குரு பிபின் சிங்
குரு பிபின் சிங் | |
|---|---|
| பிறப்பு | 23 ஆகஸ்ட் 1918 சிங்காரி கிராமம், சில்சார், அசாம், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 9 ஜனவரி 2000 (வயது 81) கொல்கத்தா, இந்தியா |
| பாணி | மணிப்புரி நடனம் |
| விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது (1966), காளிதாஸ் சம்மன் விருது |
குரு பிபின் சிங் (Guru Bipin Singh) (23 ஆகஸ்ட் 1918 – 9 ஜனவரி 2000) ஓர் இந்திய நடன அமைப்பாளர், ஆசிரியர், மணிப்பூரி நடனக் கலை அறிஞர் இவர். மணிப்புரி நடனக் கலையின் மிகச்சிறந்த முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர், இருபதாம் நூற்றாண்டில் இக்கலையைப் பாதுகாப்பதிலும், முறைப்படுத்துவதிலும், பிரபலப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றினார்.
தற்போதைய அசாம் மாநிலத்திலுள்ள சிங்காரி கிராமத்தில் ஒரு பிஷ்ணுப்ரியா மணிப்பூரி குடும்பத்தில் பிறந்த சிங், சிறுவயதிலேயே இசை மற்றும் நடனப் பயிற்சிகளைப் பெற்றார். பின்னர், குரு அமூதோன் சர்மா உள்ளிட்ட பாரம்பரிய மணிப்பூரி குருக்களிடம் பயின்றார். மணிப்பூரி நடனத்தின் பல்வேறு மரபுகளை ஒருங்கிணைத்து, தனித்துவமான நடன அமைப்பு மற்றும் கற்பித்தல் முறையை அவர் உருவாக்கினார்; இது இக்கலைக்கு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பரவலான அங்கீகாரம் கிடைக்க உதவியது.
இம்பாலில் கோவிந்த்ஜி நர்த்தனாலயா, கொல்கத்தாவில் மணிப்பூரி நர்த்தனாலயா ஆகிய நிறுவனங்களை சிங் நிறுவினார்; இவை மணிப்பூரி நடனத்தைக் கற்பிப்பதிலும் பரப்புவதிலும் முக்கிய மையங்களாகத் திகழ்ந்தன. தனது நிகழ்ச்சிகள், ஆராய்ச்சி, நடன அமைப்பு மற்றும் கற்பித்தல் பணிகள் மூலம் பல தலைமுறை நடனக் கலைஞர்களை உருவாக்கிய இவர், மணிப்பூரி நடனத்தின் செவ்வியல், பக்தி சார்ந்த தன்மையைத் தக்கவைத்துக்கொண்டே, அதன் நவீன மரபை வடிவமைக்க உதவினார்.
இந்தியச் செவ்வியல் நடனத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, சங்கீத நாடக அகாடமி விருது, காளிதாஸ் சம்மான் உள்ளிட்ட பல கௌரவங்களை சிங் பெற்றார். மணிப்பூரி நடனத்தின் நவீன வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இவர் பரவலாகக் கருதப்படுகிறார்.
ஆரம்பகால வாழ்க்கை, கல்வி
[தொகு]குரு பிபின் சிங் 1918-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-அன்று, தற்போதைய அசாம் மாநிலத்திலுள்ள சில்சார் அருகே உள்ள சிங்காரி கிராமத்தில், ஓர் பிஷ்ணுப்ரியா மணிப்பூரி குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை லைகோம்சனா சிங் ஓர் பாரம்பரிய மருத்துவராகவும் கவிஞராகவும் இருந்தார்; இவரது தாயார் இந்துபாலா தேவி இசைத் திறமைக்கு பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார். கலாச்சாரச் செழுமை மிக்க சூழலில் வளர்ந்த சிங், சிறுவயதிலேயே இசை,நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு, தனது குடும்பத்தினரிடமிருந்தே ஆரம்பக்கட்டப் பயிற்சிகளைப் பெற்றார்.[1]
பின்னர், குரு அமூதோன் சர்மாவிடம் மணிப்பூரி நடனத்திற்கான முறையான பயிற்சியைப் பெற்ற இவர், மணிப்பூரின் நடன மரபுடன் தொடர்புடைய பல்வேறு பாரம்பரிய வடிவங்களையும் பயின்றார். தனது ஆரம்பக்காலப் பயிற்சியின்போது, மணிப்பூரி இசை, தாளம் மற்றும் நிகழ்த்துதல் முறைகள் குறித்தும் அவர் கற்றுக்கொண்டார்; இதன் மூலம் இக்கலையின் சடங்கு சார்ந்த, நாடகத்தன்மை கொண்ட அம்சங்கள் இரண்டையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அவரது பயிற்சி, மணிப்புரி நடனம் குறித்த விரிவான புரிதலை வளர்த்துக்கொள்ள இவருக்கு உதவியதுடன், ஓர் கலைஞர், நடன அமைப்பாளர், ஆசிரியர், ஆய்வாளராக இவர் பின்னர் ஆற்றிய பணிகளுக்கு அடித்தளமாகவும் அமைந்தது.[2]
தொழில் வாழ்க்கை
[தொகு]மணிப்பூரி நடனம் பெரும்பாலும் சடங்குகள், பக்தி, பிராந்தியச் சூழல்களுக்குள் மட்டுமே முடங்கியிருந்த காலகட்டத்தில், பிபின் சிங் ஓர் கலைஞராகவும் நடன அமைப்பாளராகவும் தனது பயணத்தைத் தொடங்கினார். மணிப்பூரின் செவ்வியல் மரபுகளில் பெற்ற ஆழ்ந்த பயிற்சியின் அடிப்படையில், இவர் இந்த நடன வடிவத்தைப் பாதுகாப்பதிலும், ஆவணப்படுத்துவதிலும், பிரபலப்படுத்துவதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். நிகழ்ச்சிகள், ஆராய்ச்சி, கற்பித்தல் ஆகியவற்றின் மூலம், மணிப்பூரி நடனத்தின் பாரம்பரிய அழகியல், ஆன்மீக அடித்தளங்களைத் தக்கவைத்துக்கொண்டே, அதனைப் பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க இவர் முயன்றார்.[1]
தனது பணிவாழ்வில், ராஸ் லீலா, லாய் ஹராவ்பா, நாட சங்கீர்த்தனா உள்ளிட்ட மணிப்பூரி நிகழ்த்துக்கலை மரபுகளின் பல்வேறு பிரிவுகளை இவர் கற்று ஒருங்கிணைத்தார். தேசிய அளவில் மணிப்பூரி நடனத்தை நிலைநிறுத்த உதவிய ஓர் கட்டமைக்கப்பட்ட கற்பித்தல் முறை,தனித்துவமான நடன அமைப்பு முறையை உருவாக்குவதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. முன்னணி நடனக் கலைஞர்கள், அறிஞர்களுடனும், குறிப்பாக ஜவேரி சகோதரிகளுடனும் இவர் இணைந்து பணியாற்றினார்; இவர்களுடன் இணைந்து இந்தியா,வெளிநாடுகளில் இந்த நடன வடிவத்தைப் பிரபலப்படுத்த இவர் தீவிரமாகச் செயல்பட்டார்.[3]
சிங் இம்பாலில் 'கோவிந்த்ஜி நர்த்தனாலயா'வை நிறுவினார்; பின்னர் 1972-ல் கொல்கத்தாவில் 'மணிப்புரி நர்த்தனாலயா'வை அமைத்தார். இவ்விரு நிறுவனங்களும் மணிப்பூரி நடனத்தைக் கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல், பரப்புதல் ஆகியவற்றில் முக்கிய மையங்களாகத் திகழ்ந்தன; மேலும் இவை பல குறிப்பிடத்தக்க நடனக் கலைஞர்களை உருவாக்கின. நிறுவன ரீதியான பணிகள், நடன அமைப்புத் தயாரிப்புகள் மற்றும் பயிற்சி முறைகள் ஆகியவற்றின் மூலம், மணிப்பூரி நடனத்தின் பாரம்பரியக் கூறுகளைப் பாதுகாத்துக்கொண்டே அதன் நவீன நடைமுறையை வடிவமைப்பதில் இவர் முக்கிய பங்காற்றினார்.[4]
பாணி, பங்களிப்புகள்
[தொகு]இருபதாம் நூற்றாண்டில் மணிப்புரி நடனத்தின் வளர்ச்சி, பிரபலமடைதலில் பிபின் சிங் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். ராஸ் லீலா, லாய் ஹராவ்பா, நாட சங்கீர்த்தனா போன்ற பாரம்பரிய வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு, பயிற்சி, நிகழ்த்துதல் ஆகியவற்றிற்கான ஓர் முறையான அணுகுமுறையை இவர் உருவாக்கினார்; இது இந்த நடன வடிவத்தின் செவ்வியல் தன்மையைத் தக்கவைத்துக்கொண்டு பரந்த பார்வையாளர்களிடம் அதைக் கொண்டு சேர்க்க உதவியது.[5]
விரிவான ஆராய்ச்சி, களப்பணிகள் மூலம், மணிப்பூரி நடனம் சார்ந்த பாரம்பரிய நடனத் தொகுப்புகள், அசைவு முறைகள், இசை மரபுகளை சிங் ஆவணப்படுத்தினார். சடங்கு, பக்தி,நாடக மரபுகளின் கூறுகளை ஒருங்கிணைத்து இவர் உருவாக்கிய நடன அமைப்புகள், 'பிபின் சிங் பாணி' மணிப்புரி நடனம் என்று அறியப்பட்ட ஓர் தனித்துவமான நிகழ்த்துக்கலை பாணியின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டன.[1]
மணிப்புரி நடனத்திற்கான தனிநபர் நடனத் தொகுப்புகளை உருவாக்குவதிலும், பாரம்பரிய இசை, நடனக் கோர்ப்புகளை மேடை நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதிலும் சிங் முக்கிய பங்காற்றினார். கற்பித்தல், வெளியீடுகள், நிறுவன ரீதியான முயற்சிகள் மூலம், மணிபுரி நடன மரபுகளைப் பாதுகாப்பதிலும் அவற்றை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும் இவர் பெரும் பங்காற்றினார். இவரது பணி சமகால மணிப்பூரி நடனப் பயிற்சியில் செல்வாக்கு மிக்கதாகத் திகழ்கிறது.[6]
சீடர்கள்
[தொகு]தனது கலைப்பயணத்தில், பிபின் சிங் பல நடனக் கலைஞர்களுக்குப் பயிற்சி அளித்தார்; இவர்கள் பிற்காலத்தில் மணிப்புரி நடனத்தின் முக்கியக் கலைஞர்களாகத் திகழ்ந்தனர். பாரம்பரியக் கற்பித்தல் முறையையும், நடன அமைப்பு, நிகழ்த்துதல் ஆகியவற்றிற்கான முறையான அணுகுமுறையையும் இணைத்த இவரது கற்பித்தல் பாணி, பல தலைமுறை நடனக் கலைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவரது குறிப்பிடத்தக்க சீடர்களில் ஜவேரி சகோதரிகள் (நயனா ஜவேரி, ரஞ்சனா ஜவேரி, சுவர்ணா ஜவேரி, தர்ஷனா ஜவேரி) அடங்குவர்; இவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் மணிப்பூரி நடனத்தைப் பிரபலப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினர். மணிப்பூரி செவ்வியல் மரபை அடிப்படையாகக் கொண்ட பல நடன நிகழ்ச்சிகளை உருவாக்குவதிலும் அவற்றை மேடையேற்றுவதிலும் சிங் இவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.[7]
கலாவதி தேவி, குணேஸ்வரி தேவி, பினோதினி தேவி, ப்ரீத்தி படேல், பௌஷாலி சாட்டர்ஜி,லதாசனா தேவி ஆகியோர் அவரது பயிற்சி, கலை வழிகாட்டுதலின் கீழ் பயின்ற பிற நடனக் கலைஞர்களாவர்; மேலும் இவர் நிறுவிய நிறுவனங்களைச் சேர்ந்த பல மாணவர்களும் இதில் அடங்குவர்.[8]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]மணிப்புரி நடனம், இந்தியச் செவ்வியல் நிகழ்த்து கலைகளுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பிபின் சிங் பல கௌரவங்களையும் விருதுகளையும் பெற்றார். அவற்றில் சில:
- மணிப்பூர் மகாராஜாவால் வழங்கப்பட்ட 'ஹஞ்சபா' என்ற பட்டம்.[9]
- சங்கீத நாடக அகாதமி விருது (1966).[10]
- சூர் சிரிங்கார் சம்சாத் அமைப்பால் வழங்கப்பட்ட ஷரங்கதேவ் சகா
- மத்தியப் பிரதேச அரசால் வழங்கப்பட் காளிதாஸ் சம்மான் *1989–90 ஆம் ஆண்டிற்கான செவ்வியல் நடனத் துறையில் இவ்விருதைப் பெற்றவர்களில் பிபின் சிங்கின் பெயரும் மத்தியப் பிரதேச அரசின் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ளது.
- கொல்கத்தாவின் அனாமிகா கலா சங்கம் விருது.
- கொல்கத்தாவின் ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்ட சிரோமணி புரஸ்கார்
மரபு
[தொகு]மணிப்புரி நடனத்தின் நவீன வளர்ச்சியில் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக குரு பிபின் சிங் கருதப்படுகிறார். நடன அமைப்பு, கற்பித்தல், ஆராய்ச்சி, நிறுவன ரீதியான பணிகள் ஆகியவற்றின் மூலம், இந்த நடன வடிவத்தைப் பாதுகாப்பதிலும் பரப்புவதிலும் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். இவர் நிறுவிய நிறுவனங்கள், நடன நிகழ்ச்சிகள், வெளியீடுகள், ஆராய்ச்சி, பயிற்சித் திட்டங்கள் மூலம் மணிப்பூரி நடனத்தை இன்றும் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன.
இவரது நூற்றாண்டு விழா இந்தியா, வெளிநாடுகளில் பயிலரங்குகள், கருத்தரங்குகள், விரிவுரை-விளக்கங்கள், நடன நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டது; இது பல தலைமுறை மணிப்பூரி நடனக் கலைஞர்கள், அறிஞர்கள் மீது இவர் கொண்டிருந்த தொடர்ச்சியான தாக்கத்தை வெளிப்படுத்தியது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Bipin Singh: A lodestar in dancers' constellation".
- ↑ "Classical Dancers of India: Bipin Singh" (PDF)."Bipin Singh: A lodestar in dancers' constellation".
- ↑ "Classical Dancers of India: Bipin Singh" (PDF).
- ↑ "Classical Dancers of India: Bipin Singh" (PDF)."Bipin Singh: A lodestar in dancers' constellation".
- ↑ "Classical Dancers of India: Bipin Singh" (PDF).
- ↑ "Classical Dancers of India: Bipin Singh" (PDF)."Bipin Singh: A lodestar in dancers' constellation".
- ↑ "Classical Dancers of India: Bipin Singh" (PDF).
- ↑ "Birth Centenary Celebrations of Manipuri Dance Doyen Guru Bipin Singh".
- ↑ "Classical Dancers of India: Bipin Singh" (PDF).
- ↑ "Sangeet Natak Akademi Awardees".
- ↑ "Birth Centenary Celebrations of Manipuri Dance Doyen Guru Bipin Singh".
மேலும் படிக்க
[தொகு]- Jhaveri, Nayana (1979). Guru Bipin Singh. Calcutta: Manipuri Nartanalaya.
- Jhaveri, Susheel (1989). In Appreciation of Guru Bipin Singh. Mumbai: Manipuri Nartanalaya.
- Jhaveri Darshana (1991) "Guru Bipin Singh : achievements and accomplishments", Manipuri Nartanalaya, Bombay.
- Singh, Bipin (1982) "Manipuri Dance:Tradition and future" Journal of the Department of Dance. v 1.p 35-38.
- Singh, Bipin (1972 or later) "Manipuri Dance Numbers and Demonstration", Manipuri Nartanalaya.
- Singh, Bipin (1990) "Srikrishnarasa- sangita-sangraha:Manipura ke Maharaja Sri Gambhira Simha ke sasanakala" (1825-1834) mem sankalita. Hindi, Kalakatta, Manipuri Nartanalaya.
- Singh, Bipin (1984). Pañcamasārasaṃhitā. Calcutta: Manipuri Nartanalaya.
- Singh, Bipin (1983-1990) "Vaishnavasangitasastra", Naraharichakrabartti, Bipin Singh, Gajanana Ranade, Mandala Vyasa, Varanasi, Chaikhamba Orientalia.