கிஷான் பிரசாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஜா
சர் கிஷான் பிரசாத்
யாமின்- அஸ்-சுல்தான்
ஐதராபாத்து மாநிலத்தின் 30வது திவான்
பதவியில்
25 நவம்பர் 1926 – 18 மார்ச்சு 1937
ஆட்சியாளர்ஓசுமான் அலி கான்
முன்னையவர்வாலி-உத்-தௌலா மகதூர்
பின்னவர்அக்பர் ஐதாரி
பதவியில்
1901 – 11 ஜூலை 1912
ஆட்சியாளர்கள்மக்பூப் அலிகான்
ஓசுமான் அலி கான்
முன்னையவர்விகார்-உல்-உம்ரா
பின்னவர்யூசுப் அலிகான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கிஷான் பிரசாத்

1864
ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம் (தற்போதைய தெலங்காணா, இந்தியா)
இறப்பு13 மே 1940(1940-05-13) (அகவை 75–76)
ஐதராபாத்து, ஐதராபாத் இராச்சியம் (தற்போதையா தெலங்காணா, இந்தியா)
துணைவர்7

மகாராஜா சர் கிஷான் பிரசாத் பகதூர் யாமின் அஸ்-சுல்தான் ( Maharaja Sir Kishen Pershad Bahadur Yamin us-Sultanat ) (இந்தியப் பேரரசின் ஆணை) (1864 - 13 மே 1940) என்பவர் ஐதராபாத் மாநிலத்தின் திவானாக இரண்டு முறை பணியாற்றிய ஒரு இந்தியப் பிரபு ஆவார்.

இந்து காத்ரி [1] குடும்பத்தில் பிறந்த இவர்,முதலாம் சலார் ஜங்கின் ஆதரவின் கீழ் ஒரு மேற்கத்தியப் பள்ளியில் படித்தார். நிசாமின் குழந்தை பருவ நண்பராக இருந்த இவர், வாழ்நாள் முழுவதும் ஒரு தீவிர நிசாம் விசுவாசியாக இருந்தார். 1892ஆம் ஆண்டில், இவர் மாநிலத்தின் பேஷ்கார் (துணை மந்திரி) ஆனார். ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நிசாம் மஹ்புப் அலி கான் இவரை மாநிலத்தின் திவானாக நியமித்தார். இவர் திவானாக இருந்த முதல் பதவிக்காலத்தில், மாநிலத்தின் வருவாயை அதிகரித்தார். மேலும், 1908ஆம் ஆண்டின் முசி ஆற்றின் ஏற்பட்ட பெருவெள்ளத்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். 1926இல், இவர் மீண்டும் திவானாக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில், இவர் முல்கி விதிமுறைகளை நிறைவேற்றினார். இது நிர்வாக பதவிகளுக்கு பிரித்தானியரைத் தவிர உள்ளூர் குடிமக்களுக்கே சாதகமாக் இருந்தது.

வட இந்தியாவின் மத்திய சமவெளிகளின் கலாச்சாரத்தின் ஆதரவாளரான இவர் சூபித்துவத்தால் தாக்கம் பெற்ற உருது மற்றும் பாரசீக கவிதைகளையும் எழுதினார். இவர் கவிதை, ஓவியங்கள் மற்றும் இசையின் புரவலராகவும் இருந்தார். இவருக்கு இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஏழு மனைவிகள் இருந்தனர்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பிரசாத் 1864இல் பிறந்தவர் என்றாலும், இவரது சரியான பிறந்த தேதி பதிவு செய்யப்படவில்லை. இவர், "தான் நிசாம் மிர் ஓசுமான் அலி கானுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்" என்று கூறினார். [2] இவரது மூதாதையரான ராய் முல் சந்த், முதலாம் நிசாமுடன் தில்லியிலிருந்து ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்தார். இவரது தாத்தா நரேந்தர் பிரசாத் மகபூப் அலி கானின் ஆட்சியில் திவானாகவும் பேஷ்கராகவும் (துணை மந்திரி) பணியாற்றினார். [2] இவர்கள், இந்து மத நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், இவர்களின் தோற்றத்தை சூர்யவன்ஷி சத்திரியச் சமூகத்தின் ஜமீன்தார் சமூகமான காத்ரி சாதியைச் சேர்ந்த மெஹ்ரா குலத்தில் காணலாம். [3] [4]

இவரது இளமை பருவத்தில், இவரது தாத்தா நரேந்தர் பிரசாத் இவரது தம்பிக்கு ஆதரவாக இருந்ததனால் இவர் வெறுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, இவர் முதலாம் சலார் ஜங்கால் ஆதரிக்கப்பட்டு, அவரது மகன்களுடன் ஒரு மேற்கத்திய பள்ளியில் கல்வி பயின்றார். இவர், கணக்கியல், மருத்துவம், மதம், சோதிடம், சூபித்துவம் ஆகியவற்றைப்]] படித்தார். இதைத் தவிர, இவர் தனது பள்ளியில் தற்காப்புக் கலைகள், முகலாய ஆசாரம் மற்றும் அரச சபையை நெறிப்படுத்தல் ஆகியவற்றையும் கற்றுக்கொண்டார். [5] இவர் சமசுகிருத மொழியைப் படித்தார். ஏனெனில் அவரது இந்து நம்பிக்கை மற்றும் கணக்கியல் காரணமாக இவருக்கு அரசக் கருவூலத்தின் பரம்பரை பொறுப்பு இருந்தது. [2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

1892ஆம் ஆண்டில் இவர் ஐதராபாத்தின் பேஷ்காராகவும், [6] 1902ஆம் ஆண்டில் திவானாகவும் நியமிக்கப்பட்டார். இந்த பத்து ஆண்டு காலப்பகுதியில் இவர் மாநில நிர்வாகத்தில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். இவர் நிசாமின் அமைச்சரவையில் இராணுவ அமைச்சரானார். இவர் ஒரு பேஷ்கார் என்ற முறையில் தனது பொறுப்புகளை நிறைவேற்றினார். அதில் இவர் தொடர்ந்து நிசாமில் கலந்துகொண்டு அரசின் சம்பிரதாயங்களை முடிக்க உதவினார் . [2]

1901ஆம் ஆண்டில், நிசாம் ஐதராபாத்தின் திவானாக இருந்த விகார்-உல்-உம்ரா என்பவரை பதவி நீக்கம் செய்துவிட்டு இவரை அப்பதவியில் நியமித்தார். [2] இவருக்கு "யாமின்-அஸ்- சுல்தானேட்" ( இராச்சியத்தின் வலது கை) என்ற பட்டமும் வழங்கப்பட்டது. மேலும் இவரது அந்தஸ்து ஒரு ராஜாவிலிருந்து ஒரு மகாராஜாவாக உயர்த்தப்பட்டது. [5] மாநிலத்தின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் முயற்சியில், இவர் மன்சப்தார்களின் (நில உரிமையாளர்கள்) வருமானத்தை குறைத்தார். விவசாயம், இரயில்வே மற்றும் சுங்கத்துறையின் வருவாயையும் அதிகரித்தார். 1908ஆம் ஆண்டில், முசி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏராளமான மக்களைக் கொன்றது. மேலும், சொத்துக்களை அழித்தது. அதற்கீடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட நன்கொடை அளித்தார். இவர் முன்கூட்டியே சம்பளம் கொடுத்து கடன்களை தள்ளுபடியும் செய்தார் .

ஐதராபாத்தின் திவானாக இவரது முதல் பதவிக் காலத்தில், மாநிலத்தின் பண இருப்பு நான்கு மடங்காக அதிகரித்தது. இந்த சாதனைக்காக பிரித்தானிய வரலாற்றாசிரியர்கள் நிதி மந்திரி காசன் வாக்கரை காரணம் காட்டினாலும் ஐதராபாத்து பாரம்பரியம் பிரசாத்தையே குறிப்பிட்டது. இவர், அரசப் பிரதிநிதியுடன் நட்பாக இருந்தார். [2] 1911இல் நிசாம் மஹ்பூப் அலி கான் இறந்த பிறகு, உஸ்மான் அலிகான் அரியணை ஏறினார். அவரது ஆட்சியின் கீழ், பிரசாத் திவான் பதவியில் தொடருவது கடினமாக இருந்ததால் 1912இல் அப்பதவியைவிட்டு வெளியேறினார். [6]

நவம்பர் 1926இல், இவர் மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டு மார்ச் 1937 வரை பதவியிலிருந்தார். [7] இவரது இரண்டாவது பதவிக்காலத்தில், அரசியல் நியமனங்கள் தொடர்பாக இவருக்கும் நிதியமைச்சர் வாக்கருக்கும் இடையே உராய்வு ஏற்பட்டது. நிர்வாக பதவிகளுக்கு பிரித்தானியர்களை நியமிக்க வாக்கர் ஆதரவாக இருந்தபோது, உள்ளூர் குடிமக்களை நியமிப்பதற்கு இவர் ஆதரவாக இருந்தார். வாக்கரின் விருப்பம் காரணமாக உள்ளூர் மக்களிடையே அவநம்பிக்கை பரவியது. மிதமான அல்லது குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த எந்த பதவியும் தங்களுக்குக் கிடைக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இவருக்கும் வாக்கருக்குமிடையே மோதல் தொடர்ச்சியாக இருந்தது. மேலும் இதனால் அனைத்து அரசு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. [2] இவர், முல்கி விதிமுறைகளை நிறைவேற்றினார். அதன்படி ஒரு தகுதிவாய்ந்த முல்கி வேலைக்கு கிடைத்தால் எந்தவொரு பதவிக்கும் ஒரு "வெளிநாட்டவர்" நியமிக்கப்பட முடியாது. அவர்களின் கல்வித் தகுதிகக்கு அவர்களின் குடும்பப் பின்னணியை விட அதிக மதிப்பளிக்கப்பட வேண்டும். மேலும் ஓய்வூதியம் ஐம்பத்தைந்து வயதில் நிர்ணயிக்கப்பட்டது. [6] [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

திருமணங்கள்[தொகு]

(இடமிருந்து வலமாக): பிரசாத்தின் பேரன் ராஜா ரத்தன் கோபால் சைஞ்சர், அவரது மகள் இராணி சுல்தான் குன்வர் பீபி மற்றும் கிசான் பிரசாத்
பிரசாத் தனது குழந்தைகளுடன். சுமார் 1935கள்

பிரசாத்துக்கு ஏழு மனைவிகள் இருந்தனர். மூன்று பேர் பிராமணச் சாதியைச் சேர்ந்த இந்துக்கள், நான்கு பேர் முஸ்லிம்கள் (இதில் சியா முஸ்லிம்களும் அடங்குவர்). இவரது முஸ்லிம் மனைவிகள் மூல்ம இவருக்கு ஆறு மகன்கள் பிறந்தனர். இவரது இந்து மனைவிகள் மூலம் இவருக்கு ஒன்பது மகன்கள் பிறந்தனர். மனைவிகள் தங்கள் சொந்த மதத்தைப் பின்பற்றினர். குழந்தைகள் தங்கள் தாயின் மதத்தில் வளர்க்கப்பட்டனர். முஸ்லிம் மனைவியரிடமிருந்து பிறந்த குழந்தைகளுக்கு இசுலாமிய பெயர்கள் வைக்கப்பட்டன. இந்து மனைவியரிடமிருந்து வந்த குழந்தைகளுக்கு இந்துப் பெயர்கள் இருந்தன. [8] [9] [10]

கௌசியா பேகம் என்பவர் இவரது விருப்பமான மனைவிகளில் ஒருவராக இருந்தார். இவர் ஒரு மரபுவழி முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு கடுமையான பர்தாவின் கீழ் வாழ்ந்தாலும், இவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல முறையில் குடும்பம் நடத்த முடிந்தது. இசுலாமிய சட்டத்தின்படி, ஒரு முஸ்லிமுக்கும் இந்துக்கும் இடையிலான திருமணம் அனுமதிக்கப்படாது. அவரை திருமணம் செய்து கொள்ள, இவர் இசுலாத்திற்கு மாறவும் தயாராக இருந்தார். [11] இருப்பினும், நிசாம் மஹ்பூப் அலி கான் ஒரு முஸ்லிம் பேஷ்காரை விரும்பாததால் இவர் மதம் மாறுவது தடுக்கப்பட்டது.

ஆர்வங்களும் நம்பிக்கைகளும்[தொகு]

பிரசாத் பாரசீக மற்றும் உருது கவிதைகளை "சாத்" ( மகிழ்ச்சி) என்ற புனைப் பெயரில் எழுதினார். இவரது கவிதை சூஃபித்துவத்தால் ஈர்க்கப்பட்டது. இவர் கங்கா-ஜமுனி தெஹ்ஸீப்பின் (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இன நல்லிணக்கம்) ஆதரவாளராகவும் இருந்தார்.. [4]

பிரசாத் கவிதை, ஓவியங்கள் மற்றும் இசையின் புரவலராக இருந்தார். அவர்களின் படைப்புகளின் தரம் எதுவாக இருந்தாலும், ஓவியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இசைக்கலைஞர்களை இவர் ஊக்குவித்தார். தினமும், அதிகாலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பெர்சியா மற்றும் அரபு நாடுகளிலிருந்தும் வந்த கலைஞர்கள் இவரைச் சந்தித்தனர். [12] மஹ்புப் அல் கலாம் என்ற தலைப்பில் உருது கவிதை இதழையும் வெளியிட்டார். அதில் இடம்பெற்ற முதல் கசல் நிசாம் மஹ்புப் அலி கான் எழுதியது. மீதமுள்ளவை இவர் எழுதியது. கசல்கள் இரண்டு காதலர்களுக்கு இடையிலான உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்டன. [12]

இவரது பொழுதுபோக்குகளில் ஓவியம், சித்தார் வாசித்தல், புகைப்படம் எடுத்தல் மற்றும் சிற்பம் ஆகியவை அடங்கும். இவர் நிசாமின் குழந்தைப் பருவ நண்பராக இருந்தார். தனது வாழ்நாள் முழுவதும், ஒரு நிசாம் விசுவாசியாக இருந்தார். [6]

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரைப் பற்றி பின்வருமாறு எழுதியது:

இவரது கவர்ச்சியான ஆளுமையும் புகழ்பெற்ற பெருமையும் இவர் மக்களால் நேசிக்கப்பட்டார். முந்தைய ஐதராபாத்தில் சிறப்பாக இருந்த அனைத்திற்கும் மிகச்சிறந்த ஆளுமை என்ற இவரது புகழ் 'மகாராஜா' என்பது கிஷான் பிரசாத்தைத் தவிர வேறு யாரையும் குறிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. [4]

ஆளுமை[தொகு]

ஐதராபாத்து சமூகம் நிலப்பிரபுத்துவமாகவும், பிரசாத் ஒரு உயர் சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தபோதிலும், அமைச்சராக இருந்த காலத்தில், இவரது கூட்டாளிகள் ஒவ்வொரு சாதி மற்றும் வர்க்க மக்களாகவும் இருந்தனர். இவரது குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, இவர் தனது வரவேற்பு அறையில் தனது சோபாவில் ஒரு பிச்சைக்காரருடன் உட்கார்ந்து அவருக்கு தேநீர் பரிமாறுவார். [13] இவர் செய்த செயல்களுக்காக இவர் விமர்சிக்கப்பட்டபோது, "யாரையும் இகழ்ந்து விடாதீர்கள், உங்களுக்குத் தெரியாது, ஒரு பிச்சைக்காரன் என்ற போர்வையில் உங்களைச் சந்திப்பது கடவுளே" என்று பதிலளித்தார். [13]

இவரது தொடர்புகள் காரணமாக, இவரால் சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஐதராபாத்தின் பிரதமரான பிறகும், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் திறப்பு போன்ற பொது விழாக்களில் தொடர்ந்து பங்கேற்றார். மேலும் சர்க்கஸில் தலைமை விருந்தினராகவும் தொடர்ந்து தோன்றினார். திருமணங்களுக்கு இவர் அழைக்கப்பட்டபோது ஏழைகள் உட்பட பொது மக்களின் திருமணங்களிலும் கலந்து கொண்டார். [13]

1903இல் இவருக்கு வீரத்திருத்தகை என்ற கௌரவமும் [14] 1910 இல் பேரரசின் ஆணை [15] என்ற கௌரவமும் வழங்கப்பட்டது.

இறப்பு[தொகு]

பிரசாத், 13 மே 1940இல் ஐதராபாத்தில் இறந்தார். [16] இவரது மரணத்துக்குப் பின்னர், நிசாம் உஸ்மான் அலிகான் "முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி அடையாளம் வெளியேறுவதை சமூகம் கண்டது" என்றார். [6]

மேற்கோள்கள்[தொகு]

 1. Shahid, Sajjad (February 9, 2015). "Kishen Pershad — people's Maharaja". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Ronken Lynton 1992.
 3. Leonard 1994.
 4. 4.0 4.1 4.2 Shahid, Sajjad (9 February 2014). "Kishen Pershad – people's Maharaja". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
 5. 5.0 5.1 Syeda Imam (2008). The Untold Charminar. Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184759716. https://books.google.com/books?id=ww3GYpMrwysC&pg=PT87&dq=kishen+pershad+1864&hl=en&sa=X&ved=0ahUKEwjy-77lq6LhAhV18XMBHZO_D2cQ6AEIKDAA#v=onepage&q=kishen%20pershad&f=false. 
 6. 6.0 6.1 6.2 6.3 6.4 Shahid, Sajjad (14 November 2011). "The last icon of the Mughal way of life". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
 7. "Princely States of India A–J". World Statesmen. பார்க்கப்பட்ட நாள் 28 March 2019.
 8. Syeda Imam (2008). The Untold Charminar. Penguin. https://books.google.com/books?id=ww3GYpMrwysC&pg=PT89&dq=kishen+pershad+wives+seven&hl=en&sa=X&ved=0ahUKEwij_7jtqKThAhX57HMBHRYhAEQQ6AEIKDAA#v=onepage&q=kishen%20pershad%20wives%20seven&f=false. 
 9. Rajendra Prasad (1984). The Asif Jahs of Hyderabad: Their rise and decline. Vikas Publishing House Private, Limited. 
 10. Narendra Luther (1955). Hyderabad: Memoirs of a City. Orient Longman. 
 11. Ronken Lynton 1992, ப. 122.
 12. 12.0 12.1 Ronken Lynton 1992, ப. 126.
 13. 13.0 13.1 13.2 Ronken Lynton 1992, ப. 112.
 14. "To be Knight Commanders". The London Gazette. 30 December 1902. p. 3.
 15. "To be a Knight Grand Commander". The London Gazette. 23 June 2010.
 16. "Sir Kishen Pershad passes away". இந்தியன் எக்சுபிரசு. 14 May 1940. https://news.google.com/newspapers?id=168-AAAAIBAJ&sjid=AkwMAAAAIBAJ&pg=6865%2C1236175. பார்த்த நாள்: 28 March 2019. 

குறிப்புகள்[தொகு]

 • Ronken Lynton, Harriet (1992), Days of the Beloved, Orient Blackswan, ISBN 9780863112690
 • Leonard, Karen Isaksen (1994), Social History of an Indian Caste: The Kayasths of Hyderabad, Hyderabad: Orient Longman, ISBN 9788125000327

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷான்_பிரசாத்&oldid=3842214" இலிருந்து மீள்விக்கப்பட்டது