உள்ளடக்கத்துக்குச் செல்

குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் குகைக் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குப்பல்நத்தம் பொய்கைமலை சமணக் கோவில் என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், குப்பல்நத்தம் மற்றும் பரமன்பட்டி கிராமங்களின் அருகே உள்ள பொய்கைமலை குன்றில் அமைந்துள்ளது. இவ்வூர் மரபுவழி வணிகப் பாதையில் அமைந்துள்ளது. இது ஒரு குடைவரைக் கோவிலாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

இவ்வூர் திருமங்கலத்திலிருந்து 23.3 கி.மீ. தொலைவிலும், மதுரை மாவட்டத் தலைமையகத்திலிருந்து மேற்கு நோக்கி 47.2 கி.மீ தொலைவிலும், கருமாத்தூரிலிருந்து 25.1 கி.மீ. தொலைவிலும், எழுமலையிலிருந்து 17.1 கி.மீ. தொலைவிலும், உசிலம்பட்டியிலிருந்து 15.6. கி.மீ. தொலைவிலும், சேடபட்டியிலிருந்து 6.5 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 625527 ஆகும். [2] இதன் புவியமைவிடம் 9° 49' 19.668 N அட்சரேகை 77° 47' 30.228 E தீர்க்க ரேகை ஆகும்.

பொய்கைமலை சமணக் கோவில்

[தொகு]

சின்னக்கட்டளை என்ற கிராமத்திலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் சாலையில் சிறிது தொலைவு பயணித்தால் குப்பல் நத்தம் என்ற ஊர் வரும். அருகே பொய்கைமலை என்னும் சிறு குன்று உள்ளது. இக்குன்றின் அடிவாரத்திலிருந்து குன்றிற்குச் செல்ல 24 படிக்கட்டுகள் உள்ளன. இங்கிருந்த பழைய படிக்கட்டுகள் சிதைந்து போனதால், 2001 ஆம் ஆண்டில் புதிய படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். [3] இங்குள்ள இயற்கை குகைத்தளத்தில் உள்ள பாறையில் சமண சமய தீர்த்தங்கரர்களான பாகுபலி, பார்சுவநாதர், மகாவீரர் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்களின் தலைக்கு மேல் முக்குடை காட்டப்பட்டுள்ளது. இருபுறமும் இரண்டு அடியவர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்களின் கலைபாணி காலத்தால் முந்தையதாகும். [1] பத்மாவதி, பிராம்மி, சுந்தரி ஆகிய இயக்கிகளின் புடைப்புச் சிற்பங்களும் இங்கே செதுக்கப்பட்டுள்ளன. எண்ணெய் பூசிய சிற்பங்களின் மீது மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி, பொட்டு வைத்து, மாலை சாற்றி அலங்கரித்துள்ளனர். இந்த புடைப்புச் சிற்பங்கள் வழிபாட்டில் உள்ளன என்பதற்கான அடையாளங்கள் இவையாகும்.[1]

ஆண்டிபட்டி, குப்பல்நத்தம், பரமன்பட்டி, சின்னக்கட்டளை, சென்னம்பட்டி, சேடபட்டி, ஆகிய கிராமங்களிலிருந்து பொதுமக்கள், பொய்கைமலை சமணர் குகைக்கு வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர். சித்திரா பவுர்ணமி அன்று இங்கு திருவிழா நடைபெறுகிறது. சமண தெய்வங்களுக்கு மக்கள் பொங்கலிட்டு படையலிடுகின்றனர். இப்பகுதியில் மழை பொய்த்தால் ஆண்கள் இக்கோவிலில் ஆடு பலி கொடுப்பதும் நடைபெறுகிறது.[1]

கல்வெட்டு

[தொகு]

இங்கு செதுக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர்கள் சிற்பத்தின் கீழே பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இங்கு செதுக்கப்பட்டுள்ள தீர்த்தங்கரர்களின் ஐந்து திருமேனிகளை ஐந்து அடியார்கள் செய்து வழங்கியுள்ளனர் என்ற செய்தியை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. இந்த ஐவருள் ஒருவர் பெண் அடியராவார்.[1] == சமணக் குகையின் காலம் பொய்கைமலையில் அமைந்துள்ள இக்குகைக் கோவில் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.[1] கி.பி. 9-10 ஆம் நூற்றாண்டுகளில் சமண சமயத்தை மீண்டும் தமிழ்நாட்டில் பரப்பிய அச்சணந்தி எனும் சமண சமயத் துறவி காலத்தில் இந்தப் புடைப்புச்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 குப்பல் நத்தம் சமணக் கோயில் தமிழிணையம் தமிழர் தகவலாற்றுப்படை
  2. Kuppalnatham Onefivenine
  3. பொய்கைமலை பரமன்பட்டி உசிலம்பட்டி Surendran Sura YouTube

வெளி இணைப்புகள்

[தொகு]