குச் குச் ஹோத்தா ஹை (இந்தித் திரைப்படம்)
குச் குச் ஹோத்தா ஹை | |
---|---|
இயக்கம் | கரண் ஜோஹர் |
தயாரிப்பு | யஷ் ஜோஹர் ஹீரு ஜோஹர் |
கதை | கரண் ஜோஹர் |
இசை | ஜதின்-லலித் |
நடிப்பு | சாருக் கான் கஜோல் சல்மான் கான் ராணி முகர்ஜி சானா சாயீது |
ஒளிப்பதிவு | சந்தோஷ் துண்டியில் |
படத்தொகுப்பு | சஞ்சய் சங்க்லா |
கலையகம் | தர்மா புரொடக்சன்சு |
விநியோகம் | யஷ் ராஜ் பிலிம்சு |
வெளியீடு | அக்டோபர் 16, 1998 |
ஓட்டம் | 185 நிமிடங்கள்[1] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | மதிப்பீடு.₹100 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | மதிப்பீடு.₹1.07 பில்லியன்[2] |
குச் குச் ஹோத்தா ஹை (कुछ कुछ होता है, தமிழ் மொழிபெயர்ப்பு: ஏதோ... ஏதோ நடக்கிறது) பரவலான ஆங்கிலச் சுருக்கம் KKHH, 1998ஆம் ஆண்டில் வெளியான காதலும் நகைச்சுவையும் நிறைந்த இந்தித் திரைப்படமாகும். அக்டோபர் 16, 1998 அன்று ஒரே நேரத்தில் இந்தியாவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் வெளியிடப்பட்டது. இதனை கரண் ஜோஹர் எழுதி இயக்கினார். பாலிவுட் திரைகளில் பரவலாக புகழ்பெற்றிருந்த இணையர் சாருக் கானும், கஜோலும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இது அவர்கள் நான்காம் முறையாக இணைந்து நடித்த திரைப்படமாக அமைந்தது. மற்றொரு துணை கதாபாத்திரத்தில் ராணி முகர்ஜியும் சல்மான் கானும் நடித்தனர். சானா சாயீது இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.
கதைச்சுருக்கம்[தொகு]
ராகுலும் (ஷாருக் கான்) அஞ்சலியும் (கஜோல்) ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். ராகுல் அழகாகவும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நோக்குபவராகவும் உள்ளார். அஞ்சலி, ராகுல் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர். ராகுல் கல்லூரியில் பெண்கள் பின்னால் செல்வதை அஞ்சலி விரும்புவதில்லை. ஆனால் ராகுல் இலண்டனிலிருந்து வந்த கல்லூரித்தலைவரின் மகள் டினாவை (ராணி முகர்ஜி) காதலிக்கிறார். ராகுல் டினாவைப் பார்த்து, அஞ்சலி பொறாமைப்பட ஆரம்பிக்கிறார்; அப்போதுதான் ராகுலுடனான தனது நட்பு நட்பையும் கடந்து காதல் என்பதை உணர்கிறார். டினாவும் ராகுலைக் காதலிக்கிறாள், ஆனால் இதற்கிடையில் அவள் அஞ்சலியும் ராகுலைக் காதலிக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்கிறாள். இவ்வகையாக காதல் முக்கோணம் உருவாகிறது, ராகுல்,டினாவிற்கு விட்டுக்கொடுத்து அஞ்சலி கல்லூரியை விட்டு வெளியேறுகிறாள்.
ராகுலும் டினாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். டினா கருவுற்றதும் அவளது பிரசவத்தில் சிக்கல் இருப்பது தெரிய வருகிறது. அதனைத் தன் கணவனிடம் மறைத்த டினா, தனது மறைவிற்குப் பிறகு ராகுலை அஞ்சியுடன் சேர்த்து வைக்கத் திட்டமிடுகிறாள். தனக்குப் பிறக்கும் மகளுக்கு அஞ்சலியின் பெயரை வைக்க ராகுலை வற்புறுத்துகிறாள். பிறக்கப்போகும் குழந்தைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு கடிதமாக எட்டு கடிதங்களை எழுதி அவற்றை ராகுலின் தாயிடம் கொடுத்துவிட்டு இறக்கிறாள். அந்தக் கடிதங்களில் கல்லூரி வாழ்க்கையும் ராகுல் அஞ்சலி, டினாவின் முக்கோணக் காதல் விவரிக்கப்படுகிறது. திரைப்படத்தில் இதன் மூலமாகவே பின்நகர்வாக கதை சொல்லப்படுகிறது. அஞ்சலி 8 வயதாகும்போது, தனது கடைசி கடிதத்தில் ராகுலுடன் கல்லூரித் தோழி அஞ்சலியை சேர்த்து வைக்கவேண்டும் என மகளை வேண்டுகிறாள். இதனிடையே மூத்த அஞ்சலிக்கு அமானுடன் (சல்மான் கான்) திருமண நிச்சயம் செய்யப்படுகிறது.
சிறுமி அஞ்சலி மூத்த அஞ்சலியைத் தேடி சிம்லாவில் நடைபெறவுள்ள வேனிற்காலப் பயிற்சிக்கு அவர் வரவிருப்பதை அறிகிறாள். அங்கு செல்ல தந்தை ராகுல் மறுத்தபோதும் டினாவின் கடிதங்களை தன் பாட்டிக்கு காண்பித்து அவரது துணையுடன் தந்தைக்குத் தெரியாது சிம்லா பயிற்சி வகுப்பிற்கு செல்கிறாள். அங்கு மூத்த அஞ்சலி சிறுமி ராகுல்,டினா இணையரின் குழந்தை எனவும் டினாவின் மறைவையும் தெரிந்து கொள்கிறாள். தனக்கு உடல்நிலை சரியில்லாததைப் போல நடித்து சிறுமி அஞ்சலி தனது தந்தை ராகுலை அங்கு வரவைக்கிறாள். அங்கு சந்திக்கும் ராகுலும் மூத்த அஞ்சலியும் மீண்டும் தங்கள் காதலை உணர்கின்றனர். ஆனால் விரைவிலேயே தனக்கும் அமானுக்கும் நடக்கவிருக்கும் நிச்சயவிழாவால் அஞ்சலி குழம்புகிறாள். ராகுலும் அமனும் சந்திக்கையில் அஞ்சலியை திருமணம் செய்யவிருப்பதை அமன் தெரியப்படுத்துகிறார். இதனால் ராகுலும் விலகிக்கொள்ள, இதனால் அஞ்சலி அவருக்குத் தன்மீது காதலில்லை, நட்புதான் இருந்தது என கருதுகிறாள். ஆனால் நிச்சயவிழா நடக்கவிருக்கும் வேளையில் தனது காதலை ராகுல் அஞ்சலியிடம் தெரிவிக்கிறார். இருப்பினும் கடைசிநேரத்தில் என்ன செய்வதென அறியாது அஞ்சலி கண்கலங்குகிறாள். இதனைக் கவனித்த அமன் அஞ்சலியின் மனம் ராகுலிடம் உள்ளதை அறிந்து கொண்டு இருவரையும் சேர்த்து வைக்கிறார். சிறுமி அஞ்சலிக்கு தாய் டினா அரூபமாக வாழ்த்து கூறுகிறாள்.
தயாரிப்பு[தொகு]
கரன் ஜோஹர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வெற்றிக்காக காத்திருந்த யஷ்ராஜ் பிலிம்சிற்கும் நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கியிருந்த ராணி முகர்ஜிக்கும் இது நல்ல முன்னேற்றத்தைத் தந்தது. நண்பர் ஆதித்யா சோப்ராவைப் போலவே, கரன் ஜோகரும் ஒரு காதல் கதையுடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இந்த படம் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளது. கலைஞர்களுக்கான ஆடைகளை சிறப்பாக மனிஷா மல்ஹோத்ரா வடிவமைத்துள்ளார், மேலும் திரைப்படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்கு உரியது. ஜோஹர் தனது முதல் படத்தில் சிறந்த இயக்குநராக பெயர் பெற்றார். இந்தத் திரைப்படம் சாருக்கானுடைய மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சானா சயீத் சிறுமி அஞ்சலியின் பாத்திரத்தில் மிகவும் நல்ல முறையில் நடித்திருக்கிறார். திரைப்படத்தின் கதையானது "மை பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் வெட்டிங்" எனும் ஆங்கில திரைப்படத்தை ஒட்டி உள்ளது. ஜாதின் லலித் மிகச் சிறந்த இசையை வழங்கியுள்ளார்.
வெளியீடு[தொகு]
இத்திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.[3]
திரைப்படப் பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்தின் பாடல்கள் மிகப் பரவலானப் பாராட்டைப் பெற்றன.1998ஆம் ஆண்டில் மிகவும் விற்பனையான திரைப்படப் பாடல் வட்டாக திகழ்ந்தது.[4]
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | கலைஞர்(கள்) | நீளம் | |||||||
1. | "குச் குச் ஹோத்தா ஹை" | உதித் நாராயண், ஆல்கா யாக்னிக் | 4:56 | |||||||
2. | "கொயி மில் கயா" | உதித் நாராயண், ஆல்கா யாக்னிக், கவிதா கிருஷ்ணமூர்த்தி | 7:16 | |||||||
3. | "சாஜனி கர் ஆயே" | குமார் சானு, ஆல்கா யாக்னிக், கவிதா கிருஷ்ணமூர்த்தி | 7:14 | |||||||
4. | "குச் குச் ஹோத்தா ஹை (துயர்)" | ஆல்கா யாக்னிக் | 1:26 | |||||||
5. | "யெ லட்கா ஹை தீவானா" | உதித் நாராயண், ஆல்கா யாக்னிக் | 6:36 | |||||||
6. | "துஜே யாத் ந மேரி ஆயி" | ஆல்கா யாக்னிக், மன்பிரீத் அக்தர், உதித் நாராயண் | 7:03 | |||||||
7. | "இரகுபதி இராகவ்" | ஆல்கா யாக்னிக், சங்கர் மகாதேவன் | 2:05 | |||||||
8. | "லட்கி படி அஞ்சானி ஹை" | குமார் சானு, ஆல்கா யாக்னிக் | 6:23 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kuch Kuch Hota Hai (1998) – British Board of Film Classification". 7 January 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 November 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 "Kuch Kuch Hota Hai Box office". Box Office India. 22 July 2015. 5 October 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 July 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "K2H2 huge hit at box office". 30 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "K2H2 most sold music album of 1998". 14 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 September 2012 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
![]() |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: குச் குச் ஹோத்தா ஹை (இந்தித் திரைப்படம்) |