குருகு (பறவை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டில் கருங்கால் வெண்குருகு
கருங்கால் வெண்குருகு

குருகு என்னும் சொல்லால் உணர்த்தப்படும் பொருள்களில் குருகு என்னும் பறவையும் ஒன்று. இதனைச் சலகப்பாடல்கள் கருங்கால் வெண்குருகு என்னும் தொடரால் குறிப்பிடுகின்றன. பறவை வெள்ளை நிறம். கால்கள் கருநிறம். அமர்ந்திருக்கும்போது சற்றே பசுமை நிறம் கொண்ட குருகு இனமும் உண்டு. இது நீரில் வாழும் உயிரினங்களை உண்ணும்.

கருங்கால் வெண்குருகு[தொகு]

 • குருகின் நிறம் வெள்ளைத் தாமரை போல் இருக்கும். [1]
 • நிறத்திலும், உருவிலும் பேக்கரும்பு பூவைப் போன்றும் [2] கரும்புப்பூ போன்றும் [3] [4] இருக்கும்.
 • உருவம் மரத்தில் உள்ள தாழம்பூ போல இருக்கும். [5] அது சிறகை விரிக்கும்போது தாழம்பூ விரிவது போல இருக்கும். [6]
 • குளத்திலும் மேயும். [7]
 • கடற்கழியில் உள்ள தாழம்புதரில் கூட்டமாக உறங்கும். [8]
 • மணல்வெளியில் உமணரின் உப்புவண்டி செல்லும் ஓசை கேட்டு, கருநிறக் கால்களை உடைய வெண்ணிறக் குருகு அஞ்சும். [9]
 • நெய்தல் நிலப் புன்னை மரங்களில் குருகு கூடு கட்டி முட்டையிடும். [10] [11] [12] [13] புன்னை மரக் கிளை வளையும் அளவுக்குக் கூட்டமாகத் தங்கும். [14] புன்னைப் பூக்கள் சிந்தும்படி உந்திப் பறக்கும். [15]
 • மீன்களை மேயும். [16] மரத்தில் நொங்கும் வௌவால்களையும் விரும்பி உண்ணும். [17] இறால் மீன் இதன் பிடிக்குத் தப்புவதும் உண்டு. [18] நண்டை உண்ணும். [19]
 • பூழியர் நாட்டில் வெள்ளாடு மேய்வது போல கடற்கானல் பரப்பில் குருகு மேயும். [20]
 • கொற்கை நகரில் குருகுகள் மேய்ந்தன. [21]
 • வையை ஆற்றுப் பொழிலிலும் மேய்ந்தன. [22]

பைதல் வெண்குருகு[தொகு]

சிறை குவிந்திருந்த
பைதல் வெண் குருகு"
நற்றிணை 312
 • இதன் சிறகை அணிச்சிறை என்றனர். [23]
 • சிறகை விரிக்காமல் கூம்பி அமர்ந்திருந்தபோது சற்றே பசுமை (பைதல்) நிறம் கொண்டிருந்த வெண்ணிறக் குருகுகளைப் பார்வை வேட்டுவன் [24] காழ் களைந்து [25] பயன்படுத்திக்கொண்டான். [26]
 • தினை அறுத்த பின்னர் நிற்கும் 'தினைத்தாள்' போன்ற இதன் கால்களும் சற்று பசுமையாக இருக்கும். [27]
 • இது பனைமரத்தில் இருந்துகொண்டு கூட்டுக்கு வரும்படி தன் பெண் துணையை அழைக்கும். [28]

குருகு பற்றிச் சங்கப்பாடல் தரும் செய்திகள்[தொகு]

 • குருகின் ஒலி யானை எழுப்பும் ஒலி போல் இருக்கும். [29]
 • யாழ் இசை போல ஒலி எழுப்பும். [30]
 • இதன் ஒலியைத் தமிழில் நரலல் என்பர். [31] [32]
 • வயலில் எழும் இதன் கூட்டொலியை இமிழல் என்பர். [33]
 • துணையைப் பிரிந்த குருகு இரவில் குரல் எழுப்பும். [34]
 • நீர்ப்பரப்புப் பகுதிகளில் வாழும். [35] [36]
 • வானில் பறக்கும். [37] பறக்கும்போது வரிசையாகப் பறக்கும். [38]
பறவைகள் விசும்பு உகந்து ஒழுகல்
நற்றிணை 369
வரிசையாகப் பறத்தல்
 • வெயில் தணிந்திருக்கும் மாலை வேளையில் இவை வானில் பறந்து தன் இருப்பிடமான குன்றுகளுக்குச் செல்லும். [39]
 • பனிக்கு நடுங்கும். [40]
 • அரசர்களின் படைவீரர்களைப் போல அவை மணல் பரப்பில் வந்து தங்கும். [41]
 • ஞாழல் மரத்தில் தனித்திருக்கும் குருகுகள் உறங்குவது வழக்கம். [42]மருத மரத்தில் கூட்டமாகத் தங்கும். [43]
 • உப்பங்கழியில் கூட்டமாக மேயும். [44] நெய்தல் பூக்களை மிதித்துக்கொண்டு மேயும். [45] நெய்தலுக்கு அடியில் மீனைத் தேடும். [46]
 • புன்னை மரத்திலும் [47] தாழை மடலிலும்[48] [49]கூடு கட்டிக்கொண்டு இறைகொள்ளும் (தங்கியிருக்கும்).
 • ஈங்கை மரத்துத் தளிர் வருட இனிமையாக உறங்கும். [50]
 • பனம்பழம் விழும் ஒலி கேட்டுக் குருகு இனம் கூட்டமாகப் பறக்கும். [51]
 • பனை மரத்தில் கூடு கட்டிக்கொண்டு வாழும் குருகு நள்ளிரவு யாமத்தில் குரல் எழுப்புவது உண்டு. [52] குருகு அமர்ந்ததும் பனம்பழம்பழம் வீழும் [53]

குருகும் மக்களும்[தொகு]

 • உமணரின் உப்புப் பண்ணையை வீணாக்கும் குருகுகளும் உண்டு. [54]
 • வலையில் பிடித்த மீனை வலை-வேட்டுவர் சிறகு வலுவிழந்த பறவைகளுக்கு இரையாகப் போடுவர். [55]
 • மருத நிலத்து மனைகளில் மீன் சீவும் மரத்தில் இருந்துகொண்டு குருகுப் பறவைகள் ஒலி எழுப்பும். [56]
 • அவல் இடிக்கும் உலக்கை ஒலி கேட்டு அருகில் வாழைமரத்தில் இருந்த குருகு பறந்து சென்று மாமரத்தில் அமர்ந்து தன் இறகுகளைக் கோதிக்கொள்ளும். [57]
 • குருகு உண்ட ஆமை ஓடுகளைப் பயன்படுத்தி 'பறை' என்னும் இசைக்கருவி செய்துகொள்வர். [58]
 • மகளிர் வளையல் அணியாத வெறுங்கையால் விளைந்த நெல் வயலில் மேயும் நாரையையும், குருகையும் ஓட்டுவர். [59]
 • சிறுமியர் குருகினம் நிரல் வரிசையில் பறக்கும்போது அதனை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டு விளையாடுவர். [60]
 • வயலில் மேயும் குருகுகளைத் துரத்துவதும் மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. [61]

அடிக்குறிப்பு[தொகு]

 1. குருகிடமிருந்து தப்பிய கெண்டை மீன் வெண்டாமரையைக் கண்டு வெருவியதாகச் சொல்லப்படுவதிலிருந்து இதனை உணரலாம்.
  குருகு கொளக் குளித்த கெண்டை அயலது
  உரு கெழு தாமரை வால் முகை வெரூஉம் (குறுந்தொகை 127)
 2. புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ
  விசும்பு ஆடு குருகின் தோன்றும் (ஐங்குறுநூறு 17)
 3. இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
  வெண் குருகு (அகநானூறு 13)
 4. கரும்பின் கணைக்கால் வான் பூ
  மாரி அம் குருகின் ஈரிய குரங்க (குலுங்க) - அகநானூறு 235
 5. தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
  குருகு என மலரும் பெருந் துறை (குறுந்தொகை 226)
 6. வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
  குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும் (குறுந்தொகை 228)
 7. கருங் கால் வெண் குருகு மேயும்
  பெருங் குளம் (குறுந்தொகை 325)
 8. கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
  அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
  உடைதிரை ஒலியின் துஞ்சும் (குறுந்தொகை 303)
 9. உமணர்
  வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,
  கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
  மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
  கருங் கால் வெண் குருகு வெரூஉம்
  இருங் கழிச் சேர்ப்பின் - நற்றிணை 4,
 10. நெடுஞ் சினைப் புன்னைக் கடுஞ் சூல் வெண் குருகு
  உலவுத் திரை ஓதம் வெரூஉம் - நற்றிணை 31,
 11. இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
  வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
  கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே;(நற்றிணை 67, )
 12. வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை (குறுந்தொகை 5)
 13. மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி
  குவை இரும் புன்னைக் குடம்பை சேர (அகநானூறு 40)
 14. கருங் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெருஞ் சினை
  விருந்தின் வெண் குருகு ஆர்ப்பின் (நற்றிணை 167)
 15. நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர,
  கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும் (நற்றிணை 375)
 16. மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை (அகநானூறு 300)
 17. வளை நீர் மேய்ந்து, கிளை முதல்செலீஇ,
  வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை
  இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து-
  கருங் கால் வெண் குருகு!-எனவ - நற்றிணை 54,
 18. இரை வேட்டு எழுந்த
  கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
  முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை, (நற்றிணை 211)
 19. நீர்ஞெண்டு
  இரை தேர் வெண் குருகு (அகநானூறு 176)
 20. கடலே! பூழியர்
  சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
  மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை. (குறுந்தொகை 163)
 21. கைந்நிலை 60
 22. பரிபாடல் 6-76
 23. அணிச்சிறை இனக்குருகு கலித்தொகை 126-6
 24. பழக்கி வைத்திருக்கும் பறவைகளைக் கொண்டு பறவைகளைப் பிடிக்கும் வேட்டுவன்
 25. கட்டுப்பாட்டை நீக்கிப்
 26. பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
  சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
  பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள (நற்றிணை 312)
 27. தினை தாள் அன்ன சிறு பசுங் கால
  ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
  குருகும் உண்டு (குறுந்தொகை 25)
 28. ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
  கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,
  உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
  பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே? (நற்றிணை 338)
 29. களி மயில்
  குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,(அகநானூறு 145)
 30. சீறியாழ்
  நரம்பு இசைத்தன்ன இன் குரற் குருகின் (நற்றிணை 189)
 31. வெண் குருகு நரலும் தண் கமழ் கானல் (குறுந்தொகை 381)
 32. குருகினம் நரல (அகநானூறு 217)
 33. வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல்
  நீள் வயல் நண்ணி இமிழும் (ஐங்குறுநூறு 86)
 34. கலித்தொகை 121-16
 35. யாறு சேர்ந்தன்ன ஊறு நீர்ப் படாஅர்ப்
  பைம் புதல் நளி சினைக் குருகு இருந்தன்ன (அகநானூறு 178)
 36. கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப (அகநானூறு 260)
 37. குருகும் இரு விசும்பு இவரும் (குறுந்தொகை 260)
 38. வான் பறைக் குருகின் நெடு வரி பொற்ப, பதிற்றுப்பத்து 83
 39. சுடர் சினம் தணிந்து குன்றம் சேர,
  நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக (நற்றிணை 369)
 40. பெய் பனி நலிய, உய்தல் செல்லாது
  குருகினம் நரலும் (ஐங்குறுநூறு 457)
 41. நெய்த் தலைக் கொழு மீன் அருந்த, இனக் குருகு
  குப்பை வெண் மணல் ஏறி, அரைசர்
  ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும், (நற்றிணை 291)
 42. எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த்
  தனிக் குருகு உறங்கும் (ஐங்குறுநூறு 144)
 43. 'உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் (ஐங்குறுநூறு 7)
 44. இருங் கழி
  இரை ஆர் குருகின் நிரை பறைத் தொழுதி (நற்றிணை 123)
 45. இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
  வறு நீர் நெய்தல் (நற்றிணை 183)
 46. நெய்தல் இருங் கழி நெய்தல் நீக்கி
  மீன் உண் குருகினம் கானல் அல்கும் (ஐங்குறுநூறு 184)
 47. வால் இணர்ப் படு சினைக் குருகு இறை கொள்ளும் - பதிற்றுப்பத்து 30
 48. தாழைச்
  சுறவு மருப்பு அன்ன முட் தோடு ஒசிய,
  இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும்,(நற்றிணை 131)
 49. தாழை குருகு ஈனும் கைந்நிலை 59
 50. ஈங்கைத் துய்த் தலைப் புது வீ
  ஈன்ற மாத்தின் இளந் தளிர் வருட,
  வார் குருகு உறங்கும் - அகநானூறு 306
 51. கானற் பெண்ணைத் தேனுடை அழி பழம்,
  வள் இதழ் நெய்தல் வருந்த, மூக்கு இறுபு,
  அள்ளல் இருஞ் சேற்று ஆழப் பட்டென,
  கிளைக் குருகு இரியும் துறை (நற்றிணை 372)
 52. ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை
  வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண் குருகு,
  நள்ளென் யாமத்து, உயவுதோறு உருகி,(நற்றிணை 199)
 53. பரிபாடல் 2-43
 54. உவர் விளை உப்பின் குன்று போல்குப்பை
  மலை உய்த்துப் பகரும், நிலையா வாழ்க்கை,
  கணம் கொள் உமணர் உயங்குவயின் ஒழித்த
  பண் அழி பழம் பார் வெண் குருகு ஈனும் (நற்றிணை 138)
 55. பெருநீர்
  வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
  பறை தபு முது குருகு இருக்கும் (ஐங்குறுநூறு 180)
 56. குருகு நரல, மனை மரத்தான்
  மீன் சீவும் பாண் சேரியொடு,
  மருதம் - மதுரைக்காஞ்சி 268
 57. பாசவல் இடிக்கும் இருங் காழ் உலக்கைக்
  கடிது இடி வெரீஇய கமஞ்சூல் வெண் குருகு
  தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது;
  நெடுங் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் (அகநானூறு 141)
 58. குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை
  அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும் (ஐங்குறுநூறு 81)
 59. முடந்தை நெல்லின் விளைவயற் பரந்த
  தடந்தா ணாரை யிரிய வயிரைக்
  கொழுமீ னார்கைய மரந்தொறுங் குழாஅலின்
  வெண்கை மகளிர் வெண்குரு கோப்பும் - பதிற்றுப்பத்து 29
 60. குருகு ஒழுக்கு எண்ணி,
  எல்லை கழிப்பினம் (நற்றிணை 159)
 61. குறுந் தொடி, மகளிர் குரூஉப் புனல் முனையின்,
  பழனப் பைஞ் சாய் கொழுதி, கழனிக்
  கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும் (அகநானூறு 226)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருகு_(பறவை)&oldid=3319636" இருந்து மீள்விக்கப்பட்டது