கீழக்கரிசல் ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழக்கரிசல் ஆடு அல்லது அடிக்கருவை, கருவி என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய செம்மறியாட்டு இனங்களில் ஒன்றாகும். இவை இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் தமிழகத்தின் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

கீழக்கரிசல் ஆடுகளில் பெண் ஆடு சராசரியாக 25 முதல் 35 கிலோ எடையுடனும், கிடாக்கள் 35 கிலோ எடையுடனும் இருக்கும். கிடாக்களுக்கு 35 செ.மீ. நீளத்தில் கொம்புகள் வளைந்தும் சுருண்டும் காணப்படும். பெரும்பாலான ஆடுகளில் கீழ்தாடையில் தாடி எனபெபடும் வாட்டில் காணப்படும்.[1] இந்த ஆடுகளின் உடலின் மேல்பகுதி முழுவதும் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் அடிப்பகுதியான வயிறு கால்கள் போன்றவை கறுப்பு நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக இது கீழக்கரிசல் என அழைக்கப்படுகிறது.[2] இந்த ஆடுகள் கடுமையான வெப்பத்தைத் தாங்கி வளரும் திறன் கொண்டவையாகவும், நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டவையாகவும் உள்ளன. மேலும் இந்த ஆடுகள் மிகவும் கடினமான தீவனத்தை உட்கொண்டால்கூட எளிதில் செரித்துவிடும். இதேபோல மற்ற ஆடுகளைவிட அதிக நேரமாக தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மேயும் திறன் கொண்டவை.

காப்பு நடவடிக்கைகள்[தொகு]

1977 ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில் 1.73 லட்சம் கீழக்கரிசல் ஆடுகள் இருந்த நிலையில், 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்த ஆடுகளின் எண்ணிக்கை வெறும் 357ஆகக் குறைந்தது கால்நடை ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம், தேசிய கால்நடை மரபணு கழகத்துக்கு அளிக்கப்பட்ட ஆய்வறிக்கையைத் தொடர்ந்து பாரம்பரிய இனங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக வாழ்விடத்தில் கீழக்கரிசல் இனச் செம்மறியாடு பாதுகாப்பு என்ற திட்டத்தையும் அறிவித்தது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் இந்தத் திட்டத்துக்காக 2006-ஆம் ஆண்டு ரூ.60 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்பயனாக கடந்த 6 ஆண்டுகளில் கீழக்கரிசல் ஆடுகளின் எண்ணிக்கை 3,600 இருக்கக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "கீழக்கரிசல்". அறிமுகம். agritech.tnau.ac.in. பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. டி. கார்த்தி (17 நவம்பர் 2018). "இறைச்சிக்குப் புகழ்பெற்ற செம்மறி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 17 பெப்ரவரி 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

அழிவின் விளிம்பிலிருந்து மீண்ட "கீழக்கரிசல்' ஆட்டினம்!

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழக்கரிசல்_ஆடு&oldid=3576972" இலிருந்து மீள்விக்கப்பட்டது