கிர்லி குணவர்தன
கிர்லி குணவர்தன ගර්ලි ගුණවර්ධන | |
|---|---|
| பிறப்பு | டோனா கிர்லி கிரேசு குணவர்தனா 15 நவம்பர் 1935 லவினியா மலை, தெகிவளை, இலங்கை |
| இறப்பு | 11 மார்ச்சு 2012 (அகவை 76) கொழும்பு |
| கல்வி | பெண்கள் உயர்நிலைப் பள்ளி மவுண்ட் லவினியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1952–1994 |
| வாழ்க்கைத் துணை | ஸ்டான்லி பெரேரா (திருமணம் 1956) |
| பிள்ளைகள் | 4 |
| உறவினர்கள் | சபீதா பெரேரா (மகள்) |
கிர்லி குணவர்தன (Girley Gunawardana)(டோனா கிர்லி கிரேசு குணவர்தன) (15 நவம்பர் 1935 - 11 மார்ச் 2012) இலங்கைத் திரைப்படத்துறையில் நடிகை ஆவார்.[1] இவர் பிரபல நடிகை சபீதா பெரேராவின் தாயார் ஆவார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]குணவர்தன 1935 நவம்பர் 15 அன்று மவுண்ட் லவினியாவில் குடும்பத்தின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு டைட்டசு, லயனல், எர்வின் என்ற மூன்று மூத்த சகோதரர்களும், ஒரு மூத்த சகோதரியும், ரோசு என்ற இளைய சகோதரியும் இருந்தனர். இவர் மவுண்ட் லவினியா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.[3]
குணவர்தன பிரபலமான திரைப்பட நடிகர் ஸ்டான்லி பெரேராவை மணந்தார். 1956 சூலை 21 அன்று, இவர்கள் இரகசியமாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.[4] இருவரும் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்தபோதிலும், இது இரகசியமாகவே இருந்தது. இந்தத் தம்பதியருக்கு சந்தியா, சத்னா, சபீதா மற்றும் சந்திமா என நான்கு மகள்கள் உள்ளனர்.[3] மூன்றாவது மகளான சபீதா பெரேரா சிங்களத் திரைப்படங்களில் பிரபலமான நடிகை ஆவார். இவர் 70இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[5][4] சபீதா 1985இல் சிறந்த நடிகைக்கான சரசவியா விருதையும் வென்றார்.[2]
இவர் 11 மார்ச்சு 2012 அன்று தனது 76ஆவது வயதில் காலமானார்.இவரது உடல் கொட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுர மாவத்த, எண்: 286இல் உள்ள இவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.[6] இறுதிச் சடங்கு 13 மார்ச் 2012 அன்று மாலை 6.30 மணிக்கு பொரெல்லா மயானத்தில் நடைபெற்றது.[7][8]
தொழில் வாழ்க்கை
[தொகு]பள்ளிப் பருவத்தில், இவர் பிரபல நாடக ஆசிரியர் எதிரிவீர சரச்சந்திராவின் மனைவியான அய்லியன் சரச்சந்திராவிடம் நாடகம் நடிப்பதற்குப் பயின்றார். அய்லியனிடம் நடனமும் நடிப்பும் கற்பித்த நெரஞ்சனா தேவியிடம் நடனமாடும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.[3] 'டோப் ஆயா' என்ற மேடை நாடகத்தின் மூலம் இவர் முதன்முதலில் பொது மேடையில் நடித்தார்.[2]
1952இல், சிறீ முருகன் நியூ ஆர்ட் ஃபிலிம் கம்பெனி, தங்களின் சமீபத்திய திரைப்படமான 'பிரேம தரகயா'வில் நடிப்பதற்காக ஒரு நடிகையின் காலியிடம் குறித்து விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.[9] படத்தின் முன்னணி நடிகை ஆயிசா வீரக்கோனின் தோழியாக ஒரு பாடலில் நடிக்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது.[3]
'பிரேம தரகயா'வின் விளைவாக, 1953இல் எசு. எம். நாயகத்தின் அடுத்த தயாரிப்பான 'புதும லேலி'யில் பிரேம் ஜெயந்த் மற்றும் நந்த லீலநாயக்க ஆகியோருடன் குணவர்தனவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் திரைப்படத்தில், இவருக்கு ஒரு நடனக் காட்சியும் இருந்தது.[3][9]
1953இல் பிரபலமான 'சரடியல்' திரைப்படத்தின் படப்பிப்பின் போது, தனது நடிப்பு குருவாக இருந்த சிறிசேன விமலவீரவிடமிருந்து இவர் நிறையக் கற்றுக்கொண்டார்.[10] இவர் இப்படத்தில் "தங்கம்மா" என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[3][9]
ஸ்டான்லியும் கிர்லியும் 1956இல் வெளியான 'துப்பத்தகே துக்கா' திரைப்படத்தில் காதலர்களாக நடித்தனர்.[4] இப்படத்தில், ஸ்டான்லி "திலக்" என்ற கிளர்ச்சியாளரான பல்கலைக்கழக இளைஞராகவும், கிர்லி "நளினி" ஆகவும் நடித்தனர்.[3]
துப்பத்தகே துக்கா திரைப்படத்திற்குப் பிறகு, இவர் கந்தேரா, சுப சரண சேப சித்தே, சசராக ஹதி, லா தாலு, கதரா மகா நிதானயா, இவசனா தானா, தவேன பிபசயா, டோம் பச்சயா மற்றும் ராச ரகசக் போன்ற பல வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்களில் நடித்தார்.[2] 1984ஆம் ஆண்டில், கிர்லி தனது சொந்த மகள் சபீதாவுடன் இணைந்து தேவேனி கமன என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் முதன்முறையாக வயதில் மூத்தவா் பாத்திரத்தில் நடித்தார்.[3] 1967ஆம் ஆண்டு வெளியான இவசனா தானா திரைப்படத்தில், கிர்லி தனது கணவர் ஸ்டான்லி பெரேரா மற்றும் மகள் சபீதாவுடன் இணைந்து நடித்தார்.[9]
குழந்தைகள் பிறந்த பிறகு இவர் திரைப்படத்துறையை விட்டு விலகினார்.[3] இருப்பினும், இதன் பிறகு இவர் சில சிறிய வேடங்களில் தோன்றினார். 1994ஆம் ஆண்டு வெளியான அகசு மாலிகா என்பது இவரது கடைசித் திரைப்படம் ஆகும் .[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Actresses in Sinhala cinema - Girley Gunawardena". National Film Corporation of Sri Lanka - 2020. Archived from the original on 28 February 2020. Retrieved 28 February 2020.
- 1 2 3 4 5 "Remembering Girley Gunawardena". Daily Mirror. Retrieved 25 January 2020.
- 1 2 3 4 5 6 7 8 9 "Thangamma falls in love with John Jayapala". Sarasaviya. Retrieved 28 February 2020.
- 1 2 3 "Remembering Stanley Perera". Daily Mirror. Retrieved 28 February 2020.
- ↑ "Sabeetha". Life Online. Retrieved 28 February 2020.
- ↑ "Girly Gunawardena passes away". Daily News. Retrieved 28 February 2020.
- ↑ "Girlie Gunawardene passed away". lankanstuff. Retrieved 28 February 2020.
- ↑ "Girly Gunawardena passes away". Lankadeepa. Retrieved 28 February 2020.
- 1 2 3 4 "Gurley Gunawardena to quit". Divaina. Retrieved 28 February 2020.
- ↑ "ගර්ලි ගුණවර්ධන ජීවිත සිනමාවෙන් සමු ගනී". Sarasaviya. Retrieved 28 February 2020.