உள்ளடக்கத்துக்குச் செல்

கீழ்நமண்டி தொல்லியல் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Map
திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்நமண்டி தொல்லியல் களம்

கீழ்நமண்டி தொல்லியல் களம் என்பது திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஒன்றியத்தில் கீழ்நமண்டி ஊராட்சியில் உள்ள ஒரு தொல்லியல் களமாகும். இங்கு அகழாய்வின் பொழுது கிடைத்த பொருட்களை வைத்து இவ்விடம் இரும்புக் காலம் என்று கணக்கிடப்பட்டது.[1]

புவியியல் இருப்பிடம்

[தொகு]

கீழ்நமண்டி கிராமம் வந்தவாசியிலிருந்து 18 கிலோமீட்டர் தென்மேற்கிலும், செஞ்சியிலிருந்து 23 கிலோமீட்டர் வடகிழக்கிலும் அமைந்துள்ளது. தளத்தின் புவியியல் அமைவிடம் வட அட்சரேகை 12°22'36.11" மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 79°31'24.56" ஆகும். பெருங்கற்கால கல்லறைகள் கொண்ட இரும்புக்கால தளம் தற்போதைய கீழ்நமண்டி கிராமத்திலிருந்து 3.27 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ளது.

அகழாய்வு

[தொகு]

இத்தளம் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் எஸ். பாலமுருகனின் வாயிலாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கவனத்திற்கு வந்தது. இங்கு 2022-23, 2023-24 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அகழாய்வு செய்யப்பட்டது. 2023இல் 55 ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 30 இலட்சம் செலவில் அகழாய்வு நடந்தது. ஈமப் பேழைகளும், சிகப்பு மற்றும் கருப்பு சிகப்பு பானைகளும் கண்டெடுக்கப்பட்டன.[2] இங்கு கல் வட்டங்கள், ஈமப்பேழைகள், வாழ்வியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கல் வட்டங்கள்

[தொகு]

இறந்தவரின் உடலையோ அல்லது எலும்புகளையோ சுடுமண் தொட்டிகளில் வைத்து மூடிய பின்னர் குழிகளில் புதைக்கப்பட்டன. புதைகுழிகளின் அருகே சடங்கு சார்ந்த கலையங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, இந்த தொட்டிகளிலும் கலையங்களிலும் இறந்தவர் பயன்படுத்திய முக்கியமான பொருட்கள் வைக்கப்பட்டு மண்ணால் மூடப்பட்டன. புதைகுழி இடங்கள் விலங்குகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப்பட்டும், எளிதில் அடையாளம் காணக்கூடிய வகையிலும் அமைக்கப்பட்டு, அந்த இடங்களின் மேல் பெரிய கற்கள் வைக்கப்பட்டன. அந்தக் கற்களைச் சுற்றி வட்ட வடிவமாக சிறிய கற்கள் நிரப்பப்பட்டு, எல்லைப் பகுதியில் பெரிய கற்கள் புதைக்கப்பட்டன. இங்கு இது போன்ற கல் வட்டங்கள் காணப்பட்டன.[3]

ஈமப்பேழைகள்

[தொகு]

இந்த கல் வட்டங்களில் ஈமப்பேழைகள் காணப்பட்டன. மொத்தம் 27 ஈமப்பேழைகள் எடுக்கப்பட்டன. அதில் 8 ஈமப்பேழைகள் மட்டுமே உடையாமல் கிடைத்தன. மற்றவை அதன் மேலே இருந்த மண்ணில் அழுத்தத்தால் நொறுங்கி இருந்தன.[4]

வாழ்விடம்

[தொகு]

அருகிலேயே வாழ்விடப் பகுதியும் அகழாய்வு செய்யப்பட்டது. அங்கு இரும்புக் கசடுகள் கிடைத்தன.[5]

காலம்

[தொகு]

இங்கு நடந்த அகழாய்வில் கிடைத்த கரிம பொருட்களை ஆய்வு செய்ததில் அதன் காலம் கி.மு. 17ஆம் நூற்றாண்டு என்று தெரியவந்துள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தொல்பொருளியல் திணைக்களத்தால் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வுகள்". தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. Retrieved 2025-09-24.
  2. Tamil, Hindu (July 10, 2023). "கீழ்நமண்டி அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடுமண் ஈம பேழைகள் கண்டுபிடிப்பு" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 2025-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250117043928/https://www.hindutamil.in/news/life-style/1044881-2-500-year-old-flint-ark-discovered-on-kilnamandi-excavation.html.
  3. "நீத்தோரும் நினைவிடமும் - அகழாய்வு". தினமலர். Retrieved 2025-09-24.
  4. "Archaeological excavations in Tamil Nadu : a preliminary report". tamil digital library. 2025. Retrieved September 24, 2025.
  5. Manmarabhu மண்மரபு (July 28, 2024). திருவண்ணாமலை அருகே இன்னொரு கொடுமணலா? கீழ்நமண்டி அகழாய்வில் ஆச்சர்யம் | KILNAMANDI EXCAVATION. Retrieved 2025-09-24 via YouTube.
  6. "கீழ்நமண்டி: திருவண்ணாமலைக்கும் சிந்துச் சமவெளிக்கும் என்ன தொடர்பு? - ஆச்சர்யப்படுத்தும் ஆய்வு முடிவுகள்". BBC News தமிழ். September 23, 2025. Retrieved 2025-09-24.