உள்ளடக்கத்துக்குச் செல்

குரு-சிஷ்யப் பாரம்பரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோக நிலையில் அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியைச் சுற்றிலும் சீடர்கள்
குரு ஆதி சங்கரருடன் சீடர்களான பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர் மற்றும் தோடகர்
குருவிற்கு குரு தட்சணை வழங்கும் சீடன்

குரு-சிஷ்யப் பாரம்பரியம், அல்லது குரு-சிஷ்யப் பரம்பரை இந்து சமயம், சமணம், பௌத்தம் மற்றும் சீக்கியம் மற்றும் திபெத்திய பௌத்தம் போன்ற இந்திய மெய்யியல் சமயங்களில் ஆசிரியர்கள் மற்றும் அவர்தம் சீடர்களின் வரிசையை குறிக்கிறது. ஒவ்வொரு குரு-சீடப்பரம்பரையும் ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்திற்கு சொந்தமானது. மேலும் அவர்தம் மெய்யியலை கற்பிப்பதற்கான அதன் சொந்த குருகுலங்கள் கொண்டிருக்கும். அவைகளை ஆசிரமம், ஆகாரா, கோம்பா, மடம் அல்லது விகாரைகளாக இருக்கலாம். ஒரு குரு அல்லது லாமாவை பின்தொடரும் சீடர் அல்லது சேலா (பின்தொடர்பவர்) அல்லது சிரமணர் (ஞானத்தை தேடுபவர்) மூலம் ஆன்மீக போதனைகள் கடத்தப்படும். சீடனுக்கு முறையான குருகுலங்களில் குருவால் சீடனுக்கு முறையான தீட்சை வழங்கப்பட்டப் பின்னர் போதனைகள் ஆகமம், ஆன்மீகம், வேதம் மற்றும் கலைகள் எதுவாக இருந்தாலும், குருவிற்கும் சீடருக்கும் இடையே வளரும் உறவின் மூலம் வழங்கப்படுகிறது.

குருவின் உண்மையான தன்மை மற்றும் குருவிடம் சீடனின் மரியாதை, அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையிலான இந்த உறவு நுட்பமான அல்லது மேம்பட்ட அறிவை வெளிப்படுத்த சிறந்த வழியாகும் என்று கருதப்படுகிறது. சீடன் இறுதியில் குருவை உள்ளடக்கிய அறிவில் தேர்ச்சி பெறுகிறார்.

சொற்பிறப்பியல்

[தொகு]

குரு-சிஷ்யப் பரம்பரை எனில் என்றால் "குருவிலிருந்து சீடனாக மாறுதல்". பரம்பரை என்பது ஒரு தடையற்ற வரிசை அல்லது தொடர், ஒழுங்கு, வாரிசு, தொடர்ச்சி, பாரம்பரியம் என்று பொருள்படும்.[1] பாரம்பரிய குடியுரிமைக் கல்வியில், சீடன் தனது குருவிடம் குடும்ப உறுப்பினராக இருந்து கல்வியைப் பெறுகிறார்.[2]

வரலாறு

[தொகு]
சீடன் நசிகேதனுக்கு குருவாக இருந்து எமதர்மராசன் பிரம்ம வித்தையை உபதேசித்தல்

உபநிடதங்களின் ஆரம்பகால வாய்வழி கல்வி மரபுகளில், குரு-சிஷ்ய உறவு இந்து சமயத்தின் அடிப்படை அங்கமாக பரிணமித்தது. சமசுகிருத சொல்லான உபநிஷத் என்ற சொல்லை உப-நி-ஷத் என்று பிரிக்கலாம். "உப" (அருகில்), "நி" (கீழே) மற்றும் "ஷத்" (அமர்தல்) என்று பொருள். அதாவது குருவிற்கு கீழே அமர்ந்து கல்வி பெறுதல் என்ற ஒரு பொருள் உள்ளது. மகாபாரதத்தில் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும், இராமாயணத்தில் இராமனுக்கும் அனுமனுக்கும் இடையிலான உறவுகள் குரு-சீடனுக்கு எடுத்துக்காட்டாகும். உபநிடதங்களில் குருமார்கள் மற்றும் சீடர்கள் குறித்த குறிப்புகள் பல இடங்களில் சுட்டுக்காட்டப்படுகிறது. கடோபநிடதத்தில் நசிகேதன் என்ற சீடனுக்கு எமதர்மராசன் குருவாக பிரம்ம வித்தையை கற்றுக்கொடுத்த குறிப்புகள் உள்ளது.

அமைப்புகள்

[தொகு]

பாரம்பரியமாக பண்டைய இந்தியக் குருகுலங்களில், குருமார்கள் மற்றும் சீடர்களின் வரிசைக்கு பயன்படுத்தப்படும் சொல் குரு-சீடப் பரம்பரை என்பதாகும்.[3] குரு-சீடப்பரம்பரை அமைப்பில், அறிவு (எந்தத் துறையிலும்) அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதாக நம்பப்படுகிறது. குரு-சீட பரம்பரைக்கு சமஸ்கிருத மொழியில் "ஒரு தடையற்ற தொடர் அல்லது வரிசை" என்று பொருள். சில சமயங்களில் "வேத அறிவைக் கடத்துவது" என வரையறுக்கப்படுகிறது. வேதக் கல்வி எப்போதும் ஆசார்யர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[4] குரு-சீடப் பரம்பரை பெரும்பாலும் சம்பிரதாயம் அல்லது தத்துவப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் அளித்த ஆதி சங்கரர், இராமானுஜர் மற்றும் மத்வரைப் பின்பற்றி அத்வைதம், விசிட்டாத்துவைதம் மற்றும் துவைதம் போன்ற தத்துவப் பள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு குரு-சீடப் பரம்பரை தோன்றியது. மேலும் வைணவத்தில் குருவைப் பின்பற்றி பல சம்பிரதாயங்கள் தோன்றியது. சில குருமார்கள் தங்களின் தத்துவத்தை நிலை நிறுத்த, பரப்ப சீடர் பரம்பரையை உருவாக்கினர்.

ஆகாரா என்பது துறவிகள் தங்கும் மடாலயம் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி மேற்கொள்ளப்படும் இடமாகும்.[5] எடுத்துக்காட்டாக தசனாமி சம்பிரதாயத்தில், துறவிகள் திரிசூலத்தை தற்காப்பு ஆயுதமாக கொண்டுள்ளனர்.[6]

குரு-சிஷ்ய உறவின் பொதுவான பண்புகள்

[தொகு]

இந்திய சமயங்களில் பரந்த அளவிலான, குரு-சீடன் உறவை பல மாறுபட்ட வடிவங்களில் காணலாம். இந்த உறவில் சில பொதுவான கூறுகள் அடங்கும்:

குரு-சீடர் உறவை நிறுவுதல்

[தொகு]
  • தீட்சை (முறையான துவக்கம்):குரு வழங்கும் தீட்சையின் மூலம் சீடனுக்கு குருகுலத்தில் முறையான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. மேலும் புதிய சீடனின் ஆன்மீக நல்வாழ்வு மற்றும் முன்னேற்றத்திற்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறார்.
  • சீட்சை (அறிவு பரிமாற்றம்): குரு சீடனுக்கு ஆழ்ந்த ஞானம் மற்றும் தியான நுட்பங்களை வெளிப்படுத்துகிறார்.
  • குரு தட்சணை: குருவிடம் கல்வி பயின்ற பின்னர் சீடன் குருவிற்கு வழங்கும் தட்சணை ஆகும். பெரும்பாலும் குருதட்சணை பொருளாக இருக்கலாம். ஏகலைவன் மானசீக குரு துரோணருக்கு குருதட்சணையாக கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் என மகாபாரதம்]] கூறுகிறது.

சுவாமி தயானந்த சரசுவதியின் சீடப்பரம்பரையில் வந்த சுவாமி பரமார்த்தனந்தர், சுவாமி குருபரானந்தர், சுவாமி ஓம்காரநந்தர் ஆகியவர்களை ஒரு குரு-சீடப்பரம்பரையினர் என்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Monier Monier-Williams (1899). A Sanskrit-English Dictionary. Oxford: Oxford University Press. p. 587(column a). திற நூலக எண் 6534982M.
  2. A.C. Bhaktivedanta Swami Prabhupada Srimad Bhagavatam 7.12.1, The Bhaktivedanta Book Trust, 1976, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-912776-87-0
  3. Bg. 4.2 evaṁ paramparā-prāptam imaṁ rājarṣayo viduḥ - This supreme science was thus received through the chain of disciplic succession, and the saintly kings understood it in that way.
  4. Satsvarupa, dasa Goswami (1976). Readings in Vedit Literature: The Tradition Speaks for Itself. S.l.: Assoc Publishing Group. pp. 240 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-912776-88-9.
  5. Akharas and Kumbh Mela What Is Hinduism?: Modern Adventures Into a Profound Global Faith, by Editors of Hinduism Today, Hinduism Today Magazine Editors. Published by Himalayan Academy Publications, 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-934145-00-9. 243-244
  6. James G. Lochtefeld (2002). The Illustrated Encyclopedia of Hinduism: A-M. The Rosen Publishing Group. pp. 23–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3179-8.

மேலும் படிக்க

[தொகு]