உள்ளடக்கத்துக்குச் செல்

கிஸ்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிச்வா திரைசீலையால் மூடப்பட்ட கஃபா, பெரிய பள்ளிவாசல், மெக்கா, சவூதி அரேபியா
கிஸ்வா திரைச்சீலையால் மூடப்பட்ட கஃபாவின் நுழைவாயில், ஆண்டு 22 பிப்ரவரி 2024

கிஸ்வா (Kiswah) (அரபு மொழி: كسوة الكعبة) என்பது உலக இசுலாமியர்களின் மிகவும் புனித தலமான சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகரத்தில் உள்ள பெரிய பள்ளிவாசலில் உள்ள கஃபா மீது ஆண்டுதோறும் போர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் திரைச்சீலை ஆகும்.[1]

கிஸ்வா திரைச்சீலையின் வடிவமைப்பு மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் காரணமாக, இது இஸ்லாமிய கலை, சடங்கு மற்றும் வழிபாட்டில் மிகவும் புனிதமான பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[2]

காபாவை போர்த்தும் திரைச்சீலை நடைமுறை இஸ்லாமியத்திற்கு முந்தைய காலத்திலிருந்து தொடர்கிறது. மேலும் இந்நடைமுறை முகமது நபி மற்றும் அவரது வாரிசுகளால் தொடர்ந்தது.[3] வரலாற்று ரீதியாக, பல்வேறு வகையான துணிகள் போர்வையாகப் பயன்படுத்தப்பட்டது. எகிப்தில் தயாரிக்கப்பட்ட கிஸ்வாக்கள் ஆரம்பகால இஸ்லாமிய ஆட்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது.[4]

வரலாறு

[தொகு]

இசுலாமுக்கு முந்தைய காலம்

[தொகு]

கஃபா மீது போர்த்தப்படும் கிஸ்வா திரைச்சீலை பாரம்பரியம் இசுலாத்திற்கு முந்தைய காலத்தில், ஏமன் பகுதியிலிருந்து கிஸ்வா திரைச்சீலைக்கான துணிகள் தயாரிக்கப்பட்டது.[3] இப்னு ஹிஷாமின் கூற்றுப்படி, ஹிமியார் இராச்சியத்தின் (Himyar) மன்னர் துப்பா அபு கரிப் அசாத், கிபி ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில், யூத குருமார்களிடமிருந்து கஃபாவை போர்தும் கிஸ்வா திரைச்சீலை பற்றி அறிந்து, முதன்முறையாக கஃபாவிற்கு கிஸ்வா திரைச்சீலை அணிவித்தார்.[5][6] பின்னர் மன்னர் துப்பா, ஏற்கனவே இருந்த திரைச்சீலைகளின் மேல், காபாவை ஒரு கோடிட்ட சிவப்பு கம்பளி ஆடையால் போர்த்தினார். மெக்காவில் உள்ள பழங்குடி குறைசி மக்கள், காபாவில் வழிபடுவதற்கு வருபவர்களிடமிருந்து கட்டணம் வசூலித்து, காபாவிற்கு ஆண்டுதோறும் புதிய கிஸ்வா திரைச்சீலைகளைப் போர்த்தினர்.[4]

முகம்மது நபியின் காலம்

[தொகு]

கிபி 630ல் (ஹிஜ்ரி 7) கஃபாவை கைப்பற்றும் வரை, முகம்மது நபி மற்றும் மெக்காவில் உள்ள முஸ்லிம்களும் காபாவிற்கு கிஸ்வா திரைச்சீலை அணிவதில் உள்ளூர் குறைசி மக்களால் தடுக்கப்பட்டனர். முஸ்லிம்கள் மெக்காவைக் கைப்பற்றியபோது, அவர்கள் பழைய கிஸ்வா திரைச்சீலைகளை அப்படியே விட்டுவிட்டனர். பின்னர் முகம்மது நபி தனது சொந்த கிஸ்வா திரைச்சீலை காபாவிற்கு போர்த்தினார். முகம்மதுவின் வாரிசுகள் கிஸ்வாவை அணியும் பாரம்பரியத்தைத் தொடர்ந்தனர். கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் எகிப்தில் வாழும் கோப்டிக் கிறிஸ்தவர்களால் ஒரு வகை வெள்ளை லினன் நூலால் நெசவு செய்யப்பட்ட கிஸ்வாவை கஃபாவிற்கு திரைச்சீலையாக வழங்கினார்.[3]

உமையா கலீபகம் & அப்பாசியக் கலீபகம்

[தொகு]

கஃபாவை போர்த்தியிருந்த, இஸ்லாமியத்திற்கு முந்தைய கிஸ்வா திரைச்சீலைகள், உமையாத் கலீபா முதலாம் மர்வான் ஆட்சி வரை நீடித்தது. பழைய கிஸ்வா திரைச்சீலைகள் மத ரீதியாக அசுத்தமானவை என்ற புகார்கள் எழுந்ததால் அவற்றை அகற்றினார்.

பட்டு, பருத்தி மற்றும் கோடிட்ட கம்பளி ஆகியவற்றால் நெய்யப்பட்ட ஒரு புதிய கிஸ்வாவை முஆவியா அனுப்பினார்.[4] அதனைத் தொடர்ந்து, கலீஃபாக்கள் ஆண்டுதோறும் இரண்டு கிஸ்வாக்களை அனுப்பினார். ஒன்று பருத்தியாலும், மற்றொன்று பட்டாலும் செய்யப்பட்டது; பட்டு கிஸ்வா பழைய பருத்தி கிஸ்வா மீது போர்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நடைமுறை உமையாத் கலீஃபாக்கள் வகுத்த முன்னுதாரணத்தைக் கடைப்பிடித்து, எகிப்திய பருத்தி அல்லது |பட்டினால் நெய்யப்பட்ட கிஸ்வாக்களை வழங்குவதைத் தொடர்ந்து. உமையாத் முன்னோடிகளைப் போலவே, அப்பாசியக் கலீபாக்கள் கிஸ்வா உற்பத்திக்காக எகிப்திய தொழிற்சாலைகளையே தொடர்ந்து நம்பியிருந்தனர்.

அப்பாசிய கலீபா அல்-மஹ்தி, கிபி 777ல் மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட பிறகு கஃபா மீதிருந்த பழைய கிஸ்வாவை ஆண்டுதோறும் அகற்றி, புதிய கிஸ்வாவை போர்த்துவதற்கான முன்னுதாரணத்தை நிறுவினார்.[7]

உற்பத்தி இடம்

[தொகு]
எகிப்தில் நெய்யப்பட்ட காபாவின் கதவுகளை அலங்கரிக்கும் கிஸ்வா திரைச்சீலை, ஆண்டு 1606

அய்யூப்பிய சுல்தானகம் (1171–1260) காலத்தில் கிஸ்வா திரைச்சீலை சூடான், இந்தியா, ஈராக் மற்றும் எகிப்திலிருந்து பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு பெண்களால் கைநெசவு மூலம் தயாரிக்கப்பட்டது.[8] எகிப்தின் மம்லுக் சுல்தானகம் மற்றும் பின்னர் ஒட்டோமான் சுல்தான்களால் நேரடியாக நியமிக்கப்பட்ட அமீர் அல்-ஹஜ் (மெக்கா படைத் தளபதி), ஆண்டுதோறும் எகிப்திலிருந்து மெக்காவிற்கு கிஸ்வாவை கொண்டு சென்றார்.[9]

19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எகிப்தின் முகமது அலி பாட்சா, கிஸ்வா தயாரிப்பதற்கான செலவுகளை தனது அரசு கருவூலத்தால் ஈடுகட்ட உத்தரவிட்டார். அப்போதிருந்து, கெய்ரோவின் அல்-கமலேயா மாவட்டத்தில் உள்ள டார் அல்-கோரோன்ஃபோஷ் எனும் நெசவுப் ப்ட்டறையை, கிஸ்வா தயாரிக்கும் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்பணி எகிப்திய முடியாட்சி வரை தொடர்ந்தது. ஹிஜாஸ் பகுதி சௌதி அரேபியர்களால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, 1927 முதல், அதன் உற்பத்தி ஓரளவு மெக்காவிற்கு மாற்றப்பட்டது, பின்னர் 1962ல் எகிப்து கிஸ்வா உற்பத்தியை நிறுத்திய போது, கிஸ்வா உற்பத்தி சவூதி அரேபியாவிற்கு மாற்றப்பட்டது; தற்போது புனித கஃபாவின் கிஸ்வா மன்னர் அப்துல்அஜிஸ் வளாகத்தில், பெண்களால் கைநெசவு மூலம் தயாரிக்கப்படுகிறது.[8]

பெண்கள்

[தொகு]

பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் முதன்முதலில் சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல் அஜீஸ் வளாகத்தில் பெண்கள் கிஸ்வா தயாரிப்பில் ஈடுபட்ட ஆண்டு 2024 ஆகும். இந்த ஆண்டில் மெக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் கறுப்புக் கல் பொருத்தப்பட்ட கஃபாவிற்காகவும் மற்றும் மதீனாவில் உள்ள அல்-மஸ்ஜித் அந்-நபவி பள்ளிவாசலுக்காகவும் பெண்கள் கைகளால் நெய்த இரண்டு புதிய கிஸ்வா துணிப் பகுதிகளை மெக்காவிற்குக் கொண்டு செல்வதற்கு ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.[10]

அகற்றுதல்

[தொகு]

ஆண்டுதோறும் பழைய கிஸ்வாக்களை அகற்றி துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. பின்னர் அவை விற்கப்படலாம் அல்லது காட்சிக்கு வைக்கப்படலாம். ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2017ம் ஆண்டில் கிஸ்வாவின் ஒரு பகுதியை வாங்கி தனது தனிப்பட்ட தீவுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.[11][12][13]

ஹிசாம்

[தொகு]

பூத்தையல் வேலைப்பாடுகள் கொண்ட கிஸ்வா துணியின் பட்டைகள் காபாவின் ஒவ்வொரு பக்கத்திலும் இணைக்கப்பட்ட நான்கு துண்டுகளுடன் 16 பட்டுத் துண்டுகளைக் கொண்டுள்ளது. இதன் ஒரு துண்டு 95 சென்டிமீட்டர்கள் (37 அங்) நீளமும்; அகலமும் கொண்டிருக்கும். இந்த கிஸ்வா துண்டுகளில் தங்கம் மற்றும் வெள்ளி நூலால் பூத்தையல் வேலைப்பாடுகளுடன் திருக்குர்ஆன் வசனங்கள் கொண்டிருக்கும். காபாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பட்டையின் கீழ் ஸூரத்துல் இஃக்லாஸ் எனப்படும் குரானின் 113வது அத்தியாயம் பொறிக்கப்பட்டிருக்கும்.

குரானின் 26 & 27 வசனங்கள் பொறிக்கப்பட்ட ஹிசாம் பட்டை, 19ஆம் நூற்றாண்டு, கெய்ரோ, எகிப்து

சித்தாரா

[தொகு]

காபாவின் வெளிப்புற கதவின் மேல் பர்கு அல்லது சித்தாரா என்று அழைக்கப்படும் ஒரு வகை கிஸ்வா திரைச்சீலை துணி உள்ளது. இது மிகவும் அலங்கரிக்கப்பட்ட நான்கு துண்டுகளைக் கொண்டிருக்கும். சித்தாராவின் சராசரி அளவு 7.75 x 3.5 மீட்டர் (25.4 x 11.5 அடி) மற்றும் நான்கு தனித்தனி துணி துண்டுகளை ஒன்றாக இணைப்பதன் உருவாகிறது. ஒவ்வொரு துண்டிலும் பூத்தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

கூடுதல் துணி

[தொகு]

காபாவின் உட்புறத்தில் சில பகுதிகளை மூடுவதற்குப் பயன்படுத்தப்படும் கிஸ்வா திரைச்சீலை ஆகும். இது காபாவின் உட்புறத்தில் உள்ள பாப் அல்-தவ்பா கதவின் மேல் தொங்கவிடப்படும் ஒரு கிஸ்வா திரைச்சீலையும் அடங்கும். 1987ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாரம்பரியமான காபாவின் சாவியை வைத்திருக்கும் பச்சை பட்டுப் பை ஒவ்வொரு ஆண்டும் மறுவடிவமைப்பு செய்யப்படுகிறது.

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "How the manufacturing of the Kaaba cover, kiswa, changed over the centuries". Arab News (in ஆங்கிலம்). 2022-07-08. Retrieved 2022-12-05.
  2. ↑ Kern, Karen M.; Rosenfield, Yael; Carò, Federico; Shibayama, Nobuko (2017-12-01). "The Sacred and the Modern: The History, Conservation, and Science of the Madina Sitara". Metropolitan Museum Journal 52: 72–93. doi:10.1086/696548. பன்னாட்டுத் தர தொடர் எண்:0077-8958. https://www.journals.uchicago.edu/doi/10.1086/696548.
  3. 1 2 3 McGregor, Richard J. A. (2020). Islam and the devotional object : seeing religion in Egypt and Syria. Cambridge, United Kingdom: Cambridge University Press. pp. 18–53. ISBN 978-1-108-59423-3. OCLC 1128065777.
  4. 1 2 3 Mortel, Richard (1988). "The Kiswa: Its Origins and Development from Pre-Islamic Times until the End of the Mamluk Period". Al-'Usûr 3 (2): 30–46.
  5. ↑ Ibn Hishām, ʻAbd al-Malik (1955). The life of Muhammad;. Ibn Isḥāḳ, Muḥammad. London: Oxford University Press. ISBN 0-19-636034-X. OCLC 3705122.
  6. ↑ من هو تبع المذكور في القرآن الكريم ؟ - الإسلام سؤال وجواب. islamqa.info (in அரபிக்). Retrieved 2023-11-09.
  7. ↑ Nassar, Nahla (2013). "Dar al-Kiswa al-Sharifa: Administration and Production". In Porter, Venetia; Seif, Liana (eds.). The Hajj. Collected Essays. London: The British Museum. pp. 175–183. ISBN 9780861591930.
  8. 1 2 "Saudi Aramco World: A Gift from the Kingdom". www.saudiaramcoworld.com. Archived from the original on 2006-10-18. Retrieved 2016-07-18.
  9. ↑ Dunn, Robert (1986), The Adventures of Ibn Battuta, a Muslim Traveler of the Fourteenth Century, University of California Press, p. 266, ISBN 9780520057715
  10. ↑ "Women participate in replacing Kaaba's kiswa for first time in history". Roya News.
  11. ↑ Kiswa on Jeffrey Epstein’s floor? New image shows sex offender standing on sacred Islamic cloth of Kaaba, sparks outrage
  12. ↑ Epstein Files Reveal Rare Kaaba Cloth Shipments via UAE-Linked Contacts: Who Was Behind Them?
  13. ↑ Epstein and UAE businessman pictured with fragment resembling Kaaba cloth

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கிஸ்வா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஸ்வா&oldid=4467969" இலிருந்து மீள்விக்கப்பட்டது