குமரகுருபரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குமரகுருபரர் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெருந் தமிழ்ப் புலவர் ஆவார்.[1][2] இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சைவ வெள்ளாளர் குலத்திலே சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார்.[சான்று தேவை] பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுருபரர் மதுரைக்குச் சென்றார். அக்காலத்தில் மதுரையில் இருந்து அரசு புரிந்த திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க மதுரை மீனாட்சி அம்மன் பெயரில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார். பின்னர் தருமபுரம் ஆதீனத்தில், மாசிலாமணி தேசிகர் என்பவரிடம் சீடராக இருந்தார். அக்காலத்தில் மேலும் பல நூல்களை எழுதிய குமரகுருபரர், காசிக்குப் பயணமானார்.

அங்கே காசி மடம் என அழைக்கப்பட்ட ஒரு மடத்தை நிறுவிச் சைவ சமயத்தை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதன் கிளையொன்றைத் திருப்பனந்தாளிலும் நிறுவினார்.

கயிலாசபுரத்தில் அடிகள் பிறந்த வீட்டுப் பகுதி அடிகளின் மடமாக 31.8.1952 இல் அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகளால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குமரகுருபரர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்து, தவழ்ந்து, வைகை ஆற்றங்கரையில் வாழ்ந்து காவிரியாற்றங் கரையிலும் கங்கை ஆற்றங்கரையிலும் மடமமைத்து தமிழையும் சைவத்தையும் வளர்த்து கங்கை ஆற்றங்கரையில் இறைவனடி சேர்ந்தார்.

மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், திருவாரூர் நான்மணிமாலை, முத்துக்குமார சாமி பிள்ளைத்தமிழ், காசிக் கலம்பகம், சிதம்பர மும்மணிக்கோவை, சகலகலாவல்லி மாலை என்பன இவர் இயற்றிய பிற நூல்களாகும்.

எழுதிய நூல்கள்[தொகு]

 1. கந்தர் கலிவெண்பா
 2. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
 3. மதுரைக் கலம்பகம்
 4. நீதிநெறி விளக்கம்
 5. திருவாரூர் நான்மணிமாலை
 6. முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
 7. சிதம்பர மும்மணிக்கோவை
 8. சிதம்பரச் செய்யுட்கோவை
 9. பண்டார மும்மணிக் கோவை
 10. காசிக் கலம்பகம்
 11. சகலகலாவல்லி மாலை
 12. மதுரை மீனாட்சியம்மை குறம்|மதுரை மீனாட்சி அம்மை குறம்
 13. மதுரை மீனாட்சி அம்மை இரட்டை மணிமாலை
 14. தில்லைச் சிவகாமி அம்மை இரட்டை மணிமாலை
 15. கயிலைக் கலம்பகம்
 16. காசித் துண்டி விநாயகர் பதிகம்

குமரகுருபரரைப் பாடியோர்[தொகு]

 • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை 338 பாடல்களில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் சரித்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்.
 • சேற்றூர் இரா. சுப்பிரமணியக் கவிராயர் 1001 பாடல்கள் கொண்ட ஸ்ரீகுமரகுருபர சுவாமிகளின் புராணம் என்ற நூல் எழுதியுள்ளார்.
 • பாரதிதாசன் குமரகுருபரர் மீது கொண்ட பற்றினால் தமது எதிர்பாராத முத்தம் என்ற நூலில் அவரைப் பற்றி குறிப்பிடுகிறார்.
 • தேனூர் வே. செ. சொக்கலிங்கனார் சுவாமிகளைப் பற்றி செய்த தொண்டர் புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012251.htm
 2. குமரகுருபரர் கட்டுரை குமுதம் பக்தி ஸ்பெசல் - 14.07.2016 பக்கம் 41

கருவி நூல்[தொகு]

குமரகுருபரர் கற்பனை. டாக்டர் ஆ.கந்தசாமி : முதல் பதிப்பு டிசம்பர் 1999 மணிவாசகர் பதிப்பகம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமரகுருபரர்&oldid=2771803" இருந்து மீள்விக்கப்பட்டது