குணங்குடி மஸ்தான் சாகிபு
மஸ்தான் மஸ்தான் சாகிபு (1792 - 1838: சென்னை) ஒரு இசுலாமிய தமிழ் அறிஞர். இவர் பல இசை உணர்வு மிக்க பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமிழ் சித்த மரபினரில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.[1]
வரலாறு
[தொகு]குணங்குடி மஸ்தான் சாகிபு இராமநாதபுரம் தொண்டிக்கு வடமேற்கில் பத்து மைல் தொலைவிலுள்ள குணங்குடி என்னும் சிற்றூரில் 1792 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் 'சுல்தான் அப்துல் காதிர்' என்பதாகும். இளமையிலேயே குர்ஆன் மற்றும் இசுலாமிய சமய சாத்திரங்களைக் கற்றுணர்ந்து 'ஆலிம்' (சமயக் கல்வி அறிஞர்) என்னும் பட்டம் பெற்றார்.
1813 ஆம் ஆண்டில் அவர் திரிசிரபுரம் சென்று அங்கே மௌலவி ஷாம் சாஹிப் என்பவரிடம் தீட்சை பெற்று ஞானயோக நெறியில் ஆழ்ந்தார். பின்னர் சிக்கந்தர் மலையென அழைக்கப்படும் திருப்பரங்குன்றம் சென்று அங்கே நாற்பது நாட்கள் 'கல்வத்' எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்தார். பின்னர் அறந்தாங்கிக்கு அருகிலுள்ள கலகம் என்ற ஊரில் ஆறு மாதங்களும், தொண்டியில் அவருடைய தாய்மாமனாரின் ஊரான வாழைத்தோப்பில் நான்கு மாதங்களும் தங்கி நிட்டை புரிந்தார். இவ்வாறே சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை போன்ற மலைகளிலும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் தங்கித் தவம் புரிந்தார்.
இறைகாதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகக் காதல் போதையில் வெறியேறியவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கி பித்தநடை கொண்டார். குப்பைமேடுகள் கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்தநடையையும் அற்புத சித்துகளையும் கண்ட மக்கள் அவரை 'மஸ்தான்' என அழைக்கலாயினர். அப்பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. (மஸ்த் என்ற பாரசீகச் சொல்லுக்கு போதைவெறி என்று பொருள். இறைகாதல் போதையில் வெறி பிடித்த ஞானியரை 'மஸ்தான்' என அழைப்பது மரபு)
ஏழு ஆண்டுகள் இவ்வாறிருந்து, பின்னர் வடநாடு சென்று பலருக்கு ஞானோபதேசம் செய்தார். இறுதியில் சென்னையை அடைந்து இராயபுரத்தில் பாவாலெப்பை என்பவருக்கு உரிமையான, முட்புதர்களும் மூங்கிற் காடும் சப்பாத்திக்கள்ளியும் மண்டிக் கிடந்த இடத்தில் தங்கலாயினார். பாவாலெப்பை குணங்குடியாரின் மகிமை உணர்ந்து அவ்விடத்திலேயே அவருக்கு ஆச்சிரமம் அமைத்துக் கொடுத்தார். இங்கே வாழ்ந்தபோது யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து யோகநிட்டையில் ஆழ்ந்திருந்தார். சில வேளைகளில் தாம் இயற்றிய கீர்த்தனங்களைப் பாடிக்கொண்டு ஊர்வலமாகச் செல்வதுமுண்டாம். அப்படிச் செல்லும்போது ஒருமுறை அங்கப்பநாயக்கன் தெருவிலுள்ள 'மஸ்ஜிதே மஃமூர்' என்ற பள்ளிவாசலுக்கும் வந்து சென்றதாகக் கூறுவர்.
குணங்குடியாரின் துறவு நிலையில் ஐயுற்ற சிலர் அவரது அரிய சித்துக்களைக் கண்ட பின்னர் அவரை மதித்துப் போற்றினர். அவரிடம் தீட்சை பெற்று பக்குவமடைந்தனர். அவ்வாறு தீட்சை பெற்றவர்களுள் அக்காலத்தில் சென்னையிலிருந்த ஆற்காடு நவாபும் ஒருவர். அவருடைய சீடர்களாக இசுலாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இருந்தனர். அவர்களில் மகாவித்துவான் சரவணப்பெருமாள் ஐயர், கோவளம் சபாபதி முதலியார் ஆகியோர் மிகப் பிரதானமானவர்களாக இருந்தனர்.
மஸ்தான் சாகிபு 1838 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1254, ஜமாதுல் அவ்வல் 14ம் நாள் திங்கட்கிழமை வைகறை நேரம்) இவ்வுலக வாழ்வைத் துறந்தபோது அவருக்கு வயது நாற்பத்து ஏழு. அவர் தங்கியிருந்த இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார். அவரை மக்கள் தொண்டியார் என்று அழைத்து வந்ததால் அவரிருந்த இடம் தொண்டியார்பேட்டை ஆயிற்று.
* நிராமயக்கண்ணி (100 பாடல்கள்)
[தொகு]ஆதி முதலே யகண்டபரி பூரணமென்று
ஓதுங் குணங்குடி கொண்டோனே நிராமயமே!
தேசிகனா னென்றே திருநடன மாடுகின்ற
வாசாம கோசரமே வாழி நிராமயமே!
* மனோன்மணிக்கண்ணி (100 பாடல்கள்)
[தொகு]மெய்தொழவு மேலும் மேலும்நந்தி கேஸ்வரனைக்
கைதொழு வுங்கனவு கண்டேன் மனோன்மணியே!
கோப்பாக கவும்உனையான் கொண்டாடிப் பாடவும்நீ
காப்பாக வுங்கனவு கண்டேன் மனோன்மணியே!
* அகத்தீசர் சதகம் (100 பாடல்கள்)
[தொகு]தாயனைய இன்பந் தனைத்தந்து தந்துகை
தழுவிநின் றருள் புரியவுந்
தந்தைதா யுந்தானே யாகவு மிருந்தெனைத்
தற்காத்து னருள்பு ரியவுஞ்
சேயென் றிரங்கியணை காலியின் கன்றெனச்
சீராட அருள்பு ரியவுஞ்
செங்கீரை யாடுசிறு மதலைபோற் கொஞ்சிநான்
செல்வமிட அருள்பு ரியவும்
பாயுமடை கால்கண்டு கரைபுரள வருமதிப்
பால்கொடுத் தருள்பு ரியவும்
பக்குவத் தோடுமவு னத்தொட்டி லுக்குட்
படுக்கவைத் தருள்பு ரியவும்
வாயுவைக் கட்டவுந் தவராஜ சிங்கமே
வரவேண்டும் மென்ற னருகே
மாகுணங் குடிவாழு மென்னகத்தீசனே
மவுனதே சிகநா தனே.
* நந்தீசர் சதகம் (51 பாடல்கள்)
[தொகு]ஆதியந்தங் கடந்தவுமை யாளருள் நாதாந்தச்
சோதியந்தங் கடந்தசெழுஞ் சுடரேநந் தீஸ்வரனே
முடியடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே
அடிமுடியாய் நின்றநடு அணையேநந் தீஸ்வரனே
* ஆனந்தக் களிப்பு (38 பாடல்கள்)
[தொகு]கொடிகட்டிக் கொண்டெழு கோடி-தனங்
குவித்தந்த மகிழ்ச்சியாற் கூத்துக ளாடி
கெடுபுத்தி யுடையோரைக் கூடி-யானுங்
கெட்டலையாமலே கெதிபெற நாடி
இரக்கத் துணிந்துகொண் டேனே- எனக்
கிருக்குங் குறைமுழுதும் நிகழ்த்திக்கொண் டேனே.
இவரைப் பாராட்டி எழுதப்பட்டவை
[தொகு]- குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி - ஐயாசாமி
- நான்மணி மாலை - சரவணப் பெருமாளையர்
மேற்கோள்கள்
[தொகு]Kunakudi
- ↑ பா. இறையரசன். (1997). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: பூம்புகார் பதிப்பகம்.
- குணங்குடியார் பாடற்கோவை - கவிக்கோ அப்துல் ரகுமான்