குரு கிரந்த சாகிபில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குரு கிரந்த் சாகிப் சீக்கியர்களின் புனித நூலாகும். இதில் இந்திய, சீக்கிய சமூகங்களில் பெண்களின் பங்கு குறித்து பல சபத்கள் (சுலோகங்கள்) உள்ளன.[1]

குரு கிரந்த சாகிப் சபத்கள்[தொகு]

ஒரு பெண்ணிலிருந்து ஆண் பிறந்தான்[தொகு]

இந்த சபத்தில் குரு பெண்ணின் பெருமையை விவரிக்கிறார். அனைத்து ஆண்களும் பெண்களும் ஒரு பெண்ணிடமிருந்தே உருவானவர்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் இதன் துவக்கமே "ஒரு பெண்ணிலிருந்து ஆண் பிறக்கிறான்" என அமைந்துள்ளது. இதையே கருத்துருவாகக் கொண்டு குரு மேலும் தொடர்ந்து வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் பெண்ணின் பெருமையை ஓர் தர்க்க வரிசையில் விவரிக்கிறார் – "பெண்ணுள் ஆண் உருவாகிறான்," பின்னர், " அவன் பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடித்து" தனக்கொரு நட்பாக, துணையாக, வருங்காலத்திற்கான ஊற்றாக கொள்கிறான். ஆணின் வாழ்க்கை முழுமையிலும் கடினமான வேளைகளில் அவன் பெண்ணை நம்பியே இருப்பதை இந்த சபத் எடுத்துக் காட்டுகிறது. "அவனது மனைவியின் மறைவின்போது, மற்றொரு பெண்ணை தேடுகிறான்" என சபத் தொடர்கிறது – அதாவது தனது மனைவி உயிரிழக்கும்போது மற்றொரு பெண்ணைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளான். சபத்தின் இறுதி வரிகளில் குரு கேட்கிறார்: "எனில் ஏன் அவளைக் கெட்டவள் என அழைக்கிறாய்?" – அரசர்கள் கூட பெண்ணான அன்னையிடம் பிறக்கிறார்கள். "பெண் இல்லாமல் – யாரும் இருக்க மாட்டார்கள்" என குரு தீர்மானிக்கிறார். பெண்ணினம் ஆணின் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் முதன்மையான பங்கு வகிக்கிறது என எவ்வித ஐயமுமின்றி முடிவுக்கு வருகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏதேனும் ஓர் வகையில் முக்கியமாக இருப்பதுடன் மனித இனத்தின் நிலைப்பிற்கும் மனித இனத்தின் தோற்றுவாய்க்கும் பெண் முதன்மையானவள். இந்த சபத்தில் குரு பெண்ணின் முக்கியத்துவம், பரிமாணம், மதிப்பை, மிக எளிய சொற்களில், குறிப்பிடுகிறார். இனப் பரவலுக்கு பெண்ணின் இன்றியமையா பங்கை விவரிக்கிறார். பெண்ணின் பல்வேறு பணிகளை பட்டியலிடுகிறார். இந்த சபத் எழுதப்பட்ட காலகட்டத்தில் நிலவிய பண்பாட்டில் பெண் ஆணை விடத் தாழ்ந்தவளாகவே கருதப்பட்டாள்;எனவே ஆண்கள் பெண்களை தங்களுக்கு சமநிலையானவர்களாக எண்ண இத்தகைய சிந்தனையின் குறிக்கோளாகும். இருப்பினும், பல்வேறு பண்பாடுகளிலும் இன்றும் நிலவும் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக இந்த சபத் பொருத்தமானதாக உள்ளது.

பெண்ணிலிருந்து, ஆண் பிறந்தான்;

பெண்ணினுள், ஆண் உருவானான்; பெண்ணிற்கே நிச்சயிக்கப்பட்டு மணமுடித்தான்.
பெண்ணே அவனது தோழர்; பெண்ணாலேயே, வருங்கால சந்ததி பிறக்கிறது.
தன் பெண்துணை மரணித்தால், வேறு பெண்ணை நாடுகிறான்; பெண்ணுடன் பிணைந்துள்ளான்.
எனில் ஏன் பெண் கெட்டவள் ? அவளிடமிருந்தே, அரசர்கள் பிறக்கின்றனர்.
பெண்ணிடமிருந்து பெண் பிறக்கிறாள்; பெண்ணின்றி, யாரும் இருக்க மாட்டார்கள்.


குரு நானக், ராக் ஆசா மெகல் 1, அங் 473

1604இல் ஐந்தாம் குரு அர்சன்தாசு தொகுத்த ஆதி கிரந்தத்திற்கு பாய் குர்தாசு முதல் உரை எழுதினார். வாரன் எனப்படும் இந்தப் பாடற்தொகுப்பும் சீக்கிய குருக்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த வாரனிலிருந்து சில பகுதிகள் பின்வருமாறு:

"பிறந்தவுடன் ஓர் சீக்கியப் பெண் அப்பா, அம்மாவிற்கு “எங்கள் கண்மணி”. பின்னர், அவளது உடன்பிறப்புகள் வியக்கும் தங்கை. உறவினர்களின் செல்லம். “இளமை பூத்தரிக்க” விலையுயர்ந்த பரிசுகளுடன் அவளுக்குத் திருமணம் நிகழ்கிறது. கணவனின் வீட்டில் மதிப்புடன் வாழும் அவள் புகுந்த வீட்டிற்கு நல்லூழ் கொணர்ந்ததாகக் கருதப்படுகிறாள். பண்பிலும் அறிவிலும் கணவருக்கு இணையாக மதிக்கப்படுகிறாள். விடிவின் வாயிலாக விளங்குகிறாள். இதுவே குருவால் ஆசிர்வதிக்கப்பட்ட, நம்பிக்கையுள்ள சீக்கியப் பெண்ணின் சொற் சித்திரமாகும்." (5.16)

சதி நடைமுறைக்கு எதிராக[தொகு]

அக்காலத்தில் நடைமுறையிலிருந்த இறந்த கணவனுடன் உயிர் துறக்கும் சதி குறித்து குரு நானக் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்:[2]

தங்கள் கணவனின் உடலோடு எரிமேடை ஏறும் பெண்களை 'சதி' என அழைக்காதீர்கள்.
O நானக், 'சதி' என்போர் பிரிவின் அதிர்ச்சியைத் தாங்கவியலாது இறப்போரே ஆகும். (1)

…சிலர் தங்கள் இறந்த கணவரோடு தங்களையும் எரியூட்டிக் கொள்கின்றனர்: [ஆனால் அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை, ஏனெனில்] உண்மையாகவே தம் கணவரை காதலித்திருந்தால் வாழ்நாள் முழுமையும் பிரிவின் வலியைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்திருப்பர்.

சிறீ குரு கிரந்த் சாகிப் பக்கம் 787

வரதட்சணைக்கு எதிராக[தொகு]

திருமணத்தின் போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் குடும்பத்திற்கு பணமோ மதிப்புள்ளப் பொருட்களோ தரப்படும் வரதட்சணை நடைமுறைக்கு எதிராக சீக்கியக் குருக்கள் கூறியுள்ளனர். இதனை "பகட்டு வெளிப்பாடு" என்றும் "தேவையற்ற காட்சிப்படுத்தல்" என்றும் இது "பொய்மையான தன்திறன் மிகப்பெண்ணம்" எனவும் கடிந்துள்ளனர். வரதட்சணை குறித்த சபத்:[3]

காட்சிப் படுத்த தானாகவே வழங்கும் எந்தவொரு வரதட்சணையும் பொய்யான தற்பெருமை சாற்றும் தேவையற்ற தோற்றப் பகட்டே.

O பிதாவே, கடவுளின் பெயரையே எனக்கு திருமணப் பரிசாகவும் வரதட்சணையாகவும் கொடு. (4)

சிறீ குரு கிரந்த் சாகிப் பக்கம் 79

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sikhism Religion of the Sikh People". Sikhs.org. பார்க்கப்பட்ட நாள் 2011-12-24.
  2. "www.srigranth.org, Guru Granth Sahib page 787". Srigranth.org. பார்க்கப்பட்ட நாள் 2011-12-24.
  3. "www.srigranth.org Guru Granth Sahib page 79". Srigranth.org. பார்க்கப்பட்ட நாள் 2011-12-24.