குறுங்கடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறுங்கடன் (microcredit) என்பது சிறிய தொகையை கடனாக வழங்குவதிலிருந்து உருவாகி வந்த ஒரு பொருளாதாரத் தத்துவம். முறையாக வேலையில்லாத, ஆண்டில் ஒரு சில காலங்களுக்கு மட்டும் வேலை உள்ள ஏழை மக்களை சுயதொழில் முனைவோராக உருவாக்குவது இதன் நோக்கம். இத்தகையோருக்கு வழமையான நிதி அமைப்புகளான தனியார் மற்றும் அரசு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு போதுமான கல்வி அறிவோ அடமானமாக வைக்க அசையும்/அசையா சொத்துக்களோ இருக்காது. அத்தகைய மக்களுக்கும் நிதிச்சேவையை கொண்டு சேர்க்கும் குறுங்கடன், குறுநிதிமேலாண்மையின் (microfinance) ஓர் அங்கம் ஆகும்.[1][2][3]

நிதித்துறையில் தோன்றிய ஒரு முக்கிய கண்டுபிடிப்பான குறுங்கடன் வங்கதேசத்தின் கிராமின் வங்கி வங்கியின் மூலமே முதன்முதலில் வெளிக்கொணரப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கதேசத்தில் கிரமீன் வங்கியானது குறுங்கடன் வழங்குவதில் சிறப்பான வெற்றியைப் பெற்று அந்நாட்டில் ஏழைகளை சுயதொழிலில் ஈடுபடச் செய்து வருமானத்திற்கு வழி செய்தது மட்டுமல்லாமல் வறுமையை ஒழித்து செல்வத்தை பெருக்கியும் உள்ளது. குறுங்கடன் துறையின் இந்த வெற்றி காரணமாக தொன்றுதொட்ட முறையில் இயங்கிவரும் வங்கிகளும் கூட ஏழை மக்களை தக்க முறையில் பகுப்பு செய்து அவர்களை கடன்கொடுப்பதற்கு உரியவர்களாக அடையாளம் காணத் தொடங்கியிருக்கின்றன. துவக்கத்தில் குறுங்கடன் துறையின் மீது பாராமுகமாக இருந்த மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் கூட தங்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு முக்கிய துறையாக அடையாளம் கண்டுவருகின்றன. ஐநா 2005-ஆம் ஆண்டை சர்வதேச குறுங்கடன் ஆண்டு-ஆக அறிவித்திருந்தது.

குறுங்கடனை இந்தியச் சூழலில் புரிந்துகொள்ள முயல்வோம். காய்கறிக் கடை, பெட்டிக் கடை, பால் வியாபாரம், தின்பண்டங்கள் விற்றல், கூடைமுடைவோர் போன்ற சிறு வணிகர்கள் தங்களுக்கு வேண்டிய மூலதனத்தை அமைப்பு சாரா தனி நபர்களிடமே கடனாகப் பெறுகின்றனர். அப்படிப் பெறப்படும் கடன் தொகைக்கு வட்டி மிக அதிகமாக வருடத்திற்கு 200% என்ற அளவில் கூட இருக்கும். இத்தகைய வட்டித் திட்டங்கள் மக்களிடையே கந்து வட்டி, ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என்ற பெயர்களில் புழங்குகின்றன. இவ்வாறு அதிக வட்டியை செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடிவதில்லை. அத்தகையோர்க்கு அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கொடுக்கும் குறுங்கடன்கள் வரப்பிரசாதம் ஆகும்.

வரலாறு[தொகு]

சமீபத்திய வரலாற்றைப் பார்க்கும் போது குறுங்கடன் வெவ்வேறு தருணங்கலில் புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம். ஜொனாதன் ஸ்விப்ட் (Jonathan Swift) என்பவர் 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் 18,19-ஆம் நூற்றாண்டுகளில் நிலவிவந்த ஐரியக் கடன் திட்டங்களினால் தாக்கமடைந்திருந்தார். தனிமனித சுதந்திரவாதியான லிசாண்டர் ஸ்பூனர் (Lysander Spooner) ஏழ்மையை விரட்ட ஏழைகளுக்கு தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படும் சிறுசிறு கடன்கள் எவ்வாறு பயனளிக்கின்றன என எழுதினார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொண்டுவரப்பட்ட மார்ஷல் திட்டத்தில் குறுங்கடன் திட்டமும் சேர்க்கப்பட்டது. எனினும் மிகச்சமீபமாக கிராமின் வங்கி மற்றும் சில வங்கதேச நிதி நிறுவனங்கள் மூலமாக எழுபதுகளில் துவங்கிய இதன் அவதாரமானது ஒரு முக்கிய துவக்கப் புள்ளி எனலாம். அதன் பின்னரே குறுங்கடனானது உலகளாவிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனம் பெற்றது.

கொள்கை/நெறி[தொகு]

குறுங்கடன் பொதுவான நிதி-கடன் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு தனிப்பட்ட கொள்கை/தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுவதாகும். குறுந்தொழில் செய்பவரின் தொழில் விரிவாக்கம், வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், நம்பிக்கை ஏற்படுத்துதல் மேலும் குறுந்தொழில் தொடங்க ஆரம்ப மூலதனம் வழங்கல், பிரச்சனைகளின் போது உதவுதல் ஆகியவற்றுக்கு குறுங்கடன் முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு கருவியாக செயல்படுகிறது.

பலம்[தொகு]

கடந்த சில ஆண்டுகளில் சேமிப்பு சார்ந்த குறுநிதிமேலாண்மையானது ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்த செலவில் நிதிச்சேவைகளை வழங்கும் திட்டமாக அடையாளம் பெற்றுள்ளது. உதாரணமாக, இந்தியாவில், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான NABARD, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் 500-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடன் வழங்குகிறது. ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் 20 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழுவாகும். அவற்றில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப் பெண்களே ஆவர். இவர்கள் ஒருசில ரூபாய்கள் என்ற சொற்ப அளவில் கூடத் தொடங்கி, சேமித்து ஒரு பொது நிதியை பராமரிக்கின்றனர். உறுப்பினர்கள் குடும்பத்தின் அவசரத்தேவைகள் முதற்கொண்டு பள்ளிக்கூட கட்டணம் வரையிலான தேவைகளுக்கு குழுவிடம் கடன் பெறலாம். தங்களால் குழு நிதியை நிர்வகிக்க முடிவதை நிரூபித்தால் அண்மையிலுள்ள வங்கியில் சிறுதொழில் தொடங்கவோ விவசாய வேலைகளுக்கோ குழுவின் பெயரில் கடன் பெற முடியும். குழுவால் நிர்வக்கிக்கப்படும் நிதியைப் போல நான்கு மடங்கு தொகையை வங்கிகள் கடனாக வழங்குகின்றன. குழுக்கள் வருடத்திற்கு 12% முதல் 24% வரையிலான சமச்சீர் வட்டிவிகிதத்தில் திருப்பிச் செலுத்துகின்றன. தற்போது உலக அளவில் 1.4 மில்லியன் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த சுமார் 20 மில்லியன் பெண்கள் குறுநிதிமேலாண்மை நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று வருகின்றனர். இவ்வகையில் இந்தியாவில் உள்ள இந்த சுய உதவிக்குழுக்கள்-வங்கிகள் இணைந்த அமைப்பானது உலகிலேயே பெரிய குறுநிதித் திட்டமாக விளங்குகிறது. இத்தகைய திட்டங்கள் ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பின்வரும் அமைப்புகளினால் துவக்கப்பட்டு வருகின்றன: Opportunity International, Catholic Relief Services, CARE, APMAS மற்றும் Oxfam. குறுநிதிமேலாண்மை தினசரி வருமானத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு நிலையான வருமானத்திற்கு வழிவகுப்பதால் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதால் இந்த பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது எனலாம்.

கோல்டன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஜேசன் கான்ஸ் (Jason Cons) மற்றும் காசியா பாப்ரோகி (Kasia Paprocki) குறுங்கடனின் எதிர்பாராத பக்கவிளைவுகளைக் குறித்து குறைகூறினாலும் அது ”ஏழ்மையைப் போக்க செயல்படும் ஓர் மிகப்பெரும் கருவி” எனபதை ஒப்புக்கொள்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

வாருங்கள் சமுதாயத்தில் முதலீடு செய்வோம் - சாணக்கியன்

மேற்கோள்கள்[தொகு]

  1. "What We Do - Grameen Foundation - Connecting the World's Poor to Their Potential".
  2. Jason Cons and Kasia Paprocki of the Goldin Institute, "The Limits of Microcredit—A Bangladeshi Case" பரணிடப்பட்டது 2012-01-16 at the வந்தவழி இயந்திரம், Food First Backgrounder (Institute for Food and Development Policy), Winter 2008, volume 14, number 4.
  3. Gina Neff:Microcredit, microresults The Left Business Observer #74, October 1996
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுங்கடன்&oldid=3893580" இலிருந்து மீள்விக்கப்பட்டது