கீழமிழ்தல் (நிலவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலவியலில் கீழமிழ்தல் (Subduction) என்பது, புவிப்பொறைத் தட்டுக்களின் ஒருங்கெல்லையில் நடைபெறும் ஒரு நிகழ்முறையைக் குறிக்கும். இதில், புவிப்பொறைத் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி மோதும்போது ஒரு தட்டு இன்னொன்றுக்குக் கீழ் நகர்ந்து புவி மூடகத்தினுள் அமிழும். "கீழமிழ் வலயம்" என்பது இரண்டு புவிப்பொறைத் தட்டுக்கள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும்போது கீழமிழ்தல் நிகழும் பகுதியைக் குறிக்கும். கீழமிழ்தல் வீதம் பொதுவாக ஓராண்டுக்கு எவ்வளவு சதம மீட்டர் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒருங்கும் வீதம் ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 2 தொடக்கம் 8 சதம மீட்டர் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஏறத்தாள மனித விரல் நகங்களின் வளர்ச்சி வீதத்துக்குச் சமமானது.

கீழமிழ்தல் வலயங்களில் ஒரு பெருங்கடல் தட்டு, ஒரு கண்டத் தட்டுக்குக் கீழ் அல்லது இன்னொரு பெருங்கடல் தட்டுக்குக் கீழ் நகரும். கீழமிழ் வலயங்களில் எரிமலைக் குமுறல், புவியதிர்ச்சி, மலையுருவாக்கம் என்பன கூடிய வீதத்தில் நிகழ்கின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழமிழ்தல்_(நிலவியல்)&oldid=2742704" இலிருந்து மீள்விக்கப்பட்டது