ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குறைத்தல் (வேதியியல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
(எ-க): H
2
+ F
2
→ 2 HF இவ்வினையில் ஐட்ரசன்(H2) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து ஆக்சிசனேற்றம் அடைகிறது. ஃப்ளூரின்(F2) அந்த எலக்ட்ரான்களைப் பெற்று ஒடுக்கமடைகிறது.


ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள் (reduction-oxidation, சுருக்கமாக Redox) என்பது ஒரு வேதிவினை வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்ட்ரான் எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அது இந்த வகையான வேதிவினையாகும்.

ஒரு தனிமம் வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்தால், 'ஆக்சிசனேற்றம் அடைகிறது', எலக்ட்ரான்களைப் பெற்றால் 'ஒடுக்கமடைகிறது'.

இரும்பு துருப்பிடித்தல் ஒரு ஒடுக்க-ஏற்ற வேதிவினை ஆகும்.

பெயர்க் காரணம்[தொகு]

ஆக்சிசனேற்றம்[தொகு]

ஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சைடாக மாறுவதே, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கார்பன்(C) ஆக்சிசனுடன்(O2) வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தரும் வினையில் கார்பன், ஆக்சிசனேற்றம் அடைந்து எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது. இது ஒரு ஆக்சிசனேற்ற வினையாகும்.

(எ-க): C + O2 -> CO2

பின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவது, ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன.

ஒடுக்கம்[தொகு]

'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சைடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரித்தெடுப்பர். எடுத்துக்காட்டாக சிங்க்ஆக்சைடு(ZnO), கல்கரியுடன்(C) 1673K வெப்பநிலையில் வினைபுரிந்து 'சிங்க்' உலோகமாக ஒடுக்கமடையும் கீழ்கண்ட வினையைக் கருதலாம்.[1].
(எ.கா): ZnO + C -> Zn + CO

  • இந்நிகழ்வில், சிங்க்ஆக்சைடிலிருந்து, ஆக்சிசன் பிரிந்து செல்வதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், சேர்மத்திலிருந்து பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.
  • பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளுமே, ஒடுக்க வினைகள் என்றழைக்கப்பட்டன.


சோடியம் (Na) ஃப்ளூரினுடன் (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு அயனிப் பிணைப்பு வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழந்து, ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெற்று, ஒடுக்கம் அடைகிறது.

ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்[தொகு]

தற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால், மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே தற்காலத்தில் ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டுமே ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில், சோடியம்(Na) ஆக்சிசனேற்றமும், ஃப்ளூரின்(F) ஒடுக்கமும் அடைகின்றன. (எ.கா): Na + F -> Na+F-

ஆக்சிசனேற்றி மற்றும் ஒடுக்கிகள்[தொகு]

பிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் ஒடுக்கி (reductant) என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை ஆக்சிசனேற்றி என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில் சோடியம்(Na) ஒடுக்கியாக செயல்பட்டு, ஃப்ளூரினை(F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் ஃப்ளூரின்(F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(Na) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]