குகன் ஆனந்தன் இறப்பு
குகன் ஆனந்தன் (ஆங்கிலம்: Kugan Ananthan); (பிறப்பு: 1987 - இறப்பு: 20 சனவரி 2009) என்பவர் அரச மலேசிய காவல் துறைக் கைதியாக இருந்த போது காவல் துறை அறையில் மரணம் அடைந்தவர். கார்களைத் திருடி இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள தைபான் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். அவர் தடுத்து வைக்கப்பட்டு இருந்த காவல் நிலைய அறையிலேயே ஐந்து நாட்கள் கழித்து மரணம் அடைந்தார்.[1]
இவரின் மரணம் மலேசியாவிலும் அனைத்துலக அளவிலும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது.[2] குகன் ஆனந்தன் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கலாம்; ஆகவே அவருடைய மரணம் குறித்து மலேசிய அதிகாரிகள் பாரபட்சமற்ற, விரைவான விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று பன்னாட்டு பொதுமன்னிப்பு அமைப்பும் (Amnesty International) அறிக்கை வெளியிட்டது.
பொது
[தொகு]குகன் ஆனந்தன் எப்படி இறந்தார் எனும் காவல் துறையின் கூற்றை அவரின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். சம்பவம் நடந்த இரவு, குகனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனை சவக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது குகனின் குடும்ப உறுப்பினர்களும்; இந்திய சமூக ஆர்வலர்களும்; ஏறக்குறைய 50 பேர் செர்டாங் மருத்துவமனை சவக் கிடங்கில் முற்றுகையிட்டனர்.
அவர்களில் அப்போதைய ம.இ.கா இளைஞர்ப் பகுதியின் அதிகாரி வேள்பாரி (துன் சாமிவேலுவின் புதல்வர்); இரண்டாவது சவப் பரிசோதனைக்கான அறிகையைப் பெறுமாறு ம.இ.கா. இளைஞர்ப் பகுதித் தலைவர் டத்தோ டி. மோகனைக் கேட்டுக் கொண்டார்.
செர்டாங் மருத்துவமனை சவக்கிடங்கில் பிரதமர் துறையின் துணை அமைச்சர்கள், செனட்டர் டி.முருகையா; டத்தோ எஸ். கே. தேவமணி ; காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம்; ஆகியோரும் உடனிருந்தனர்.[3]
காயத்தின் அறிகுறிகளைச் சித்தரிக்கும் படங்கள்
[தொகு]அவர்களில் சிலர் குகன் ஆனந்தனின் உடலைப் புகைப்படம் எடுத்தனர். காயத்தின் அறிகுறிகளைச் சித்தரிக்கும் படங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வலைப்பதிவின் மூலமாக வெளியிட்டனர்.
குகன் ஆனந்தனின் உடல் வைக்கப்பட்டு இருந்த பிணவறையை அவரின் குடும்பத்தினர் வலுக்கட்டாயமாக உடைக்க முயர்சி செய்ததாக, அப்போதைய உள்துறை அமைச்சரும்; மலேசியாவின் தலைமைக் காவல் துறை அதிகாரியும் (Inspector-General of Police); குகன் ஆனந்தனின் குடும்பத்தினரைக் கடிந்து கொண்டனர்.[4]
குகன் ஆனந்தனின் மரணம்
[தொகு]காவல் துறையினரின் பார்வையில் இருந்த போது, குகன் ஆனந்தன் சித்திரவதை செய்யப் பட்டு இருக்கலாம் என குகன் ஆனந்தனின் குடும்பத்தினர் கருத்து தெரிவித்தார்கள். பின்னர் குகன் ஆனந்தனின் மரணம் ஒரு கொலை என வகைப் படுத்தப்பட்டது.[5]
மேலும் அவர் இறந்த காவல் நிலையத்தில் பணியில் இருந்த 11 அதிகாரிகள் வேறு பணிக்கு மாற்றம் செய்யப் பட்டனர். குகனின் மரணம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று மலேசியாவின் தலைமைக் காவல் துறை அதிகாரி உறுதி அளித்தார்.
மரணத்திற்கான காரணம்
[தொகு]தொடக்கக்கட்ட உடல் பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கடுமையான நுரையீரல் வீக்கம் (acute pulmonary edema) என்று அறிவிக்கப் பட்டது. குகன் ஆனந்தன் ஒரு விசாரணை அதிகாரியால் விசாரிக்கப்படும் போது குடிக்கத் தண்ணீர் கேட்டார். ஒரு குவனையில் தண்ணீர் கொடுக்கும் போது அவர் கீழே சரிந்து விழுந்தார் என்று அப்போதைய சிலாங்கூர் மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ காலிட் அபு பக்கார் தெரிவித்தார்.
குகன் ஆனந்தன் மூச்சு விடுவதில் சிரமப்பட்டு இறந்தார் என்று காவல் துறையினர் முதலில் கூறினார்கள். மேலும் குகன் ஆனந்தனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவருடைய நுரையீரலில் திரவம் கலந்து இருந்ததால் அவர் இறந்து இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
குகன் ஆனந்தனின் உடலில் காயங்கள்
[தொகு]ஆனால் குகன் ஆனந்தனின் குடும்பத்தினர் காவல் துறையினரின் அறிவிப்பை மறுத்தனர். குகன் ஆனந்தனின் உடல் மீது கீறல்கள் இருந்தன என்றும்; மற்றும் பிற காயங்கள் இருந்தன என்றும் உறுதியாகக் கூறினார்கள். அவையே அவர் சித்திரவதை செய்யப் பட்டதற்கான சான்றுகள் என்றும் கூறினார்கள்.[6]
பின்னர் இரண்டாவது பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. இறப்புக்கான காரணம் எலும்பு தசை சேதம் என்றும் அதன் விளைவாகக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்றும் கண்டு அறியப்பட்டது.[7]
மரண விசாரணை
[தொகு]இரண்டு பிரேத பரிசோதனைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் குறித்த அறிக்கையை அப்போதைய சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ இஸ்மாயில் மெரிக்கன் பின்னர் வெளியிட்டார்.
10 பேர் கொண்ட விசாரணைக் குழுவினர் மரண விசாரணை நடத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில், குழாய் போன்ற நெகிழ்வான மழுங்கிய பொருளால் குகன் ஆனந்தன் தாக்கப்பட்டு இருந்தாலும், அந்த அதிர்ச்சி மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்குப் போதுமானதாக இல்லை என்று கூறப் பட்டது.
தீர்ப்பு
[தொகு]குகன் ஆனந்தனின் மரணத்திற்கு வழிவகுத்த தவறான செயல்களுக்குக் காவல்துறையினர் பொறுப்பானவர்கள் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தாக்குதல், பொய்யான சிறைவாசம், தவறான செயல், மற்றும் வலி ஆகியவற்றுகாக குகன் ஆனந்தனின் தாயாருக்கு மலேசிய ரிங்கிட் 851,700 வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இறுதிச் சடங்கு
[தொகு]குகன் ஆனந்தன் மரணம் அடைந்து எட்டு நாட்களுக்குப் பின்னர் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. குகனின் உடல் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் (University Malaya Medical Centre) இருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்த பூச்சோங் இந்து மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கு முன்னர் அதே மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில்தான் அவரின் இரண்டாவது பிரேதப் பரிசோதனையும் செய்யப்பட்டது.[8]
குகன் ஆனந்தனின் குடும்பத்தினர், பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்த் சிங் தியோ, காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். மாணிக்கவாசகம் மற்றும் பினாங்கு துணை முதல்வர் (II) பி ராமசாமி ஆகியோர் மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் அவரின் உடலைப் பெறுவதற்கு வந்தனர்.
இறுதிச் சடங்குச் செலவுகளுக்கு சிலாங்கூர் அரசாங்கம்
[தொகு]செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக்; சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா ராசையா ஆகியோரும் குகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து இருந்தனர். இறுதிச் சடங்குச் செலவுகளைச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் ஏற்றுக் கொண்டது.[9]
குகனின் உடல் வைக்கப்பட்டு இருந்த மலாயா பல்கலைக்கழக மருத்துவ மைய சவக் கிடங்கிற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; குகனின் பெற்றோர்கள் மற்றும் இரண்டு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்ததால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் அதிகாரிகள் ஊடக உறுப்பினர்களை கட்டிடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். ஐந்து பேர் கைது செய்யப் பட்டதைத் தவிர, அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இந்து உரிமைகள் போராட்டப் படை
[தொகு]கைது செய்யப் பட்டவர்கள், தடைசெய்யப்பட்ட இந்து உரிமைகள் போராட்டப் படையின் (இண்ட்ராப்) சட்டைகளை அணிந்து இருந்தனர். அவர்களில் ஒருவர் அதன் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ்.தனேந்திரன்.
மதியம் 2 மணிக்குப் பிறகு குகனின் உடலை ஏற்றிச் செல்லும் சவ வண்டி மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் இருந்து வெளியேறியதும், "போலீஸ் கொலையாளிகள்", "மக்கள் சக்தி" மற்றும் "இண்ட்ராப் வாழ்க" போன்ற கோசங்கள் எதிரொலித்தன.[10]
பூச்சோங் இந்து மயானக் கல்லறையில்
[தொகு]பலத்த போலீஸ் பாதுகாப்புடன், ஓர் உலங்கூர்தி (ஹெலிகாப்டர்) மேலே பறக்க சுபாங் ஜெயா காவல் நிலையத்திற்குச் சவ வண்டி சென்றது. இந்தக் காவல் நிலையத்தில் தான் குகன் ஆனந்தன் காலமானார். அங்கு ஒரு சிறிய அளவிலான பிரார்த்தனை நடைபெற்றது.
பூச்சோங் இந்து மயானக் கல்லறையில், சுமார் 1,000 பேர் கூடி இருந்தனர். போலீசாருக்கு எதிராக மீண்டும் கோசங்கள் எழுப்பப் பட்டன. இறுதியாக மாலை 5.20 மணியளவில் குகன் அடக்கம் செய்யப்பட்டார்.
பின்னர், மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சையத் அமீட் அல்பார் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்த் சிங் தியோ; மற்றும் பினாங்கு துணை முதல்வர் (II) பி ராமசாமி இருவரும் கோரிக்கை வைத்தனர்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ January 30, The Editor / TheEdge (30 January 2009). "Kugan finally laid to rest". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
{{cite web}}
:|first1=
has generic name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Court rules police liable in Kugan's death | Malay Mail". www.malaymail.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ "Polis akan rakam kenyataan dua timbalan menteri. Difahamkan, Timbalan Menteri di Jabatan Perdana Menteri, Tu Murugiah dan SK Devamany turut berada di situ. Vell Paari juga berkata, beliau telah memaklumkan kepada ketua pergerakan itu, T Mohan supaya mendapat laporan perubatan kedua mengenai punca kematian Kugan". Malaysiakini. 22 January 2009. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ "Malaysia: Government must investigate police torture claims". Amnesty International (in ஆங்கிலம்). 22 January 2009. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ "Kugan mudered - bring the culprits to justice". dapmalaysia.org. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ "Kugan pathologist rapped for dishonest forensic report - The pathologist who carried out the first post-mortem on death-in-police-custody victim A Kugan, Dr Abdul Karim Tajuddin, has been reprimanded by the Malaysian Medical Council (MMC) for failing to conduct a proper examination and prepare an honest report. Yesterday MMC concluded its inquiry into the conduct of Abdul Karim and found that he had "neglected and disregarded his professional responsibilities by failing to conduct a proper examination and preparing and honest report".The Serdang Hospital pathologist had failed to fulfil the requirement under item No 4 of the Guidelines of the Malaysian Medical Council on 'Ethical Implications of Doctors in Conflict Situations', the MMC inquiry report said". Malaysiakini. 17 December 2012. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ "A second post-mortem conducted on A Kugan, who died while in police custody, shows that he was beaten so badly he died of kidney failure". The Nut Graph. 3 March 2009. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
- ↑ January 30, The Editor / TheEdge (30 January 2009). "Kugan finally laid to rest". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
{{cite web}}
:|first1=
has generic name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ January 30, The Editor / TheEdge (30 January 2009). "Kugan finally laid to rest". The Edge Markets. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
{{cite web}}
:|first1=
has generic name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ https://www.theedgemarkets.com/article/kugan-finally-laid-rest. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
{{cite web}}
: Missing or empty|title=
(help) - ↑ https://www.theedgemarkets.com/article/kugan-finally-laid-rest. பார்க்கப்பட்ட நாள் 24 February 2022.
{{cite web}}
: Missing or empty|title=
(help)