குருதியருவி
குருதியருவி (Blood Falls) என்பது கிழக்கு அண்ட்டார்ட்டிக்காவில் உள்ள டெய்லர் பனியாற்றின் நுனியில் செம்பழுப்பு நிறத்தில் வெளிப்படும் உப்புநீர் வடிவு ஆகும். இரும்பு ஆக்சைடு கலந்திருப்பதால் சிவப்பு நிறம் தோன்றுகின்றது. இக் குருதியருவி டெய்லர் பனியாற்றில் இருந்து கிழக்கு அண்ட்டார்டிக்காவில் உள்ள விடோரியா லாண்டு என்னும் இடத்தில் மக்மர்டோ உலர் பள்ளத்தாக்கு (McMurdo Dry Valleys) பகுதியில் உள்ள டெய்லர் பள்ளத்தாக்கில் உள்ள பனி மூடிய மேற்கு பானி ஏரி (Lake Bonney) மீது விழுகின்றது.
இரும்பு-அதிகம் உள்ள மிகு உப்புநீர் (மீயுப்புநீர்) அவ்வப்பொழுது பனியின் இடையே உள்ள இடுக்குகளின் வழியே வெளிப்படுகின்றது. பனியாற்றின் அடியே ஏறத்தாழ 400 மீ ஆழத்தில் இருந்து உப்புநீர் வெளிப்படுகின்றது.
1911 இல் ஆத்திரேலிய புவியியலாளர் தாமசு கிரிபித் டெய்லர் என்பார் சிவப்புநிற படிவுகள் இருப்பதைக் கண்டுபிடித்தார். முதன்முதலில் இவ்விடத்தை கண்டுபிடித்ததால் இவர் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகின்றது [1]
அண்ட்டார்ட்டிக்காவின் முன்னோடிகள் இந்த சிவப்பு நிறப் படிவு சிவப்புநிறப் பாசியால்ஆனதென்று நினைத்தனர், ஆனால் பின்னர் இது இரும்பு ஆக்சைடால் ஏற்பட்டது என்று நிறுவப்பட்டது.
மற்ற அண்ட்டார்ட்டிக் பனியாறுகளைப் போல, டெய்லர் பனியாறு அடிமட்டம் வரை உறைந்திருப்பதில்லை, ஏனெனில் பழங்காலத்து கடல்நீர் எப்படியோ அடியில் சிக்குண்டு இருப்பதால் இவ்வாறு அடியாழத்தே உறையாமல் இருக்ககூடும் என்று கருதப்படுகின்றது. குளிரால் நீர் உறையும் பொழுது அதில் சிக்குண்ட உப்புநீரில் உள்ள உப்பு உறையும் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டு, உறையாது இருக்கும் நீரில் சேர்ந்து கூடிய உப்புள்ள நீராக மாறுகின்றது. இதனால் சிக்குண்ட உப்புநீரில் உள்ள உப்பளவு கடல்நீரை விட 2-3 மடங்கு கூடுதலாக இருக்கும்.
பனிக்கட்டியின் இடையே உள்ள இடுக்குகளின் வழியே கிடைத்த உபுப்புமிகுந்த நீரை (மீயுப்புநீரை) சோதித்துப் பார்த்த பொழுது அது ஆக்சிசன் இல்லாமல் (ஆக்சிசன் அற்று) இருந்ததையும், சல்பேட்டும், இரும்பு மின்மவணுக்களும் (ferrous ion) கூடுதலாக இருந்ததை அறிய முடிந்தது. சல்பேட்டு இருப்பது கடல் சூழல் இருந்ததற்கான புவிவேதியியல் குறியீடு ஆகும், அதே நேரத்தில் கரையக்கூடிய இரு-இயைனி (divalent) மின்மவணுக்கள் (ions) வெளிவருவது, பனியாற்றின் அடியே உள்ள கனிமங்கள் நுண்ணுயிர்களின் வினைப்பாட்டால் ஆக்சிசனாக்கம் அடைதல் அல்லது எதிமின்னி உமிழ்வு நடைபெறக்கூடும் என நினைக்கின்றனர்.
மேற்கோள்
[தொகு]- ↑ Ohio State University (2003-Nov-05). "Explanation offered for Antarctica's 'Blood Falls'". ScienceDaily (Nov. 5, 2003). பார்க்கப்பட்ட நாள் 2009-04-18.
{{cite web}}
: Check date values in:|date=
(help)