குறு வஞ்சி
Appearance
தமிழ் இலக்கணத்தில் குறு வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். வலிமையான படையுடன் வரும் பகையரசனை எதிர்க்க முடியாது அவனுக்குத் திறை கொடுத்துப் போரைத் தவிர்த்தலைப் பொருளாகக் கொண்டது இத்துறை. போர்ச் செயல் முற்றுப்பெறாது குறைவு பட்டதால் இதற்குக் "குறு வஞ்சி" எனும் பெயர் ஏற்பட்டது. தொல்காப்பியத்தில் இது வஞ்சித் திணையின் ஒரு துறையாகக் குறிப்பிடப்படவில்லை. எனினும், பிற்காலத்தைச் சேர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை இதையும் ஒரு துறையாகச் சேர்த்துக்கொண்டது.
இதனை விளக்க, சினத்தோடு போருக்கு வந்த வலிமை மிக்க பகை மன்னனுக்குத் திறைப்பொருள் கொடுத்துத் தன் நாட்டுக் குடி மக்களைக் காப்பது [1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- மடுத்துஎழுந்த மறவேந்தர்க்குக்
- கொடுத்தளித்துக் குடிஓம்பின்று
எடுத்துக்காட்டு
[தொகு]- தாள்தாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான்
- வாள்தானை வெள்ளம் வர,அஞ்சி - மீட்டான்
- மலையா மறமன்னன் மால்வரையே போலும்
- கொலை யானைப் பாய்மாக் கொடுத்து
- - புறப்பொருள் வெண்பாமாலை 49.
குறிப்பு
[தொகு]- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 84
உசாத்துணைகள்
[தொகு]- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.