உள்ளடக்கத்துக்குச் செல்

குடியரசு (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடியரசு
Title page of an edition of Plato's Republic published by Cambridge University in 1713
நூலாசிரியர்பிளேட்டோ
உண்மையான தலைப்புΠολιτεία
நாடுபண்டைக் கிரேக்கம்
மொழிகிரேக்க மொழி
பொருண்மைஅரசியல் தத்துவம்
வெளியிடப்பட்ட நாள்
கி.மு 380 காலகட்டத்தில்

குடியரசு (The Republic, Politeia) என்ற நூல் சாக்கிரட்டீசு உரையாடல் நடையில் ஏறத்தாழ கி.மு 380களில் பிளேட்டோவால் எழுதப்பட்டதாகும். இது நீதியை வரையறுப்பதுடன் நீதிமிகு மாந்தர், நகரம்-அரசுகளின் தன்மையையும் ஒழுங்கையும் விவரிக்கிறது.[1] இது பிளேட்டோவின் மிகவும் அறியப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. மெய்யியல் மற்றும் அரசியல் தத்துவம் துறைகளில் அறிவுசார்ந்தும் வரலாற்றிலும் மிகவும் தாக்கமேற்படுத்திய நூலாகவும் கருதப்படுகிறது.[2][3] இந்த நூலில், சாக்கிரட்டீசும் பிற ஏதென்சு நகரத்தினரும் வெளிநாட்டவரும் நீதியின் பொருள் குறித்து உரையாடுகின்றனர். நேர்மையான மனிதன் நேர்மையற்ற மனிதனை விட மகிழ்ச்சியாக உள்ளானா என்பதை ஆராய்கின்றனர். அக்கால பல்வேறு ஆட்சிகளைக் குறித்தும் ஒப்பிட்டு உரையாடுகின்றனர். பங்கேற்போர் உயிரின் வெவ்வேறு வடிவங்கள் குறித்தும் அழியாமை குறித்தும் உரையாடுகின்றனர். சமூகத்தில் மெய்யியலாளர்கள் மற்றும் கவிஞர்களின் பங்கு பற்றியும் உரையாடுகின்றனர்.[4]

பிளேட்டோவின் வாதங்கள் (எளிமையாக)

[தொகு]

பிளேட்டோ தனிநபர்களும் சமூகங்களும் ஒரே தன்மை உடையனவாகக் கருதினார்.

மக்கள் மூன்று வகையானவற்றால் இயக்கப்படுவதாக உணர்ந்தார்:

ஓர் நல்ல மனிதன் இவை எல்லாவற்றாலும் இயக்கப்பட்டாலும் இறுதியில் அவனது மனமே மற்ற இரண்டு தேவைகளையும் கட்டுப்படுத்தும்.

இந்த மூன்று கூறுகளின் தேவைகளையும் நிறைவேற்றாதவனும் அல்லது மற்ற இரு கூறுகளை மனதால் கட்டுப்படுத்தவியலாதவனும் மகிழ்ச்சியின்றி வாழ்வான். மனதால் கட்டுப்படுத்தவியலாது மனநிலை பிறழவும் கூடும். அல்லது பின்னால் தாங்கள் வருந்தக்கூடியக் காரியங்களைச் செய்வர். அவர்களை மற்றவர்களும் வெறுப்பதால் மேலும் துன்பத்திற்கு ஆளாவார்கள். அவர்கள் ஓர் ஆட்சியமைப்பு இல்லாத நாட்டிற்கு ஒப்பாவார்கள்.

பிளேட்டோ சமூகமும் இதைப் போன்றே மூன்று வகையான மக்களால் இயக்கப்படுவதாக கருதினார்.

சமூகத்திற்கு இந்த மூன்று வகையான மக்களும் தேவை; மெய்யியலாளர்கள் மட்டுமே நல்ல மனிதர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் தங்கள் சுயத்தாலும் உடலாலுமே கட்டுப்படுத்தப்படுவர்; மனதால் அல்ல. படைவீரர்கள் தங்கள் மனம் கூறுவதைக் கேட்க மாட்டார்கள்; பணியாளர்கள் மனம் மற்றும் சுயம் கூறுவதையும் கேட்க மாட்டார்கள். இதனால் மெய்யியலாளர்களே அரசாட்சி செய்ய வேண்டும்.மற்றவர்கள் படைவீரர்களாகவும் பணியாளர்களாகவுமே இருக்க வேண்டும்.

உள்ளடக்க கட்டமைப்பு

[தொகு]

குடியரசு நூலின் உள்ளடக்கம் குறித்து பலவித பொருள் விளக்கங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை கீழே காணலாம். இவை முழுமையான உள்வாங்கலைக் கொண்டவையாக இல்லாதிருக்கலாம்; ஆயினும் தற்கால புரிதலுக்கு ஒர் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

பெர்ட்ரண்டு ரசல்

[தொகு]

1945இல் வெளியான மேற்கத்திய மெய்யியலின் வரலாறு (A History of Western Philosophy) என்ற தமது நூலில் பெர்ட்ரண்டு ரசல் குடியரசு மூன்று பாகங்களைக் கொண்டதாக அடையாளம் கண்டார்:[5]

  1. நூற்தொகுதி I–V: நீதியை வரையறுப்பதிலிருந்து விலகி ஆதர்ச சமூகத்தை விவரிக்கும் யுடோப்பியா, காவலர்களுக்கான கல்வி;
  2. நூற்தொகுதி VI–VII: ஆதர்ச சமூகங்களின் ஆதர்ச அரசர்களாக “மெய்யியலாளரை” வரையறுக்கிறது;
  3. நூற்தொகுதி VIII–X: நடைமுறை அரசு அமைப்புக்களின் நல்லன, அல்லனவற்றை ஆய்கிறது.

இரண்டாம் பாகத்தின் மையக்கருத்து குகை உருவகம் (Allegory of the Cave) என்ற கதையிலும் பிளேட்டோவின் பிற ஆக்கங்களிலும் படிந்துள்ளது. மூன்றாம் பாகம் ஐந்து வகையான ஆட்சிகள் குறித்து விவாதிக்கின்றன.

கார்ன்போர்டு, இல்டர்பிராண்ட், வோகெலின்

[தொகு]

குடியரசு நூலினை கிரேக்கத்தில் சிறப்பான வழிமுறையில் துணைப் பிரிவுகளாக பிரித்து வழங்கிய பெருமை பிரான்சிசு கார்ன்போர்டு, குர்த் இல்டர்பிராண்ட் மற்றும் எரிக் வோகெலினுக்கு உண்டு. இவர்களது துணைப்பிரிவுகளாவன:

முகவுரை
I.1. 327a—328b. பிரெயசுக்கு இறக்கம்
I.2—I.5. 328b—331d. செபாலசு. பழைய தலைமுறையின் நீதி
I.6—1.9. 331e—336a. போல்மார்சுசு. நடுத் தலைமுறையின் நீதி
I.10—1.24. 336b—354c. தராசிமச்சூசு. சோஃபிஸ்ட்டின் நீதி
அறிமுகம்
II.1—II.10. 357a—369b. வினா: அநீதியை விட நீதி சிறந்ததா?
பாகம் I: நகர அரசுகளின் தோற்றமும் சீர்மையும்
II.11—II.16. 369b—376e. நகர அரசுகளின் தோற்றம்
II.16—III.18. 376e—412b. காவலர்களின் கல்வி
III.19—IV.5. 412b—427c. நகர அரசுகளின் அங்கங்கள்
IV.6—IV.19. 427c—445e. நகர அரசுகளில் நீதி
பாகம் II: கருத்துருவின் உள்ளடக்கம்
V.1—V.16. 449a—471c. நகர அரசுகள் மற்றும் எலனீசின் உடலியற் அலகு
V.17—VI.14. 471c—502c. மெய்யியலாளர்களின் அரசாண்மை
VI.19—VII.5. 502c—521c. அகத்தான் குறித்த கருத்துரு
VII.6—VII.18. 521c—541b. மெய்யியலாளர்களின் கல்வி
பாகம் III: நகர அரசுகளின் வீழ்ச்சி
VIII.1—VIII.5. 543a—550c. செல்வர் ஆட்சி
VIII.6—VIII.9. 550c—555b. சிலவர் ஆட்சி
VIII.10—VIII.13. 555b—562a. மக்களாட்சி
VIII.14—IX.3. 562a—576b. கொடுங்கோன்மை
முடிபுரை
IX.4—IX.13. 576b—592b விடை: நீதி அநீதியை விட சிறந்தது.
முடிவுரை
X.1—X.8. 595a—608b. நகல் கலைகளை ஒதுக்குதல்
X.9—X.11. 608c—612a. ஆவியின் அழிவின்மை
X.12. 612a—613e. வாழ்வில் நீதியின் பரிசுகள்
X.13—X.16. 613e—621d. இறந்தவருக்கு தீர்ப்பு

மாநகரம் குறித்த கருத்தியல்— சிறந்த வடிவம் குறித்த கருத்துரு, அகத்தான் — பல வரலாற்று உள்ளடக்கங்களைக் கொண்டது. குடியரசின் மையப்பகுதி, பாகம் II, nos. 2–3, மெய்யியலாளர்களின் அரசாட்சியை விரிக்கிறது. இங்கு அகத்தான் குறித்த நோக்கு குகை உருவகத்துடன் விளக்கப்படுகிறது. அரசாட்சியின் பலவகை வடிவங்களும் விளக்கப்படுகின்றன. இந்த மையப்பகுதிக்கு முன்பும் பின்பும் ஓர் சிறந்த நகர அரசினை அமைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதாக அமைந்துள்ளது. பாகம் II, no. 1, திருமணம், மக்களின் சமூகம், காவலர்களின் பொருட்கள் குறித்தும் ஹெலனிய மக்களிடம் காணப்பட்ட போர்முறையில் கட்டுப்பாடுகள் குறித்தும் உரையாடப்படுகிறது. இங்கு பகுதியும் பொதுவுடமையான நகர அரசு விவரிக்கப்படுகிறது. Part II, no. 4, நகர அரசின் தன்மையையும் ஒழுங்கையும் காப்பாற்றும் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மெய்யியல் கல்வி குறித்து விவாதிக்கப்படுகிறது.

பாகம் IIஇல் விளக்கப்படும் கருத்துருவின் உள்ளடக்கத்தின் முன்னதாக பாகம் Iஇல் நகர அரசுகளின் பொருளியல் சமூக ஒழுங்கைப் பற்றியும் பின்னதாக பாகம் IIIஇல் ஒழங்கிழந்த சமூகங்களின் சரிவு குறித்த ஆய்வும் இடம் பெற்றுள்ளது. கருத்துருவின் உள்ளடக்கம், தோற்றம், மற்றும் வீழ்ச்சி குறித்த இந்த மூன்று பாகங்களும் உரையாடலின் முதன்மை உள்ளடக்கமாக அமைந்துள்ளன.

அறிமுகமும் முடிபுரையும் குடியரசின் உள்ளடக்கத்திற்கு கட்டமைப்பாக விளங்குகின்றன. சரியான அரசமைப்பிற்கான உரையாடலில் வினாக்கள் எழுப்பப்படுகின்றன: “அநீதியை விட நீதி சிறந்ததா?” “நேர்மையான மனிதன் நேர்மையற்ற மனிதனை விட நல்வாழ்வு பெறுகிறானா ?” முதல் வினாவிற்கான விடையாக “நீதி அநீதியை விட சிறந்தது” பகுதி அமைந்துள்ளது. இந்த உள்ளடக்கங்கள் அனைத்திற்கும் மேலாக முகவுரை (நூல் I) மற்றும் முடிவுரை (நூல் X) பகுதிகள் உள்ளன. முகவுரையில் பொதுமக்கள் நீதி குறித்து கொண்டிருக்கும் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. முடிவுரையில் காரணம் மீதன்றி நம்பிக்கை அடிப்படையில் உயிரின் அழிவின்மை குறித்தும் புதிய கலைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Brickhouse, Thomas and Smith, Nicholas D. Plato (c.427-347 BC), The Internet Encyclopedia of Philosophy, University of Tennessee, cf. Dating Plato's Dialogues.
  2. National Public Radio (ஆகத்து 8, 2007). Plato's 'Republic' Still Influential, Author Says. Talk of the Nation.
  3. Plato: The Republic பரணிடப்பட்டது 2018-09-20 at the வந்தவழி இயந்திரம். Plato - His Philosophy and his life, allphilosophers.com
  4. Baird, Forrest E. (2008). From Plato to Derrida. Upper Saddle River, New Jersey: Pearson Prentice Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-158591-6. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  5. பெர்ட்ரண்டு ரசல், History of Western Philosophy, begin of Book I, part 2, ch. 14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியரசு_(நூல்)&oldid=3580629" இலிருந்து மீள்விக்கப்பட்டது