் கூறியதாக ஆர். கே. செல்வமணி தெரிவித்தார். தணிக்கை வாரியம் வெட்ட விரும்பிய காட்சிகளில், புலிகளின் பயிற்சி மற்றும் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து காவல்துறை அதிகாரிகள் தப்பிச் செல்வது ஆகியவை அடங்கும்.[5]
இசை
[தொகு]இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[6] [7]
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "மாதவரா" | சுவர்ணலதா | 4:40 | |||||||
| 2. | "தாம் தானா" | மலேசியா வாசுதேவன் | 6:15 | |||||||
மொத்த நீளம்: |
10:55 | |||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Singh, Harneet (9 March 2011). "Snip-shot". இந்தியன் எக்சுபிரசு. Archived from the original on 26 January 2013. Retrieved 27 June 2012.
- ↑ "Liberation of 'Kutrapathrikai' – Selvamani interview". Cinesouth. 1 December 2006. Archived from the original on 31 January 2010. Retrieved 27 June 2012.
- ↑ "Yadavalaya Films, Represented By ... vs The Film Certification Appellate ... on 20 March, 2006". Indiankanoon.org. Archived from the original on 2 January 2014. Retrieved 27 June 2012.
- ↑ "Deepavali releases". 16 October 1992. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19921016&printsec=frontpage&hl=en.
- ↑ "Film on Rajiv Gandhi assassination wins battle against censors". Monsters and Critics. 2 December 2006. Archived from the original on 29 October 2013. Retrieved 27 June 2012.
- ↑ "Kuttrapathirikai". Gaana. Archived from the original on 17 April 2019. Retrieved 17 April 2019.
- ↑ "Periyamma - Kutrapathikai Tamil Film Audio CD". Mossymart. Archived from the original on 7 May 2023. Retrieved 9 May 2023.