குமார் பொன்னம்பலம்
குமார் பொன்னம்பலம் (ஆகத்து 12, 1940 - சனவரி 5, 2000) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் வழக்கறிஞரும் ஆவார். இவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். குமார் பொன்னம்பலம் 2000, சனவரி 5 இல் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது மகன் கஜேந்திரகுமார் தற்போது தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.[1][2][3]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]யாழ்ப்பாணம், வடமராட்சியில் ஜி. ஜி. பொன்னம்பலம், ரோஸ் அழகுமணி கிளவ் ஆகியோருக்குப் பிறந்தவர் குமார். யாழ்ப்பாணம் அரச அதிபராக இருந்த முருகேசம்பிள்ளை என்பவரின் மகள் யோகலட்சுமியை மணந்தார். தந்தையைப் போலவே இவரும் சட்டம் பயின்று பாரிஸ்டர் ஆகி வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]1966 ஆம் ஆண்டு முதல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த குமார் பொன்னம்பலம், 1977 ஆம் ஆண்டில் தந்தை இறந்த பின்னர் அக்கட்சியின் தலைவரானார்.
கூட்டணியுடன் கருத்து வேறுபாடு
[தொகு]இவர் சார்ந்திருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் கூட்டணியின் ஒரு உறுப்புக் கட்சி ஆகியது. தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே குமாரின் தந்தை ஜீ. ஜீ. பொன்னம்பலமும், எஸ். ஜே. வி. செல்வநாயகமும் காலமாகிவிட்டனர். இத் தேர்தலில் கூட்டணி சார்பில், தனது தந்தை பல தடவைகள் போட்டியிட்டு வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்குக் குமார் பொன்னம்பலம் விருப்பம் கொண்டிருந்தார். எனினும் ஏற்கனவே உறுப்புக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதியிலேயே அக்கட்சியினர் போட்டியிட வேண்டும் என்ற கொள்கைக்கு அமையக் காங்கிரஸ் கட்சியினருக்கு, யாழ்ப்பாணத் தொகுதி ஒதுக்கப்படவில்லை, பதிலாக வட்டுக்கோட்டைத் தொகுதி குமாருக்கு ஒதுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொள்ளாத குமார் யாழ்ப்பாணத் தொகுதியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார். எனினும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. கூட்டணி சார்பில் எத்தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்ற நிலை இருந்தும், கிடைத்த தொகுதியை ஏற்காது தனித்துப் போட்டியிட்டதன் மூலம் தனது வாழ்வில் நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை அவர் இழந்தார்.
1977 தேர்தலுக்குப் பின்
[தொகு]1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தனியாக இயங்கச் செய்வதில் குமார் ஆர்வம் காட்டினாலும், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியிலேயே இயங்கினர். இத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்ப் பகுதிகளில் மிதவாதிகளின் கை தாழ்ந்து வந்தது. தீவிரவாதம் முனைப்புடன் தலை தூக்கியது. காலப்போக்கில் சொந்தக் காலில் நின்று தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எந்த மிதவாதக் கட்சிக்குமே வாய்ப்புக் கிட்டவில்லை.
எனினும், முழு நாட்டுக்கும் நடைபெற அதிபர் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். வெற்றிபெற முடியாது என்பது உறுதியாக இருந்தும், தமிழீழத்துக்கான, நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் மக்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்ற அரசியலுக்கு வெளியே
[தொகு]நாடாளுமன்ற அரசியலில் இவருக்கு வெற்றிகள் கிட்டாவிட்டாலும், அதற்கு வெளியே இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார். இதனால், இனவாதிகள் இவரை வெறுத்தனர். இதன் உச்சக் கட்டமாக இனவாதிகளால் குமார் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் இறந்த பின்னர், விடுதலைப் புலிகள் இவருக்கு மாமனிதர் விருது வழங்கிக் கௌரவித்தனர்.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- தமிழ் நேஷன் - 20 ஆம் நூற்றாண்டின் நூறு தமிழர்கள்.
- தமிழர் தம் விடிவுக்காய் தன்னுயிர் ஈந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம்[தொடர்பிழந்த இணைப்பு]
- குமார் பொன்னம்பலம் - மனித உரிமைகளுக்கான தமிழ் மையம் (ஆங்கில மொழியில்)
- மாமனிதர் குமார் பொன்னம்பலம்[தொடர்பிழந்த இணைப்பு] - விநாயகமூர்த்தி (தமிழில்)
- இலங்கையில் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் அரசியல் இயங்கியல் - குமார் பொன்னம்பலம் (ஆங்கில மொழியில்)
- சிங்களவரின் விட்டுக்கொடுக்காத தன்மை - குமார் பொன்னம்பலம் (ஆங்கில மொழியில்)
- ஐம்பதுக்கு ஐம்பது - எனது தந்தையின் கோரிக்கை - குமார் பொன்னம்பலம் (ஆங்கில மொழியில்)
- முன்னணித் தமிழ் அரசியல்வாதி இலங்கைத் தலைநகரில் கொல்லப்பட்டார் (ஆங்கில மொழியில்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jeyaraj, D. B. S. (January 2000). "Kumar Ponnambalam: Tiger in the Lion's Den". Tamil Times XIX (1): 5–8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/36/3585/3585.pdf.
- ↑ "Kumar Ponnambalam shot dead". TamilNet. 5 January 2000. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4469.
- ↑ Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon (PDF). p. 141.