கிளார்க் நட்கிரேக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளார்க் நட்கிரேக்கர்
டிஸ்டுசர் தேசிய பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Corvidae
பேரினம்: Nucifraga
இனம்: N. columbiana
இருசொற் பெயரீடு
Nucifraga columbiana
(Wilson, 1811)

கிளார்க் நட்கிரேக்கர் (Clark's nutcracker, Nucifraga columbiana), சில நாடுகளில் கிளார்க் காகம் என்றும், கிளார்க் மரங்கொத்தி என்றும் அழைக்கப்படும், இது கார்டீடா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாஸிட்டரின் பறவையாகும். இதன் யூரேசிய உறவுப் பறவையான நட்ரக்ராகரை (என் கேரியோகாட்ரட்ஸ்) விட சற்று சிறியது. இது கருப்பு மற்றும் வெள்ளை நிற இறக்கைகள் மற்றும் நடு வால் இறகுகளைத் (வெளிப்புறமாக வெள்ளை இருக்கும்) தவிர, உடல்பகுதி சாம்பல் நிறத்தைக் கொண்டதாக இருக்கும், இதன் கால்கள் கருப்பு நிறமுடையவை. இந்த பறவைக்கு வில்லியம் கிளார்க் என்ற பறவை ஆராய்ச்சியாளரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

ஒரிகன், ஹூம் மலையில் இறங்கும் கிளார்கின் நட்ரக்கர்

காணப்படும் பகுதி[தொகு]

இவற்றை மேற்கு வட அமெரிக்காவில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து மேற்கு ஆல்பர்டாவிலும் , பாஜா கலிஃபோர்னியாவின் வடக்கிலும், நியூ மெக்ஸிகோவின் மையத்திலும் காணலாம். இவை முதன்மையாக மலைகளில் 900-3,900 மீட்டர் (3,000-12,900 அடி) உயரமான பகுதிகளில் உள்ள ஊசி இலைக் காடுகளில் காணப்படுகிறன. இனப்பெருக்கக் காலம் தவிர மற்றக் காலங்களில் நட்கிரேக்கர் இரை தேடித் தாழ்வான பகுதிகளை நோக்கிப் பறந்துகொண்டேயிருக்கும். இதற்காக நீண்ட தூரப் பயணம் செய்யும் இது, மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவின் இலினொய் மாகாணம் வரையிலும்கூட கீழிறங்கிப் பறந்து வரும்.

உணவு[தொகு]

பைன் மரத்திலிருந்து கிடைக்கும் விதைகளே இப்பறவையின் முதன்மை உணவு ஆகும். கோடைக் காலம் தொடங்கியவுடன் இரை தேடிப் புறப்படும் நட்கிரேக்கர் பறவைகள், பைன் மரத்தின் பழங்களைத் தன் அலகால் சிதைத்து, உடைத்து அதன் விதைகளைச் சேகரித்துக்கொள்கிறன. இவை குளிர் காலம் முழுமைக்கும் தேவையான அளவு விதைகளைச் சேகரித்துக்கொண்டு போய், தன் வசிப்பிடத்தின் அருகே ஓரிடத்தில் 1 முதல் 15 விதைகள் வீதம் கிட்டத்தட்ட 30 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சம் வரையிலான விதைகளைச் சேமித்து வைத்துவிடும். பைன் மரங்களிலிருந்து விதைகளைப் பிரித்துத் தன் வாயாலேயே, தன் இருப்பிடத்துக்குச் சுமந்து செல்ல வசதியாக இதன் வாயில், நாக்கின் கீழே ஒரு ‘பை’ போன்ற அமைப்பு உள்ளது. இந்தப் பையில் விதைகளின் அளவை பொருத்து 50 முதல் 150 விதைகளைச் சேகரித்துக்கொண்டு பறந்து சென்று தன் இருப்பிடம் அருகே பூமிக்கடியில் குழிகளில் பதுக்கி வைக்கும்.

இவ்வாறு இப்பறவை சேமித்து வைக்கும் விதைகளை மற்ற சில உயிரினங்களும் சாப்பிட்டுவிடும். அதனால் கொஞ்சம் கூடுதலாகவே இவை விதைகளைச் சேமித்து வைப்பதாகப் பறவை ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இவை குளிர்காலத்தில் சாப்பிட்டது போக மீதியிருக்கும் விதைகள் பூமிக்கு உள்ளேயே புதைந்து கிடக்கும். நல்ல ஈரப்பதமும் வெப்பமும் இருக்குமிடங்களில் இவை முளைத்துப் பெரிய மரங்களாகவும் வளர்ந்துவிடுகின்றன. இவை நல்ல நினைவாற்றல் கொண்டவையாக உள்ளன 9 மாதங்களுக்குப் பிறகுகூட, மூன்று அடி ஆழத்தில் பனியால் மூடி கிடக்கும் விதைகளை இந்த பறவைகளால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]