குறும்பூழ்ச்சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறும்பூழ்

குறும்பூழ் என்பது காடைப் பறவை. இதனை வீடுகளில் வளர்த்து ஒன்றோடொன்று சண்டையிட்டுக்கொள்ளும்படி மோதவிட்டு வேடிக்கைப் பார்ப்பது சங்ககாலப் பழக்கவழக்கங்களில் ஒன்று. இதனை ஒரு வேடிக்கை விளையாட்டு எனலாம்.

பரத்தையிடம் சென்றுவந்தான் என்று தலைவி தலைவனிடம் ஊடுகிறாள். [1] இல்லை குறும்பூழ்ப்போர் பார்த்துவிட்டு வந்தேன். வேறொன்றும் அறியேன் என்கிறான் தலைவன்.

நீ பார்த்து வந்த குறும்பூழ்ப்போரை அறிவேன் அது இப்படிப்பட்டது என்று என்று தலைவி கூறித் தலைவன் கூறியதைப் பொய் என்கிறாள். அப்போது குறும்பூழ்ப் பறவைக் காலோடு கால் கோத்துக்கொண்டு போரிட்டுக்கொள்ளும் என்பதைக் குறிப்பிடுகிறாள். [2] புறப்பொருள் வெண்பாமாலையில் வென்றிப் பெருந்திணை (ஒழிபு) பகுதியில் பாடாண் திணையிலும் வாகைத்திணையிலும் கூறப்படாதத் துறைகளாகக் கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் முதலாக பிடிவென்றி ஈறாகப் பதினெட்டுத் துறைகளை ஐயனாரிதனார் குறிப்பிடுகிறார். இவற்றுள் பூழ் வென்றியும் ஒரு துறையாகும். [3] குறும்பூழாடிகள் மந்திர மொழிகளினைச் சொல்லியப் பின்னர் சண்டையிடும் போது குறும்பூழ் வெற்றிப் பெறும். [4]மேலும் சீவக சிந்தாமணியில் [5] என்றும், [6] இவ்வாறு காடை என்கிற குறும்பூழ் பறவைப் பற்றிய குறிப்புகள் சங்க காலம் தொடங்கி இன்று வரை நம் பண்பாட்டில் இருந்துவருகின்றன. குறிப்பாக நாட்டுப்புற பண்பாட்டில் குறும்பூழ்ப் பிடிப்பது தொழிலாக ஒரு சாராருக்கும், குலதெய்வத்தின் குறியீடாக ஒரு சாராருக்கும் என பல்வேறு குறிப்புகள் உள்ளன. மேலும் சங்க காலம் தொடங்கி குறும்பூழ் பறவையின் உருவம், இயல்புகள், குஞ்சுகளின் நிறம், கழுத்து, அடிவயிற்றிலுள்ள நிறக்குறிப்புகள், உணவாகப் பயன்படுத்தும் குறிப்பு, காடுகளிலிருந்து பிடிக்கும் குறிப்புகள், பழக்கப்படுத்தும் குறிப்புகள், சண்டைக்கு விடும் குறிப்புகள் என தமிழ் இலக்கிய வெளியில் குறும்பூழ் பற்றியக் குறிப்புகள் உள்ளன. ஆனால் இன்றைய நிலையில் தமிழ் மக்களிடம் குறும்பூழ்ப் போர் இருக்கின்றனவா என்பதை களஆய்வுத் தரவுகளைக் கொண்டுதான் உறுதி செய்ய முடியும்.

அடிக்குறிப்பு[தொகு]

 1. பிணக்கிக்கொள்கிறாள்
 2. தலைவன்
  செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த
  குறும்பூழ்ப் போர் கண்டேம்; அனைத்தல்லது, யாதும்
  அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது
  தலைவி
  குறும்பூழ்ப் போர் கண்டமைக் கேட்டேன், நீ என்றும்;
  புதுவன ஈகை வளம் பாடி, காலின்
  பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்
  இகுத்த செவி சாய்த்து, இனி இனிப் பட்டன
  ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்,
  தபுத்த புலர்வில் புண் (கலித்தொகை 95)
 3. பாடாண் பகுதியுள் தொல்காப் பியமுதற்
  கோடா மரபிற் குணனொடு நிலைஇக்
  கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
  விடுத்தல் அறியா விறல்புரி வாகையுள்
  வாணிக வென்றியும் மல்ல வென்றியும்
  நீணெறி உழவன் நிலனுமு வென்றியும்
  இகல்புரி யேறோடு கோழியும் எதிர்வன்
  தகருடன் யானை தணப்பில்வெம் பூழொடு
  சிவல்கிளி பூவை செழும்பரி தேர்யாழ்
  இவர்தரு ஆதிடை ஆடல் பாடல்
  பிடியென் கின்ற பெரும்பெயர் வென்றியோடு
  உடையன பிறவும் உளப்படத் தொகைஇ
  மெய்யினார் தமிழ் வெண்பா மாலையுள்
  ஐய னாரிதன் அமர்ந்துரைத் தனவே (புறப்பொருள் வெண்பாமாலை, வென்றிப் பெருந்திணை (ஒழிபு), நூற்பா. 18)
 4. நலம்வர நாடி நடுங்காது நூற்கள்
  புலவரால் ஆய்ந்தமைத்த பூழ்(புறப்பொருள் வெண்பாமாலை,பெருந்திணைப் படலம், நூற்பா. 46 )
 5. குரவங் கொண்ட குறும்பூழ்போற் கொழுங்கான்(சீவகசிந்தாமணி, பா. 165 )
 6. கைக்கிடா குரங்கு கோழி சிவல்கவு தாரி பற்றிப்
  பக்கமுன் போது வார்கள் பயில்மொழி பயிற்று(பெரியபுராணம், தடுத்தாட் கொண்ட படலம், பா. 187 )
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறும்பூழ்ச்சண்டை&oldid=3829405" இலிருந்து மீள்விக்கப்பட்டது