கிறீக் இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறீக்
State of Muskogee (Florida, 1799-1803).svg
கிறீக் தேசிய இனக் கொடி
Opothle Yaholo.jpg
ஒப்போத்லேஅகோலா, முஸ்கோஜிகளின் தலைவன், 1830s
மொத்த மக்கள்தொகை
(50,000-60,000)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஐக்கிய அமெரிக்கா (ஒக்லகோமா, அலபாமா)
மொழி(கள்)
ஆங்கிலம், கிறீக்
சமயங்கள்
புரட்டஸ்தாந்தம், பிற
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முஸ்கோஜி மக்கள்: அலபாமா, சிக்கசாவ், சொக்ட்டாவ், கோஷாத்தா, மிக்கோசுக்கீ, செமினோலே

கிறீக் இனக்குழு (Creek) என்பது தொடக்கத்தில் தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருந்த தொல்குடி அமெரிக்க இனத்தைக் குறிக்கும். இவர்கள் தங்கள் இனத்தை முஸ்கோஜி (Muscogee) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இவர்கள் தற்காலத்தில் ஒக்லஹோமா, அலபாமா, ஜார்ஜியா, புளோரிடா ஆகிய ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பேசும் ம்விஸ்கோக்கே (Mvskoke) அல்லது கிறீக் மொழி, முஸ்கோஜிய மொழிக் குடும்பத்தின் கீறீக் துணைப் பிரிவைச் சேர்ந்தது. செமினோலேக்கள் இவர்களுக்கு நெருங்கிய இனத்தவராவர். அவர்களும் கிறீக் பிரிவு மொழியொன்றையே பேசுகின்றனர். ஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் எனக் குறிப்பிடப்படும் பழங்குடிகளுள் கிறீக் இனத்தவரும் அடங்குவர்.

வரலாறு[தொகு]

வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த கிறீக் மக்கள், மண்மேடு கட்டிகள் என வரலாற்றாளர்களால் குறிப்பிடப்படும், தென்னசி ஆற்றோரம் அமைந்திருந்தமிசிசிப்பிப் பண்பாட்டு மக்களின் வழி வந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நாகரிகம் இன்றைய தென்னசி (Tennessee), அலபாமா, தென் ஜார்ஜியாவில் உள்ள உத்தினாகிக்கா (Utinahica) ஆகிய இடங்களில் பரந்து இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒரு தனிப் பழங்குடி என்பதிலும், பல குழுக்கள் இணைந்த ஒரு தொகுதியாக, ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் இருந்த தன்னாட்சித் தன்மை கொண்ட ஊர்களில் இவர்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வூர்கள், இன்றைய தென்னசி, ஜார்ஜியா, அலபாமா ஆகிய மாநிலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தன. இம்மக்களுள், பல இனத்தவரும், ஹிச்சித்தி, அலபாமா, கௌஷாத்தா போன்ற பல தனித்துவமான மொழிகளைப் பேசுவோரும் இருந்தனர்.

ஒக்முல்கீ ஆற்றங்கரையோரம் வாழ்ந்த இவ்வினத்தவரை கிறீக் இந்தியர்கள் எனத் தென் கரோலினாவில் இருந்து வந்த பிரித்தானிய வணிகர்கள் அழைத்தனர். இது வே தொடர்ந்து அப் பகுதியில் எல்லா ஆற்றங்கரையோர மக்களையும் குறிக்கும் பெயர் ஆயிற்று. இம்மக்களிடையே கீழ் நகரத்தார் மேல் நகரத்தார் என்ற பிரிவுகள் ஏற்படத் தொடங்கின. ஜார்ஜியா எல்லையோரப் பகுதியில் சட்டகூச்சி ஆறு, ஒக்மல்கி ஆறு, ஃபிளிட் ஆறு ஆகியவற்றின் கரைகளில் அமைந்த நகரங்கள் கீழ் நகரங்களாகவும், அலபாமா ஆற்றுப் பள்ளத்தாக்கு நகரங்கள் மேல் நகரங்கள் ஆகவும் இருந்தன. கீழ் நகரங்களுள், கொவேத்தா, குசேத்தா, மேல் செகாவ், ஹிச்சித்தி, ஓக்கோனி, ஒக்மல்கீ, அப்பலாச்சி, யமாசி, ஒக்புஸ்கி, சவோக்லி, தமாலி ஆகிய நகரங்கள் அடங்கியிருந்தன. துக்காபச்சி, அபிக்கா, குசா, இத்தாவா, ஹோத்லிவாகி, ஹிலிபி, இயுஃபோலா, வாக்கோகை, அத்தாசி, அலிபாமு, கோஷாத்தா, துஸ்கேஜீ ஆகிய நகரங்கள் மேல் நகரங்கள் ஆகும்.

ஹோல்-தே-மால்-தே-தெஸ்-தே-நேயெக்-ஈ அல்லது சாம் பெரிமன், 1834, சிமித்சோனியன் அமெரிக்க ஓவிய அருங்காட்சியகம்

கொவேத்தா, குசேத்தா ஆகிய இரு நகரங்களுமே கிறீக் தேசிய இனத்தாரின் முக்கிய நகரங்களாக இன்றுவரை உள்ளன. மரபு வழியாக குசேத்தா, கொவேத்தா குழுக்களே கிறீக் தேசிய இனத்தின் உறுப்பினராகக் கருதப்பட்டனர்.

அமெரிக்கப் புரட்சிக்காலம்[தொகு]

அமெரிக்கப் புரட்சியின்போது, மிசிசிப்பி ஆறு, லூசியான ஆறு ஆகியவற்றுக்குக் கிழக்கே இருந்த பல தொல்குடி அமெரிக்க இனக்குழுக்களைப் போலவே கிறீக் இனத்தவரும், எப்பகுதியை ஆதரிப்பது என்பதில் பிரிந்து இருந்தனர். கீழ் கிறீக்குகள் நடுநிலை வகிக்க, மேல் கிறீக்குகள் பிரித்தானியருக்கு ஆதரவாக அமெரிக்கருடன் போரிட்டனர்.

1783 ஆம் ஆண்டில், போர் முடிவடைந்த பின்னர், பிரித்தானியர் கிறீக் நிலங்களை புதிய ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்ததை அறிந்தனர். ஜார்ஜியா மாநிலம் கிறீக் நிலப் பகுதிகளுக்குள் விரிவடையத் தொடங்கியது. கிறீக் அரசியல் தலைவனான அலெக்சாண்டர் மக்கில்லிவ்ரே (Alexander McGillivray) இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக பரந்த தொல்குடியினரின் அமெரிக்க எதிர்ப்புப் போராட்டங்களை ஒழுங்கு செய்தார். அத்துமீறும் ஜார்ஜியர்களுடன் போரிட புளோரிடாவில் இருந்த எசுப்பானியரிடம் இருந்து ஆயுதங்களும் அவருக்குக் கிடைத்தன. தனித்தனியாக அமெரிக்காவுக்குத் தங்கள் நிலங்களை விற்ற ஊர்த் தலைவர்களைச் சமாளிக்க வேண்டி இருந்ததுடன், கிறீக் அதிகாரத்தை மையப்படுத்தவும், கிறீக் தேசிய உணர்வை உருவாக்கவும், மக்கில்லிவ்ரே உழைத்தார். 1790 இல் செய்துகொள்ளப்பட்ட நியூ யார்க் ஒப்பந்தத்தின் மூலம், எஞ்சிய பகுதியில் கிறீக் தன்னாட்சியை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என்ற நிபந்தனையுடன், கிறீக் நிலங்களின் குறிப்பிடத்தக்க அளவு பகுதியை ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுக்க மக்கில்லிவ்ரே உடன்பட்டார். ஆனால் மக்கில்லிவ்ரே 1793 ஆம் ஆண்டில் இறக்கவே, ஜார்ஜியர்கள், கிறீக் நிலப் பகுதிகளுக்குள் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தனர்.

வெளியிணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muscogee
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறீக்_இனக்குழு&oldid=3707487" இருந்து மீள்விக்கப்பட்டது