உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பகோணம் வெற்றிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பகோணம் வெற்றிலை
கும்பகோணம் வெற்றிலை, தமிழ்நாட்டில் புவிசார் குறியிடு பெற்ற விவசாயப் பொருள்
வகைவெற்றிலை, விவசாயப் பொருள்
இடம்கும்பகோணம், கும்பகோணத்தின் அருகிலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஏவூர்
நாடுஇந்தியா
பதிவுசெய்யப்பட்டது31 மார்ச் 2025
அதிகாரப்பூர்வ இணையதளம்ipindia.gov.in
விற்பனை நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கும்பகோணம் வெற்றிலை

கும்பகோணம் வெற்றிலை (Kumbakonam Betel Leaf) இந்தியாவில் தமிழ்நாட்டில் காவிரி வடிநிலமான தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் விளையும் ஒரு வணிகப் பயிராகும். இப்பகுதியிலிருந்து புவிசார் குறியீடு தகுதி பெற்ற முதல் முதல் விவசாயப் பொருளாகவும் தமிழ்நாட்டில் புவிசார் குறியிடு பெற்ற மூன்றாவது வெற்றிலை இரகமாகவும் உள்ளது.

விளக்கம்

[தொகு]

கும்பகோணம் வெற்றிலை கும்பகோணத்திலும், கும்பகோணத்தின் அருகிலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஏவூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. காவிரி ஆற்றங்கரையிலும், கும்பகோணத்திலும், தஞ்சாவூர் பகுதிகளிலும் விளையும் இந்த வெற்றிலை இதன் கருமை வண்ணத்திலிருந்து வெளிர் பச்சை நிறம் வரையிலும் கூடிய சுவைக்குப் பெயர் பெற்றது.[1] சென்னையில் உள்ள இந்திய புவிசார் அலுவலகத்தில் உள்ள பழைய பதிவு ஒன்றில், கும்பகோணத்தில் உள்ள மண் வகை மிகவும் இயற்கையானது என்றும், இப்பகுதியில் நல்ல வடிகால் அமைப்பு இருப்பதால் வெற்றிலையை ஏராளமாகப் பயிரிட உதவுகிறது என்றும் தெரிவிக்கின்றது. கும்பகோண வெற்றிலைகள் காரமானதாகவும், இனிப்புடன் கூடிய கசப்புச் சுவையுடையது. இதில் கார்மினேட்டிவ் உடன் மருந்தியல் செயல்பாட்டைக் காட்டும் பல உயிர் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.[2]

பெருமை

[தொகு]

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கோவில்களுக்கும் வெற்றிலைக்கும் பெயர் பெற்றது. 1900-களின் முற்பகுதியில், மகாகவி பாரதியார் ”‘கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்” எனத் தமது பாடலில் கும்பகோணம் வெற்றிலையின் பெருமையினை எழுதினார்.[3] தமிழ்த் திரைப்படப் பழைய பாடல்களிலும், கானா பாடல்களிலும் கும்பகோணம் வெற்றிலையின் புகழ் பேசப்பட்டுள்ளது.

புவியியல் குறியீடு

[தொகு]

கும்பகோணம் வெற்றிலைக்கு இந்திய அரசின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேட்டில் புவிசார் குறியீடு தகுதி 31 மார்ச்சு, 2025 அன்று வழங்கப்பட்டது. இத்தகுதி 12 சனவரி அக்டோபர் 2032 வரை செல்லுபடியாகும்.[4]

13 சனவரி 2022 அன்று தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையமும், கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச் சங்கமும் கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு பதிவினை முன்மொழிந்தன. விண்ணப்பத்தினைப் பரிசீலித்த சென்னையில் உள்ள புவியியல் குறியீட்டுப் பதிவேட்டால் வெற்றிலைக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதனால் "கும்பகோணம் வெற்றிலை" என்ற பெயர் இப்பகுதியில் பயிரிடப்படும் வெற்றிலைக்கு மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் இது ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலைக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெறும் மூன்றாவது வெற்றிலை வகையாகவும், தமிழ்நாட்டிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற 62ஆவது பொருளாகவும் மாறியது.[5]

புவிசார் குறியீட்டுப் பதிவால் வழங்கப்படும் மதிப்புமிக்க புவியியல் அடையாளம், ஒரு தயாரிப்பு தனித்துவமான குணங்களைக் கொண்டுள்ளது, பாரம்பரிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுகிறது, அதன் புவியியல் தோற்றத்தில் வேரூன்றிய நற்பெயரைப் பெற்றுள்ளது என்பதைச் சான்றளிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2025/Apr/02/gi-tag-for-thovalai-maalai-kumbakonam-betel-leaf-soon-in-tn
  2. https://www.dtnext.in/tamilnadu/2022/01/16/application-submitted-for-gi-tag-for-medicinal-kumbakonam-betel-leaves
  3. https://www.thehindu.com/news/national/tamil-nadu/the-three-betel-leaf-varieties-of-tamil-nadu-that-stand-out-for-their-taste-and-aroma/article67677540.ece
  4. "Details". search.ipindia.gov.in (in ஆங்கிலம்). 2025-04-03. Retrieved 2025-04-03.
  5. "கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலை, கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு". Hindu Tamil Thisai. 2025-04-03. Retrieved 2025-04-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பகோணம்_வெற்றிலை&oldid=4360246" இலிருந்து மீள்விக்கப்பட்டது