உள்ளடக்கத்துக்குச் செல்

கிரைஸ்லர் கட்டிடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்லெர் கட்டிடம்

கிறிஸ்லெர் கட்டிடம் நியூயோர்க் நகருக்குத் தனித்துவமான ஒரு அடையாளச் சின்னமாகும். 1930ல் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 1046 அடிகள் (319 மீட்டர்) உயரமானதாகும். மான்ஹற்றனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கிறிஸ்லெர் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காகக் கட்டப்பட்ட இது, இப்பொழுது டி.எம்.டப்ளியூ (TMW) ரியல் எஸ்டேட் நிறுவனத்தாலும் (75%), திஷ்மான் ஸ்பேயர் ப்ரொப்பர்ட்டீஸ் நிறுவனத்தாலும் (25%) கூட்டாக வாங்கப்பட்டுள்ளது. கிறிஸ்லெர் கட்டிடம், வில்லியம் ஹெச் ரெனோல்ட்ஸ் என்னும் ஒப்பந்தக்காரருக்காக, வில்லியம் வான் அலன் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவ் வடிவமைப்புப் பின்னர் வால்டெர் கிறிஸ்லெர் என்பவரால் அவரது நிறுவனத்தின் தலைமையகத்துக்காக வாங்கப்பட்டது.


இக் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில், உலகின் உயர்ந்த வானளாவியெக் கட்டுவது தொடர்பாக, கட்டிடம் கட்டுபவர்களிடையே கடும் போட்டியிருந்தது. கிறிஸ்லெர் கட்டிடம் வாரத்துக்கு 4 தளங்கள் வீதம் கட்டப்பட்டது. இக் கட்டுமானத்தின் போது ஒரு வேலையாள் கூட பணிக்காலத்தில் இறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கட்டிடம் கட்டிமுடிப்பதற்குச் சற்றுமுன், ஹெச். கிரெய்க் செவெரன்ஸின், 40 வால் தெருவிலுள்ள கட்டிடத்துடன் சம அளவில் இருந்தது. செவெரன்ஸ் அவர்கள் பின்னர் தன்னுடைய கட்டிடத்துக்கு மேலும் இரண்டடி சேர்த்து உயரமாக்கித் தனது கட்டிடமே உலகின் உயரமான கட்டிடம் என்று கூறிக்கொண்டார்.(இது ஈபெல் கோபுரம் போன்ற "அமைப்பு"க்களை உள்ளடக்கவில்லை.)


வான் அலன், 125 அடி (38.1 மீட்டர்) உயரமான spire ஒன்றைக் கட்டுவதற்காக இரகசியமாக அனுமதி பெற்று வைத்திருந்தார். இது கட்டிடத்தினுள்ளேயே கட்டப்பட்டுவந்தது. துருப்பிடியாத உருக்கினால் செய்யப்பட்ட இந்த அமைப்பு, நவம்பர் 1929 இல் ஒருநாள் பின்னேரத்தில் கட்டிடத்துக்கு மேல் உயர்த்தப்பட்டதன் மூலம் கிரிஸ்லெர் கட்டிடம், உலகின் உயரமான கட்டிடம் மட்டுமன்றி, உயரமான அமைப்புமாக ஆக்கப்பட்டது. வான் அலனும், கிறிஸ்லெரும் இந்தப் பெருமையை, எம்பயர் ஸ்டேட் கட்டிடத்திடம் இழக்கும்வரை, ஒரு வருடத்துக்கும் குறைவாகவே அனுபவிக்க முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக வான் அலனுடைய திருப்தி, கிரிஸ்லெர் அவருடைய கட்டணத்தைச் செலுத்த மறுத்ததனால் இல்லாமல் போனது.

1932இல் கிறிஸ்லெர் கட்டிடம்

கிரிஸ்லெர் கட்டிடம், ஆர்ட் டெக்கோ கட்டிடக்கலையின் பிரமிக்கத்தக்க உதாரணமாகும். கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட தனித்துவமான அலங்காரங்கள், கிரிஸ்லெர் மோட்டார் வாகனங்களில் பயன்படுத்திய ஹப்கப்களின் (hubcaps) அடிப்படையில் அமைந்திருந்தது.


வாயில் மண்டபமும், அதேபோல அழகானது. கட்டிடம் முதலில் திறந்துவைக்கப்பட்டபோது, உச்சியில் ஒரு பொது காட்சிக்கூடம் அமைந்திருந்தது. சில காலங்களின்பின் அது ஒரு உணவகமாக மாற்றப்பட்டது. இவ்விரண்டு முயற்சிகளுமே அக்காலத்தின் பாரிய பொருளாதார மந்தநிலை காரணமாக, நிதியடிப்படையில் தங்களைத் தாங்களே பராமரித்துக்கொள்ள முடியாமற்போனதால், முந்தைய அவதானிப்புத் தளம் ஒரு தனியார் விடுதியாக (private club) மாற்றப்பட்டது. கட்டிடத்தின் உச்சிக்குக் அருகில் உள்ள தளங்கள், ஒடுக்கமானவையாகவும், உயரம் குறைந்த, சரிவான சீலிங்குகளைக் கொண்டனவாகவும் இருந்தன. இவை வெளித் தோற்றத்துக்காகவே வடிவமைக்கப்பட்டவை. உள்ளே இயந்திரங்களும், மின் உபகரணங்களும், வானொலிக்கருவிகளும் வைப்பதற்கே பயன்படக்கூடியவையாக இருந்தன.


கிறிஸ்லெர் கட்டிடம், பயன்பாடுசார்ந்த நவீனத்துவத்திலிருந்து விலகியிருந்த, அதன் அற்பத்தனமான அலங்காரங்களுக்காக, அக்காலத்திய விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது. எனினும், பொது மக்கள், விரைவில் அதனைப் பாராட்டுக்குரிய கவர்ச்சியான கட்டிடமாக ஏற்றுக்கொண்டனர். காலப் போக்கில், இக் கட்டிடம், 1920களின் கட்டிடக்கலையின் சிறந்த வெளிப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரைஸ்லர்_கட்டிடம்&oldid=2142520" இலிருந்து மீள்விக்கப்பட்டது