கிஷ்வர் தேசாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஷ்வர் தேசாய்

பிறப்புகிஷ்வர் ரோசா
1 திசம்பர் 1956 (1956-12-01) (அகவை 66)
அம்பாலா, அம்பாலா மாவட்டம், பஞ்சாப்
படித்த கல்வி நிறுவனங்கள்லேடி சிறீ ராம் கல்லூரி
பணிஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
மேக்நாத் தேசாய்
வலைத்தளம்
www.kishwardesai.com

கிஷ்வர் தேசாய் (Kishwar Desai) (பிறப்பு: 1956 திசம்பர் 1) ரோசா என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் ஓர் இந்திய எழுத்தாளரும் மற்றும் கட்டுரையாளரும் ஆவார்.

இவர் காந்தி சிலை நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் ஆவார். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலையை அமைக்க உதவினார். அரசாங்கம் இடத்தை ஒதுக்கியபோது, மேகநாத் தேசாய் தலைமையில் தொண்டு நிறுவனம் அதற்கான பணத்தை திரட்ட வேண்டியிருந்தது. இந்த சிலையை அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் மற்றும் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் 2015இல் திறந்து வைத்தனர். பின்னர் 2015ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடியும் இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது, காந்தி சிலை நினைவு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் கேமரூன் ஆகியோருடன் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

ஒரு புதின ஆசிரியராக, இவரது கடைசி புதினமான தி சீ ஆஃப் இன்னசென்ஸ் 2014இல் இந்தியாவிலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலும் வெளியிடப்பட்டது. மேலும் அது கும்பல் கற்பழிப்பு தொடர்பான கடினமான சிக்கலைக் கையாண்டது. இவரது முதல் புதினமான விட்னஸ் தி நைட், [1] 2010இல் சிறந்த முதல் புதினத்திற்கான கோஸ்டா புத்தக விருதை [2] வென்றது. மேலும், 25க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ஆசிரியர்களின் சங்க முதல் புதின விருதுக்கு பட்டியலிடப்பட்டது. மேலும் மான் ஆசிய இலக்கிய பரிசுக்கு நீண்டகாலமாக பட்டியலிடப்பட்டது. விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இவரது ஆரிஜின்ஸ் ஆஃப் லவ், [3] [4] [5] என்ற புதினம் 2012 சூனில் வெளியிடப்பட்டது. டார்லிங்ஜி: தி ட்ரூ லவ் ஸ்டோரி ஆஃப் நர்கிஸ் மற்றும் சுனில் தத், [6] என்ற தேசாய் ஒரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

கிஷ்வர் ரோஷா 1956 திசம்பர் 1 ஆம் தேதி பஞ்சாபின் (இப்போது ஹரியானா ) அம்பாலாவில் பதம் மற்றும் ரஜினி ரோஷா ஆகியோருக்குப் பிறந்து, சண்டிகரில் வளர்ந்தார். அங்கு இவரது தந்தை பஞ்சாப் காவல்துறைத் தலைவராக இருந்தார். 1977இல் லேடி சிறீ ராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

அச்சு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் ஒரு அரசியல் நிருபராக பணிபுரிந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்பு ஊடகங்களுக்குச் சென்றார். அங்கு இவர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினார். இவர் சில முக்கிய இந்திய தொலைக்காட்சி வலைபின்னல்களுடன் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சி தயாரிப்பாளராகவும், ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். ஜீ டெலிஃபில்ம்ஸ் ( ஜீ டிவி ) என்ற நிறுவனத்தில் துணைத் தலைவராகவும் இருந்தார். தூர்தர்ஷனின் காலை நிகழ்ச்சியான குட் மார்னிங் டுடேவை இவர் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு இவர் தாரா பஞ்சாபி தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். இது உலகளாவிய ஒளிபரப்பின் ஒரு பகுதியாகும். இது முன்னாள் ஸ்டார் இந்தியா தொலைக்காட்சியின் தலைவரான ரதிகாந்த் பாசுவால் நிறுவப்பட்டது. அதன்பிறகு தேசாய் ஜீ மற்றும் என்டிடிவிக்கு சென்றார். அங்கு இவர் ஒரு தயாரிப்பாளராக பணிபுரிந்தார்.

கிஷ்வர் தேசாய் நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் தற்போது தி வீக் பத்திரிகை, ஆசியன் ஏஜ் மற்றும் தி ட்ரிப்யூன் செய்தித்தாள்களுக்கான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அலுவாலியா என்பவருடன் தனது முதல் திருமணத்திற்குப் பிறகு, இவர் தனது பெயரை கிஷ்வர் அலுவாலியா [7] என்று மாற்றினார். மேலும் இத்திருமணத்தின் மூலம் கௌரவ் என்ற ஒரு மகனும் மற்றும் மாலிகா என்ற ஒரு மகளும் உள்ளனர். 2004 சூலை 20 அன்று, அலுவாலியாவுடனான விவாகரத்திற்குப் பிறகு, இவர் லார்ட்ஸ் பிரப்புக்கள் அவை உறுப்பினரும் பொருளாதார அறிஞருமான [8] [9] மேக்நாத் தேசாய், [10] என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர் லண்டன், தில்லி மற்றும் கோவா ஆகிய இடங்களுக்கிடையே வசிக்கிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. "No Girlhoods" பரணிடப்பட்டது 31 சனவரி 2013 at Archive.today. Outlook India. 5 January 2011. Retrieved 2012-07-28.
  2. "Two books on India in UK literary award shortlist". The Times of India. 18 November 2010. Retrieved 2012-07-28.
  3. "No Girlhoods". Outlook India. 5 January 2011. Retrieved 2012-07-28.
  4. "Origins of Love". The Independent. 15 July 2012. Retrieved 2012-07-28
  5. "Origins of Love". ABC Radio National. 11 July 2012. Retrieved 2012-07-28.
  6. "The Queen and the Commoner". India Today. 25 October 2007. Retrieved 2012-07-28.
  7. "People: Kishwar Ahluwalia Profile". Business Today. 22 June 2000.
  8. "Made for Each other". The Tribune. 8 August 2009.
  9. "Lord Meghnad weds his lady love" பரணிடப்பட்டது 2013-01-03 at Archive.today. The Times of India. 20 July 2004.
  10. "Desai unravels economics of Pound: Khushwant Singh". The Tribune. 13 May 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷ்வர்_தேசாய்&oldid=3793001" இருந்து மீள்விக்கப்பட்டது