உள்ளடக்கத்துக்குச் செல்

குடும்ப அட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடும்ப அட்டை (Ration card) வழங்கும் திட்டம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பதிவு செய்து வைத்திருப்பதற்காகப் பல்வேறு நாடுகளிலும் உள்ள ஒரு திட்டமாகும். இத்திட்டம் தெற்கு, தென்கிழக்காசிய நாடுகள், சில அரபு நாடுகள் போன்றவற்றில் நடைமுறையில் இருக்கிறது.

இந்தியா

[தொகு]

இந்தியாவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர் விபரங்களுடன் குடும்ப அட்டை (ரேசன் கார்டு, Ration card) வழங்கப்படுகிறது. குடும்ப அட்டையானது இந்தியக் குடிமகனுக்கு மிக முக்கிய ஆவணமாகும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995 அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி வழங்கல் விநியோகம் போன்றவற்றை நியாயமான முறையில் வழங்கிட மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் குடும்ப அட்டை இன்றியமையாதது. குடும்ப அட்டை ஒரு முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். அது தகுந்த அதிகாரியின் மூலம் பொதுவிநியோக முறைக்காக மாநில அரசால் வழங்கப்படுகிறது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், கீழ் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இவ்வட்டைகள் வேறுபடுகின்றன.

தமிழ்நாடு

[தொகு]

இந்தியாவில் 1964-65இல் 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி, 65-66-இல் 72.3 மில்லியன் டன்களாகக் குறைந்தது. எனவே இந்தியா கடும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்கி இருந்தது. இந்தத் தருணத்தின்போது தமிழ்நாட்டில் குடும்ப அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966 நவம்பர் 16இல் இந்தத் திட்டம் வந்தது. என்றாலும், எல்லா குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை. 1969இல் மு. கருணாநிதி முதல்வரான பிறகு, 1972இல் தமிழ்நாடு பொது விநியோக கழகம் (சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன்) தொடங்கப்பட்டது. 1975க்குள் தமிழ்நாட்டில் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.[1]

தமிழ் நாட்டில் தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் வழியாக இந்தக் குடும்ப அட்டை அச்சிட்டு அளிக்கப்படுகிறது. இந்தக் குடும்ப அட்டைகளைக் கொண்டு தமிழ்நாட்டின் நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கறியெண்ணெய் போன்ற சில அத்தியாவசியப் பொருட்களை அரசின் சலுகை விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டையை வைத்தே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச மின்சார உரல் (கிரைண்டர்), இலவச மின்சார அரைப்பான் (மிக்ஸி) ஆகியவையும் வழங்கப்பட்டன. அரசின் பல நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. மேலும் வருவாய்த்துறையின் அனைத்து சான்றுகளும் இந்த குடும்ப அடையாள அட்டையைக் கொண்டே பெற முடிகிறது. பல இடங்களில் இதனை முகவரிச் சான்றாகவும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.

குடும்ப அட்டை வகைகள்

[தொகு]
  • பச்சை நிற அட்டை
  • வெள்ளை நிற அட்டை
  • காக்கி அட்டை
  • நீல நிற அட்டை

புதிய அட்டை பெற தகுதியுள்ளவர்கள்

[தொகு]
  • விண்ணப்பதாரர் இந்தியக்குடியுரிமை பெற்றவராக இருக்கவேண்டும்.
  • தனி சமையலறையுடன் தனியாக வசிக்க வேண்டும்.
  • தமிழகத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும்.
  • வேறு மாநிலத்தில் குடும்ப அட்டை பெற்றிருக்கக்கூடாது.
  • அட்டைபெற்ற மாநிலத்தில் பல அட்டைகளில் பெயர்கள் இடம் பெறக்கூடாது.

இந்தோனேசியா

[தொகு]

இந்தோனேசியாவில் இது கார்து கெளுவார்கா (Kartu Keluarga) என்று அழைக்கப்படுகிறது. தேர்தலில் வாக்களித்தல், அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பவற்றைப் பெறுதல், ஏழை மக்களுக்குச் சலுகைகள் வழங்குதல் போன்றன இடம்பெறுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. முரளிதரன் காசி விஸ்வநாதன் (10 நவம்பர் 2018). "இணையகளம்: விஜய்ண்ணாவும் முருகதாஸ்ண்ணாவும் பிறந்திராத நாட்களில் நடந்த வரலாறு!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடும்ப_அட்டை&oldid=4031743" இலிருந்து மீள்விக்கப்பட்டது