குணால், அரியானா
குணால் | |
---|---|
தொல்லியல் தளம் | |
ஆள்கூறுகள்: 29°37.3′N 75°39.5′E / 29.6217°N 75.6583°E | |
நாடு | ![]() |
மாநிலம் | அரியானா |
மாவட்டம் | பத்தேகாபாத் |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, அரியான்வி |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
குணால் (Kunal) என்பது அரப்பனுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகக் குடியேற்றமாகும். இது இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பதேகாபாத் மாவட்டத்திலுள்ள பதேகாபாத் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இராக்கிகர்கி மற்றும் காளிபங்கான் போன்ற மற்ற சிந்து சமவெளி நாகரிகத் தளங்களுடன் ஒப்பிடும்போது, குணால் ஒரு கிராமமாக இருந்தது.[1] குணாலில் நடந்த அகழ்வாராய்ச்சி சரசுவதி ஆற்றில் அரப்பனுக்கு முந்தைய பழங்குடி கலாச்சாரத்தின் 3 கட்டங்களைக் காட்டுகிறது.[2] குணால், அதன் பிற சமகாலத் தளங்களான பீர்த்தனா மற்றும் சரசுவதி - காகர் ஆற்றின் அமைப்பிலுள்ள இராக்கிகர்கி ஆகியவற்றுடன்,[3][4]பழமையான ஹரப்பனுக்கு முந்தைய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குணால், பாக்கித்தானிலுள்ள இரெக்மான்_தேரியின் பழைய கலாச்சார முந்தையது ஆகும்.[5] இது எதிர்கால உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் உள்ளது.[6]
குணால் பதேகாபாத் நகருக்கு வடகிழக்கே 30 கிமீ தொலைவிலும், ஹிசாருக்கு வடக்கே 70 கிமீ தொலைவிலும், சண்டிகருக்கு தென்மேற்கே 190 கிமீ தொலைவிலும், தில்லிக்கு வடமேற்கில் 230 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
அகழ்வாராய்ச்சிகளின் வரலாறு
[தொகு]1986 இல் சிந்து சமவெளி நாகரிகத் தளமாக குணால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, இங்கு 1992-93,1996-97, 1998-99, 1999-2000, 2001-2002, 2002-2003, 2017-2021 [7] ஆகிய ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 2023-24களில் நடந்த[8] ஆராய்ச்சி 20 மீ ஆழத்திற்குச் சென்று மூன்று அடுக்குகளையும் கண்டறிந்தது. மேலும் முதல் அடுக்கு 3 மீ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், புது தில்லியின்தேசிய அருங்காட்சியகம், அரியானா தொல்லியல் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் மட்பாண்டங்களின் அடிப்படையில், இது ஒரு தனி தொல்லியல் கலாச்சாரம்/துணை கலாச்சாரம் என குணால் கலாச்சாரம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குணால் கலாச்சாரம்
[தொகு]இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட் ஒரு பொத்தான் முத்திரை இந்த தளத்தின் கலாச்சாரம் கிமு 3300 ஆம் ஆண்டைச் சேர்ந்த இரெக்மான் தேரியின் முந்தைய தளத்தின் பழைய வம்சாவளியைக் காட்டுகிறது.[5] குணாலில் கண்டுபிடிக்கப்பட்ட கி.மு 4000 காலத்தைச் சேர்ந்த இந்த முத்திரையில், ஒரு பக்கத்தில் இரண்டு மான்களின் படமும், மறுபுறம் ஒரு வடிவியல் வடிவமும் இருந்தன. இது இரெக்மான்-தேரியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதிரியைப் போன்றது.[5]
அரப்பனுக்கு முந்தைய மிக பழமையான தளம்
[தொகு]இந்த தளம் ஆரம்பகால அரப்பனுக்கு முந்தைய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சரசுவதி ஆற்றில் அரப்பனுக்கு முன்பு இருந்த உள்ளூர் கலாச்சாரத்தின் மூன்று தொடர்ச்சியான கட்டங்கள் கண்டறியப்படுள்ளது. இதன்மூலம் அவர்கள் காளிபங்கான் மற்றும் லோத்தல் ஆகிய இடங்களுடன் வர்த்தகம் செய்துள்ளது தெரிய வருகிறது.[9] இந்திய துணைக் கண்த்தின் இந்த குன்றிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட அரசப் பொருட்களின் கண்டுபிடிப்பு, நடு ஆசியா மற்றும் ஈரானில் கிடைத்ததை விட மிகப் பழமையானது என அறியப்பட்டுள்ளது. பெண்களின் முழுமையான உடை, பழங்குடியினர் தலையில் அணியும் உடை, செம்பு ஈட்டி, வடிவியல் வடிவங்களுடன் கூடிய சோப்புக்கல் முத்திரைகள், (சிந்து சமவெளியில் முத்திரை தயாரிக்கும் பணி முதலில் இங்கே தொடங்கப்பட்டது என்பதை இது குறிக்கிறது) பழங்கால சுடுமண் பொருட்கள், அம்புத் தலைகள், மீன் கொக்கிகள், இரண்டு கிரீடங்கள், வளையல்கள், வெள்ளி மணிகள், தங்க பதக்கங்கள் மற்றும் நீல நிற இரத்தினக் கல் உள்ளிட்ட 12,000 க்கும் மேற்பட்ட அரை விலைமதிப்பற்ற கற்கள் ஆகியவையும் கண்டுபிடிப்புகளில் அடங்கும்.[2]
கலைப்பொருட்கள்
[தொகு]இங்கு கண்டெடுக்கப்பட்ட சுடுமண் பாண்ட வடிவமைப்புகளில் அரச மர இலைகள் மற்றும் கொம்புடன் கூடிய மாடு ஆகியவை அடங்கும். அவை முதிர்ந்த அரப்பன் முத்திரைகளில் காணப்படும் முக்கியமான மையக்கருத்துக்களாகும்.[10] எலும்புக் கருவிகள், சால்செடனியால் செய்யப்பட்ட நுண் பிளேடுகள், செம்பு மீன் கொக்கிகள் மற்றும் அம்புத் தலைகள் ஆகியவையும் இங்கு காணப்பட்டன.[10] ஆறு சோப்புக்கல் முத்திரைகள் மற்றும் வடிவியல் வடிவங்களுடன் ஒரு ஓட்டு முத்திரையும் கண்டுபிடிக்கப்பட்டன.[10] இந்த ஆறு முத்திரைகள் சதுர வடிவத்தில் சாம்பல் நிற கல்லால் செய்யப்பட்டிருந்தன. மேலும், வழக்கமான முதிர்ந்த அரப்பா முத்திரைகளை ஒத்திருந்தன.[9] மேலும் இந்த இடத்தில் செம்பு கம்பிகள், மோதிரங்கள், வளையல் துண்டுகள், வளையல்கள், பந்துகள், விலங்கு சிலைகள், மீன்பிடிக்கும் தூண்டில், பொம்மை வண்டி சட்டங்கள், வட்டு மற்றும் பொம்மைகள், கல் பந்துகள், ஓட்டு வளையல்கள் போன்ற சுடுமண் பொருள்களும் காணப்படுகின்றன.[5]
ஆபரணங்கள்
[தொகு]இந்த இடத்தில் இரண்டு வெள்ளி தலை அலங்காரங்கள், தங்க ஆபரணங்கள், அரை விலைமதிப்பற்ற கற்களின் மணிகள் உள்ளிட்ட பெரிய அளவிலான நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.[10] இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்களின் எண்ணிக்கையில் வெள்ளி வளையல்கள், செம்பு கருவிகள் போன்றவையும் அடங்கும்.[9]
செம்பு உருகுதல்
[தொகு]குன்றின் தென்மேற்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் செம்பு உருக்கும் உலைகளும், செம்பு உலோகப் பாளங்களும் மற்றும் அதன் கசடுகளும் இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.[5]
அரிசி
[தொகு]அரிசி (ஒருவேளை காட்டரிசி) அரியானாவில் உள்ள குணால் மற்றும் பாலு தளங்களிலிருந்து கண்டறியப்பட்டது.[9]
பாதுகாப்பு
[தொகு]குணால் தளத்திற்கு அரியானா அரசு பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை வழங்கியுள்ளது. மேலும் பாதுகாப்பிற்காக அதைச் சுற்றி ஒரு எல்லைச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற இந்த முக்கியமான தளம் ஆக்கிரமிப்பு அச்சுறுத்தலின் கீழ் உள்ளது. நிபுணர்கள் நிலத்தின் துல்லியமான அளவை தீர்மானிக்க தரையில் ஊடுருவும் ரேடார்கள் கொண்ட மிகப்பெரிய பகுதியை ஆய்வு செய்வதற்கான குறிப்பிட்ட திட்டத்தை கோரியுள்ளனர். அதைத் தொடர்ந்து அதன் பாதுகாப்பிற்காக அரசாங்கத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
தரையில் ஊடுருவும் ரேடார் ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டு நடைபாதைகளை இணைக்கும் 1.20 கி. மீ நீளமுள்ள செப்பனிடப்படாத பாதை, அதன் சீரமைப்பை மாற்றிய பின்னர் (தேவைப்பட்டால்) அமைக்க வேண்டும் என்று பாதுகாப்பாளர்களும் கிராமவாசிகளும் கோரியுள்ளனர்.
இதனையும் காண்க
[தொகு]- சிந்துவெளி நாகரிகம்
- சிந்துவெளிக் கட்டிடக்கலை
- சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்
- நாகரிகத்தின் தொட்டில்
- இந்து சமய வரலாறு
- ஆப்கானித்தானின் வரலாறு
- இந்திய வரலாறு
- பாக்கித்தான் வரலாறு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "In Haryana's Kunal village, a glimpse of life before Harappa".
- ↑ 2.0 2.1 Haryana Gazateer, Revennue Dept of Haryana, Capter-V.
- ↑ Museum at pre-Harappan site soon, The Tribune, 23 Dec 2020.
- ↑ McIntosh, Jane R. (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, Calif.: ABC-CLIO. pp. 68, 80, 82, 105, 113. ISBN 9781576079072.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Archaeological Survey of, India (2004). "Excavations at Kunal,Haryana". Indian Archaeology 1998-99 a Review: 11–12. http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201998-99%20A%20Review.pdf. பார்த்த நாள்: 13 July 2012.
- ↑ Karez System Cultural Landscape, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், accessed 10 July 2021.
- ↑ In Haryana's Kunal village, a glimpse of life before Harappa , Hindustan Times, 19 MAY 2019.
- ↑ 6000 साल पहले गड्ढा खोदकर घर बनाते थे लोग, साफ-सफाई का रखते थे ध्यान... हरियाणा में खुदाई के दौरान मिला प्रमाण, navbharat times,10 jan 2024.
- ↑ 9.0 9.1 9.2 9.3 McIntosh, Jane R. (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, Calif.: ABC-CLIO. pp. 68, 80, 82, 105, 113. ISBN 9781576079072.
- ↑ 10.0 10.1 10.2 10.3 Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India : from the Stone Age to the 12th century. New Delhi: Pearson Education. pp. 109, 145–6. ISBN 9788131711200.