உள்ளடக்கத்துக்குச் செல்

குரங்குச் சம்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரங்குச் சம்பா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
வகை
பாரம்பரிய நெல் வகை
காலம்
160 - 165 நாட்கள்[1]
மகசூல்
எக்டேருக்கு சுமார் 1,725 கிலோ
தோற்றம்
பண்டைய நெல் வகை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

குரங்குச் சம்பா (Kurangu Samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். சோற்றிற்கு ஏற்ற இரகமாக உள்ள இதன் தானியம் மெல்லியதாகவும், (சன்ன இரகம்) அரிசி வெள்ளை நிறத்திலும் காணப்படுகிறது.[1]

காலம்

[தொகு]

நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 160 - 165 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. சம்பா பருவத்தில் நடவு செய்யக்கூடிய இந்நெல் இரகம், நாற்றங்கால் வயது 40 நாட்களாக உள்ளது.[1]

சாகுபடி

[தொகு]

நாற்று விட்டு நடவு முறையில் சாகுபடி செய்யப்படும் இது, களிமண் மற்றும் மணல் கலந்த களிமண் பாங்கான நிலங்களில் பயிரிட ஏற்றதாக கூறப்படுகிறது. மேலும் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மையுடனான குரங்குச் சம்பாவின் நெற்கதிர்கள், மற்ற இரகங்களை விடவும் நீண்டதாக காணப்படுகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு மற்றும் வறட்சி என நேரெதிர் சூழலுக்கு ஏற்ற இரகமாக உள்ள இந்நெல் இரகம்,[2][3] முதிர்ந்த நிலையில் சாய்ந்துவிடக்கூடியதாகும்.[1]

மகசூல்

[தொகு]

சராசரியாக 135.7 சதமமீட்டர் உயரமும், அதிகபட்சமாக 149.6 சதமமீட்டர் உயரமும் வளரக்கூடிய இந்த இரக நெற்கதிர்களின் நீளம், 28.0 - 28.9 சதம மீட்டராகவும், நெற்கதிரில் உள்ள நெல்மணிகளின் எண்ணிக்கை 208 - 267 என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஆயிரம் நெல்மணிகளின் எடை 19.161 கிராம் உள்ள இந்நெல், நெல்லின் மகசூல் ஒரு எக்டேருக்கு சராசரியாக 1,725 கிலோவாகவும் (23 மூடைகள்), வைக்கோலின் மகசூல் 1,800 (60 கட்டுகள்) கிலோவாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]

நெல்மணியின் இயல்பு

[தொகு]

குரங்குச் சம்பாவின் நெல்மணிகளின் இயல்பானது, பூக்கும் பருவத்தில் இளம் பச்சை நிறமாகவும், பால்பிடிக்கும் நேரத்தில் கரும்பச்சையாகவும், முதிர்ச்சிப் பருவத்தில் வைக்கோல் நிறமாகவும் காணப்படும்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "பாரம்பரிய நெல் இரகங்கள் - பக்கம் 18" (PDF). nammanellu.com (தமிழ்) - சனவரி 2001. Retrieved 2025-07-10.
  2. "CLIMATE AND VARIETIES". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - © 2009-16. Retrieved 2025-07-10.
  3. "Organic Package of Practices for Rice". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - TNAU 2008 - 2023. Retrieved 2025-07-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரங்குச்_சம்பா&oldid=4307133" இலிருந்து மீள்விக்கப்பட்டது