குறள் வாசிப்பு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறள் வாசிப்பு
குறள் வாசிப்பு
நூலாசிரியர்முனைவர் செ.வை. சண்முகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பொருண்மைதிருக்குறள்
வெளியீட்டாளர்மணிவாசகர் பதிப்பகம் [1]
வெளியிடப்பட்ட நாள்
2002

குறள் வாசிப்பு என்னும் ஆய்வு நூலை ஆக்கியவர் முனைவர் செ.வை. சண்முகம் ஆவார். குறள் பற்றி மூன்று ஆண்டுகள் பெரும்பாலும் "வள்ளுவம்" இதழில் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இதை மணிவாசகர் பதிப்பகம் 2002இல் நூலாக வெளியிட்டது.[2][3]

நூல் தலைப்பு[தொகு]

நூல் தலைப்பையும் உள்ளடக்கத்தையும் இவ்வாறு முன்னுரையில் ஆசிரியர் விளக்குகிறார்:

இங்கு 'வாசிப்பு' ஆழ்ந்து கற்றல் (close study), வாய்விட்டுப் படித்தல் (reading) என்ற இரண்டு பொருளில் கையாளப்பட்டுள்ளது. முதல் கட்டுரை முதல் பொருளில் அமைந்துள்ளது. இரண்டாவது கட்டுரையான 'மூல பாடம்' குறள் வாசிப்பு வரலாற்றின் ஒரு பகுதியாக - குறிப்பாக நூலின் பெயர், ஆசிரியர் பெயர், நூலமைப்புப் பற்றி ஆய்வு உலகில் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதை வாசிப்பு மாறுபாடாகக் கொண்டு ஆய்கிறது. மூன்றாவது, நாலாவது, ஐந்தாவது கட்டுரைகள் மொழியியல் திறனாய்வுக் கட்டுரைகள் அவை ஆசிரியரின் வாசிப்பாகக் கருதத் தக்கவை. ஆறாவது கட்டுரை வாய்விட்டு ஒலிநயத்துடன் படித்தல் என்ற இரண்டாவது பொருளில் அமைந்துள்ளது. (பக்கம்: 5)

ஆசிரியரின் நூல் "மொழியியல் திறனாய்வு" வகையைச் சார்ந்தது.

நூலின் உள்ளடக்கம்[தொகு]

இந்த ஆய்வு நூல் 6 தலைப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அவை:

1. வாசிப்புக் கோட்பாடு
2. மூல பாடம்
3. மொழி
4. பொருள்கோள்
5. பொருண்மையியல்
6. யாப்பும் வாசிப்பும்

வாசிப்புக் கோட்பாடு பற்றி விளக்கும்போது ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்:

வாசிப்புக் கோட்பாடு மூன்று முக்கிய கேள்விகளை அடிப்படையாகக் கொண்டது:

அ. வாசகர் யார்?

ஆ. பொருள் எங்கே உள்ளது? நூலிலா? அல்லது வாசகரிடத்திலா? உரைக்கு அல்லது விளக்கத்துக்குக் காரண கர்த்தா யார்? அல்லது எந்த அடிப்படையில் உரை எழுதப்படுகிறது? அல்லது விளக்கம் கொடுக்கப்படுகிறது (Where is the locus of meaning and the authority of interpretation)

இ. வாசிப்பு என்பது எந்த வகையான அனுபவத்தைத் தரும்?

பொழுதுபோக்குக்காகப் படிப்பவர், ஒரு தேவையை மனதில் கொண்டு, படிப்பவர், அந்த நூலை ஆராய்வதற்காகப் படிப்பவர் என்று பல வகைப்படுத்தலாம். அப்படியே வாசிப்புநோக்கில் வாசகர்களைப் பொதுவாகக் கற்பித - லட்சிய வாசகர்கள் (Hypothetical - Ideal readers) உண்மையான வாசகர்கள் (Real Readers) என்று இரண்டு பெரும் பிரிவாகப் பிரிக்கிறார்கள்.

கற்பித - லட்சிய வாசகர்கள் (Hypothetical - Ideal readers) என்ற பிரிவில் விமர்சகரும், கேட்போரும் - அதாவது ஆசிரியர் யாரை முன்னிறுத்தி நூலைப் படைத்துள்ளாரோ, அவர்களும் தூதுவராக, தரகராக இருப்பவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.

நுண்ணிய வாசகர் (Implied Reader) என்பது ஒரு வகை. நூலுக்குள் அந்த நூலை வாசிக்கும் முறையைக் கண்டறிய முயலுபவர் அல்லது ஒரு நூலை வாசிக்கும் முறையை ஆய்பவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். மேலும் இங்கு நூலில் மயக்கம் (ஒன்றுக்கும் மேற்பட்டுப் பொருள் கொள்ளும்படி அமைந்திருப்பது) பாட இடைவெளி (Gaps in the text) இருக்கும். இதை வாசகரே தன்னுடைய அறிவால் பூர்த்தி செய்துகொள்வார். இது ஒரு உத்தியாக அமைந்து வாசகருடைய அறிவுக்கு வேலை கொடுக்கும்.'
...

வாசிப்பு வகை:
கற்றல் என்பது முதல் தடவை ஒன்றைத் தெரிந்து கொள்வதற்காகப் படித்தல் என்றும் வாசித்தல் என்பது தெரிந்ததையே மறுபடியும் மறுபடியும் படிப்பது என்றும் கொள்ளலாம். எனவே கல்வி அல்லது படிப்பு (Reading) என்றும், வாசிப்பு (Study) என்றும் கலைச்சொற்களாய் இன்று பலரால் வழங்கப்படுகிறது. தொல்காப்பியர் 'நோக்கு' என்னும் செய்யுள் உறுப்பை விளக்கும்போது 'மாத்திரை முதலா அடிநிலைகாறும் நோக்குதல்' என்று கூறியதைப் பேராசிரியர் 'கேட்டார் மறித்துநோக்கிப் பயன்கொள்ளுதல்' என்று விளக்கியது வாசிப்பையே குறிக்கும்...உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் 'பிற்றை நிலைமுனியாது கற்றல்' (183:1-2) என்பதும் குறளில் 'அரசியலில்' கல்வி அதிகாரத்தில் 'கற்க கசடறக் கற்பவை' (391) என்பதும், 'உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றல்' (395) என்பதும் படிப்புப் பற்றியவை. ஆனால் அதே அதிகாரத்தில் உள்ள

'தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு'

என்ற குறள் (396)...'பொருள் நூலுக்குள் இல்லை; வாசகர் பொருளைக் கட்டமைக்கிறார்' என்ற
கோட்பாட்டைப் புலப்படுத்துகின்றது. (பக்கங்கள்: 12-13; 15-16)

மேற்கோள்கள்[தொகு]

  1. http://books.dinamalar.com/details.asp?id=7228
  2. முனைவர் செ.வை. சண்முகம், குறள் வாசிப்பு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2002, பக்கங்கள்: 232.
  3. http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-MARCdetail.pl?biblionumber=316784[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறள்_வாசிப்பு_(நூல்)&oldid=3240939" இருந்து மீள்விக்கப்பட்டது