குக்கூ காட்டுப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குக்கூ காட்டுப் பள்ளி (Cuckoo Forest School) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவண்ணாமலை சாலையில் சிங்காரப்பேட்டை அருகில் புளியனூர் என்ற கிராமத்தின் மலை அடிவாரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பாரம்பரிய கட்டிடக் கலையில் இயங்குபவர்கள், சமூக ஆர்வலர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என ஒரு பட்டாளத்தை பத்து நாட்கள் களத்தில் இறக்கி மண்ணை மட்டுமே கொண்டு காட்டுப்பள்ளிக்கான முதல் கட்டப் பணியை முடித்துள்ளனர். அங்கிருந்த மண்ணைக் குழைத்து, செங்கல் உருவாக்கி வெயிலில் காய வைத்து அடுக்கி மேலே கட்டிடம் எழும்பியுள்ளது.

இது காலை 9 மணி முதல் 4 மணி வரை இயங்கும் வழமையான பள்ளி அல்ல. அவ்வப்போது சில பயிற்சி பட்டறைகளை நடக்கின்றன. குழந்தைகளுடன், குறிப்பாக கிராமத்து மாணவர்களுடன் இப்பள்ளி தொடர்ந்து இயங்குகிறது. சுதந்திரமான, மகிழ்ச்சிகரமான, வகுப்பறை இல்லா கல்வியை வழங்குவது இப்பள்ளியின் நோக்கமாகும்.[1]

செயல்பாடுகள்[தொகு]

  • பள்ளி குழந்தைகளுக்கு பெரிய ஆளுமைகளை அறிமுகம் செய்தல்
  • தற்சார்பு வாழ்வியல் சார்ந்த பயிற்சி பட்டறைகளை நடத்துதல்
  • மாற்றுக் கல்வி குறித்த பயிற்சி பட்டறைகளை நடத்துதல்
  • குழந்தைகளின் திறன் வளர்க்கும் நிகழ்வுகளை ஒருங்கினைத்தல்
  • இயற்கையோடு இனைந்த வாழ்வினை முன்னெடுத்தல்

கோட்பாடுகள்[தொகு]

குக்கூ காட்டுப் பள்ளியின் அமைப்பு ஆசிரியர்களுடன் மாணவர்களும் தங்கி இருந்து கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகும். இங்கு புத்தகங்கள் இருக்கும் ஆனால் தேர்வு, தண்டனை, வீட்டுப்பாடம் போன்ற அழுத்தங்கள் மாணவர்களுக்கு இருக்காது. சமூகத்தில் வாழ்வதற்கான அடிப்படைத் திறன்கள் மற்றும் மொழி சார்ந்த திறன்கள் சிறப்பாக அவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. உணவு உற்பத்தி, நெசவு, பாரம்பரிய விளையாட்டுகள், கலைகள் போன்றனவும் கற்றுத் தரப்படுகின்றன.[2]

நிர்வாகிகள்[தொகு]

நிர்வாகிகள் அனைவரும் இளைஞர்களாகவே உள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களில் பயின்று பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய பலர் தன் வருமானத்தை பெரிதென கருதாமல் தன்னார்வலர்களாக இங்கு பணியாற்றி வருகின்றனர்.

பிற பணிகள்[தொகு]

  • கல்வி மற்றும் இயற்கை விவசாயம் சார்ந்த புத்தகங்களை பதிப்பிடுதல்
  • தமிழர்களின் மரபு மற்றும் விவசாய உத்திகளை புதுப்பித்தல், விதை சேகரிப்பு
  • மாடித் தோட்டம் பற்றி பயிற்சி அளித்தல்
  • சிறார்களுக்கான மாத இதழ் நடத்துதல்

மேற்கோள்கள்[தொகு]