கிளைமோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளைமோர் (M18A1 Claymore Antipersonnel Mine) என்பது மனித இலக்குகளைத் தாக்கப் பயன்படும் கண்ணிவெடி வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதனை நோர்மன் மாக்கிளியோட் என்பவர் கண்டறிந்தார். இது மறைந்திருந்து படைவீரர்களை தாக்குவதற்கென்று வடிவமைக்கப்பட்டிருந்த போதிலும் சிறு வாகனங்களை தாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

செயற்பாட்டு நுட்பம்[தொகு]

பொதுவாக கிளைமோர்கள் வளைவான அதேநேரம் சற்றுத் தடிப்பான மேற்பரப்பைக் கொண்டிருக்கும். கிளைமோரில் ஏதோவோர் உயர்சக்தி வெடிமருந்து பயன்படுத்தப்படும். அதேவேளை வளைவான பக்கத்தில் இலக்கைத் தாக்கவேண்டிய சிதறுதுண்டுகள் அடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான கிளைமோர்களில் உருக்கு உருளைகள் அடுக்கப்பட்டிருக்கும், சிலவற்றில் சிற்சிறு துண்டுகளாகச் சிதறக்கூடிய வகையில் உருக்குத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். கிளைமோர் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட பாகை ஆரைச்சிறைக்குள் (பெரும்பாலும் 60 பாகை) ஏறத்தாழ 100 மீற்றர் தூரத்திற்கு சிறு உருக்கு உருளைகளை, அபாயம் விளைவிக்கக்கூடிய சிற்றோடுகளை (சன்னங்கள்) ஏவிச் சிதறச்செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கிளைமோர்களில் 'எதிரியின் பக்கம்', 'எமது பக்கம்' என இரு பக்கங்கள் உள்ளன. பல கிளைமோர்களில் இவை எழுதப்பட்டுமுள்ளன. எதிரியின் பக்கத்தில் குறிப்பிட்ட ஆரையை விடுத்து ஏனைய பக்கங்களில் சிதறுதுண்டுகள் செல்லா. ஆனால் வெடிப்பின் அதிர்வு குறிப்பிட்டதூரம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். கிளைமோரை வெடிக்க வைப்பவர் தமது பக்கம் சிதறுதுண்டுகள் வரா என்றபோதிலும் மிக அருகிருந்து வெடிக்க வைக்க முடியாது. கிளைமோரை வெடிக்க வைப்பவருக்கான பாதுகாப்புத் தூரமென்று ஒரு தூரத்தை உற்பத்தியாளர்கள் வரையறுத்து வைப்பார்கள். M18A1 எனும் கிளைமோருக்கு இது பதினைந்து மீற்றர்கள்.

பலநாடுகளின் பலநிறுவனங்கள் பல்வேறு வகையில் கிளைமோர்களைத் தயாரிக்கின்றன. எனவே கிளைமோரின் தாக்கும் ஆரை, கொலைவீச்சு, பாதுகாப்புத் தூரம் என்பன மாறுபட்டுக்கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக P5MK2 இன் தாக்கும் ஆரை 60 பாகை, அதேவேளை செந்தூரன்-96 இன் தாக்கும் ஆரை 80 பாகை.

பயன்படுத்தப்படும் முறைகள்[தொகு]

கிளைமோர் என்பது துருப்பெதிர்ப்பு வகைக் கண்ணிவெடியாகும். இவை மனித இலக்குகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. நேரடியாக மனித இலக்குகளை மட்டுமன்றி இலகுரக வாகனங்களிற் பயணிக்கும் மனித இலக்குகளுக்கு எதிராகவும் இவை பயன்படுத்தப்படுகின்றன. கிளைமோர்கள் நிலத்தின் மேலே பயன்படுத்தப்படுகின்றன. தரையில் கிளைமோரை நாட்டுவதற்கு உதவியாக இவற்றில் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. கிளைமோரின் கோணத்தை மாற்றும்வகையில் இக்கால்கள் அசைதிறனைக் கொண்டவை. கிளைமோர் நிலைப்படுத்தப்பட்ட பின்னர் இவை சிறந்தமுறையில் உருமறைக்கப்படுகின்றன. உருமறைக்கும்போது கிளைமோரின் முன்பக்கத்தில் பெரிய தடைகள் ஏற்படாதவண்ணம் உருமறைக்க வேண்டும். அல்லாதுவிடின் கிளைமோரிலிருந்து புறப்படும் சிதறுதுண்டுகளின் தாக்கத்தை இத்தடைகள் வெகுவாகக் குறைத்துவிடும். பொதுவாக சிறுபற்றைகள், புற்கள், சேறு என அச்சூழலோடு தொடர்புபட்டு இவை உருமறைப்புச் செய்யப்படுகின்றன.

கிளைமோர்கள் தரையில் நிலைப்படுத்தப்பட்டு மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. ஓரளவு உயரமான இடங்களில் - குறிப்பாக மரங்களில் பொருத்தப்பட்டுக்கூட பயன்படுத்தப்படுகின்றன. வாகனங்களில் வரும் எதிரிகள் மீதான தாக்குலுக்கு கிளைமோரை தரையில் நிலைப்படுத்துவதை விட மரங்களில் பொருத்தித் தாக்குதல் நடத்துவது அதிகளவு பலனைத் தரவல்லது.

ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிளைமோர்களை வெடிக்க வைத்துத் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதுண்டு. நேரடியாக ஒவ்வொரு கிளைமோருக்கும் ஒரேநேரத்தில் மின்சாரம் வழங்கியோ அல்லது ஒரு கிளைமோருக்கு மட்டும் மின்சாரம் வழங்கி ஏனைய கிளைமோர்களை வெடிப்பதிர்வு கடத்தி(Detonating cord) மூலம் இணைத்தோ தாக்குதல் நடத்தப்படுகிறது.

வெடிக்க வைக்கும் முறைகள்[தொகு]

கிளைமோர்

கிளைமோரை வெடிக்க வைப்பதற்கு கெற்பு (Detonator) பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான கிளைமோர்களில் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இது வெடித்தலின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக மட்டுமன்றி, சீரான வெடித்தலை உறுதிப்படுத்தவும் அதன் விளைவாக சிதறுதுண்டுகளைச் சரியாக வழிநடத்தவும் இரு கெற்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கெற்பு வெடித்து கிளைமோரிலுள்ள உயர்சக்தி வெடிமருந்தின் வெடித்தலைத் தொடக்கி வைக்கிறது. கெற்பை வெடிக்க வைக்கும் முறைகள் மூவகைப்படும்.

கட்டுப்பாட்டு முறை[தொகு]

இம்முறையில் கெற்பானது மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுகிறது. எந்நேரத்தில் வெடிக்க வேண்டுமென்பதை மனிதரொருவர் தீர்மானித்து இதைச் செயற்படுத்துகிறார். இம்முறையில் மின்சாரக் கெற்புகளே பயன்படுத்தப்படுகின்றன. இக்கெற்புகளுக்கு மின்சாரம் கிடைக்கும்போது அதற்குள்ளிருக்கம் தங்குதன் இளை எரிந்து வெடித்தலைத் தொடக்கிவைக்கிறது. நகர்ந்துவரும் எதிரிகளைத் தாக்கவென நிலைப்படுத்தப்பட்டிருக்கும் கிளைமோரை இலக்கு கொலைவலையத்துள் வந்ததும் குறிப்பிட்ட மனிதர் வெடிக்க வைப்பார். இம்முறையில் தாக்குதலை நடத்துபவர்கள் இலக்கை அவதானித்துக் கொண்டு நிற்க வேண்டும். மின்கம்பி மூலமாக நேரடியாக மின்சாரம் வழங்கியோ அல்லது தானியங்கிக் கட்டுப்பாட்டுக் கருவி மூலமோ (Remote control) தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.

கட்டுப்பாடற்ற முறை[தொகு]

இம்முறையில் கெற்பானது தாக்குதலைச் செய்யும் மனிதர்களாற் கட்டுப்படுத்தப்படுவதில்லை. மாறாக தாக்குதல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டவர்களால் தூண்டல் ஏற்பட்டு இவை வெடிக்க வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இவை பொறிவெடியாக அமையப் பெற்றிருக்கும். எடுத்துக் காட்டாக, வீதிக்குக் குறுக்காக இடறுகம்பியொன்றைக் கட்டி, அது இடறுப்படும்போது செயற்படத்தக்கதாக ஒரு பொறியமைப்பை அதன் ஓர் அந்தத்திற் பொருத்தி கிளைமோரை நிலைப்படுத்தி வைத்தல். வீதியில் நடந்துவருபவர்களோ வாகனமோ இடறுகம்பியில் இடறும்போது கிளைமோர் வெடிக்கும். இம்முறையில் மின்சாரக் கெற்புகள் மட்டுமன்றி, ஏனைய பொறிமுறைக் கெற்புகளும் பயன்படுத்தப்படுகின்றன.

நேரக் கணிப்பி முறை[தொகு]

இது மேற்குறிப்பிட்ட இரு வகைக்குள்ளும் அடக்க முடியாததால் தனியொரு முறையாகக் வகைப்படுத்தப்படுகிறது. கிளைமோரோடு பொருத்தப்பட்ட நேரக்கணிப்பியில் (Timer) தாமத நேரம் தெரிவு செய்யப்பட்டு இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரம் வந்தது கிளைமோர் வெடிக்கும். இம்முறை மிகமிக அரிதாகவே கிளைமோர்த் தாக்குதல்களிற் பயன்படுத்தப்படுகிறது.

க்ளைமோர் வகை கண்ணி ஒன்று
க்ளைமோரால் தாக்கப்பட்ட பேருந்து ஒன்று. வெடித்து தெறித்த சன்னங்கள் ஏற்படுத்திய துளைகளை கவனிக்கவும்

வெவ்வேறு நாடுகள் தயாரிக்கும் கிளைமோர்களின் பெயர்கள்[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடுகள்[தொகு]

 • M18A1

சோவியத் ஒன்றியம்[தொகு]

 • MON-50
 • MON-90
 • MON-100
 • MON-200

இஸ்ரேல்[தொகு]

 • No. 6

பிரான்ஸ்[தொகு]

 • MAPED F1

தென்னாபிரிக்கா[தொகு]

 • Mini MS-803

பாகிஸ்தான்[தொகு]

 • P5MK1, P5MK2

இலங்கை[தொகு]

இலங்கையில் போரிடும் இருதரப்புமே கிளைமோர்க் கண்ணிவெடிகளைப் பயன்படுத்துகின்றன. இலங்கை இராணுவம் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில்தான் கிளைமோர்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருந்தாலும் விடுதலைப்புலிகள் அதற்கு முன்பிருந்தே அதிகளவில் கிளைமோர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

இலங்கை இராணுவம் பயன்படுத்துபவை[தொகு]

 • M18A1 (அமெரிக்கா)
 • P5MK1(பாகிஸ்தான்)

பிற்காலத்தில் அதிகளவு தாக்குதிறனைப் பெறுவதற்காகவும் சில சிறப்புத் தேவைகளுக்காகவும் இலங்கை இராணுவம் சொந்தமாக சில கிளைமோர்களை உற்பத்தி செய்திருந்தது.

விடுதலைப் புலிகள் பயன்படுத்துபவை[தொகு]

விடுதலைப் புலிகள் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய காலத்திலிருந்து கிளைமோர்களை அதிகளவில் பயன்படுத்தினர் . இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிகவும் சக்தி வாய்ந்த கிளைமோர் கண்ணிகள் தயாரிக்கப்பட்டன.

 • தோழநம்பி 2000 தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்ட கிளைமோர். இது 15 கிலோகிராம் எடை கொண்டது. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும்.
 • செந்தூரன் 96. இதுவே புலிகளால் தயாரிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் கிளைமோர். புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட கிளைமோர்க் கண்ணிவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான கிளைமோர்களை பலபெயர்களில் புலிகள் தயாரித்துப் பயன்படுத்தினர்.
 • இராகவன். இது வழமையான கிளைமோர்கள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையிலும் சிதறுதுண்டுகளை ஏவி பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
 • கட்டுப்பாடற்ற தாக்குதல் வகைக்குரியதாக விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட கிளைமோர் 'சாந்த குமாரி'. இது விடுதலைப்புலிகளின் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் இறந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாகத் தயாரிக்கப்பட்டது. இடறுகம்பிப் பொறிமுறையுடன் கூடியதாக இக்கிளைமோர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைமோர்&oldid=2994491" இருந்து மீள்விக்கப்பட்டது