கீர்த்திவர்மன் (சந்தேல வம்சம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிருத்திவர்மன் (சந்தேல வம்சம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கீர்த்திவர்மன்
பரம-பட்டாரக மகாராசாதிராச பரமேசுவரா, கலஞ்சராதிபதி
சந்தேல மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் பொ.ச.1060–1100
முன்னையவர்தேவவர்மன்
பின்னையவர்சல்லக்சணவர்மன்
அரசமரபுசந்தேல வம்சம்
தந்தைவிசயபாலன்
தாய்புவனதேவி

கீர்த்திவர்மன் (Kirttivarman) (ஆட்சிக் காலம் பொ.ச.1060-1100 ), இந்தியாவின் சந்தேல வம்சத்தின் அரசனாவான். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தான். இவன் காலச்சூரியின் மன்னன் இலட்சுமிகர்ணனை தோற்கடித்து சந்தேல சக்தியை உயிர்ப்பித்தான்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கீர்த்திவர்மனின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் ( மத்திய பிரதேசத்தின் வரைபடம்)
சந்தேல மன்னன் கீர்த்திவர்மன் கஜுராஹோ கோவிலுக்குச் செல்வது போன்ற 20ஆம் நூற்றாண்ல் வரையப்பட்ட ஒரு கற்பனையான ஒரு ஓவியம்.

கீர்த்திவர்மன், சந்தேல மன்னன் விசயபாலனின் மகனாவான். இவனுக்கு முன் இவனது மூத்த சகோதரர் தேவவர்மன், வாரிசு இல்லாமல் இறந்திருக்கலாம்.[1] பொ.ச.1090 கலிஞ்சர் கல்வெட்டுகளிலும், 1098 தியோகர் பாறைக் கல்வெட்டுகளிலும் இவனைப் பற்றிய தகவல் கிடைக்கப்பெறுகின்றன.[2]

போர் வெற்றிகள்[தொகு]

தேவவர்மனின் ஆட்சியின் போது சந்தேலர்கள் காலச்சூரி மன்னன் இலட்சுமிகர்ணனால் அடிமைபடுத்தப்பட்டிருந்தனர். கீர்த்திவர்மன் இலட்சுமிகர்ணனைத் தோற்கடித்து சந்தேல சக்தியை உயிர்ப்பித்தான். இவன் வழித்தோன்றலான வீரவர்மனின் அஜய்கர் பாறைக் கல்வெட்டு, கர்ணனை வென்று புதிய அரசை உருவாக்கியதாகக் கூறுகிறது.[3] ஒரு மஹோபா கல்வெட்டு இவனை புருசோத்தமனுடன் ( விஷ்ணு ) ஒப்பிடுகிறது. மேலும் ஆணவமிக்க இலட்சுமிகர்ணனை தனது வலிமையான கரங்களால் நசுக்கியதாகவும் கூறுகிறது.[4] இவனது சமகாலத்தவரான சிறீகிருட்டிண மிசுரா என்பவர் எழுதிய 'பிரபோத-சந்திரோதயம்' என்ற நாடகத்தில், சிறீகோபாலன் என்ற ஒருவன் இலட்சுமிகர்ணனை தோற்கடித்து கீர்த்திவர்மனின் எழுச்சிக்கு காரணமானான் என்று கூறுகிறது. இந்நாடகம் கீர்த்திதிவர்மனின் அரசவையில் அரங்கேற்றப்பட்டதால், சிறிகோபாலன் அரசனால் உயர்வாக மதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வரலாற்றாசிரியர்கள் கோபாலனை ஒரு நிலப்பிரபுத்துவவாதி, தளபதி அல்லது கீர்த்திவர்மனின் உறவினர் என்று பலவிதமாக நம்புகிறார்கள். [2] வரலாற்றாசிரியர் எஸ். கே. மித்ரா போரின் தேதி பொ.ச.1070 என நம்புகிறார்.[5]

சந்தேலக் கல்வெட்டுகள் கிருத்திவர்மன் பல எதிரிகளை வென்றதாகவும், இவனது கட்டளைகள் "கடலின் எல்லையை அடைந்தன" என்றும் குறிப்பிடும் மற்ற வெற்றிகளுக்கு பெருமை சேர்த்துள்ளன. [6]

கசனவித்து ஆட்சியாளர் இப்ராகிம் (ஆட்சிக் காலம் பொ.ச.1059-1099), சந்தேலர்களின் கோட்டையான கலிஞ்சர் கோட்டையைத் தாக்கியதாக திவான்-இ-சல்மான் முஸ்லிம் சரித்திரம் கூறுகிறது. கீர்த்திவர்மன் இப்ராகிமிடமிருந்து படையெடுப்பை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று இது கூறுகிறது. சந்தேலர்கள் தனது ஆட்சியின் போது கலிஞ்சரின் கட்டுப்பாட்டை இழந்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே இந்த படையெடுப்பு வெறும் தாக்குதலாக இருக்கலாம். [7]

நிர்வாகம்[தொகு]

பொ.ச.1098 தேதியிட்ட தேவ்கர் கல்வெட்டு வத்சராசன் என்பவனை கீர்த்திவர்மனின் முதலமைச்சர் என்று குறிப்பிடுகிறது. தேவ்கர் கோட்டையால் பாயும் பேட்வா ஆற்றங்கரையில் தொடர்ச்சியான படித்துறைகள் கட்டப்பட்டதை இது பதிவு செய்கிறது. வத்சராசன் கோட்டையை ("கிருத்திகிரி-துர்கா") கட்டினான் என்றும் அது கூறுகிறது.[5]

கீர்த்திவர்மனின் மற்றொரு முக்கியமான மந்திரியாக அனந்தன் என்பவன் இருந்துள்ளான். இவனது தந்தை மகிபாலன், கீர்த்திவர்மனின் தந்தை விசயபாலனுக்கு சேவை செய்தவன். அனந்தன் மந்திரி (ஆலோசகர்), அதிமதா-சச்சிவா (அங்கீகரிக்கப்பட்ட மந்திரி), ஹஸ்த்யவனேதா (யானை மற்றும் குதிரைகளின் தலைவர்), புரபாலதிக்சா (தலைநகரின் பாதுகாப்புப் பொறுப்பாளர்) உட்பட பல பதவிகளை வகித்தான்.[2]

கீர்த்திவர்மன் மஹோபாவில் உள்ள கிராத் சாகர் ஏரியையும், சந்தேரியிலுள்ள கிராத் சாகர் ஏரியையும், கலிஞ்சரில் உள்ள புத்தியா தால் ஏரியையும் உருவாக்கியதாக நம்பப்படுகிறது. நாட்டுப்புற பாரம்பரியத்தின் படி, இவன் தொழுநோயால் பாதிக்கப்பட்டான். மேலும் புத்தியா தாலில் குளித்து தன்னை குணப்படுத்திக் கொண்டான்.[8]

மதம்[தொகு]

கீர்த்திவர்மனின் ஆட்சிக் காலத்து கல்வெட்டுகள் இவன் ஒரு சைவ சமயத்தைச் சேர்ந்தவன் என்றும், ஆனால் வைணவத்தையும்ம், சமண மதத்தையும் ஆதரித்தவன் என்றும் கூறுகின்றன. [2]

ஒரு மவூ கல்வெட்டு இவனை, மனிதனை மோட்சம் அடைய விடாமல் தடுக்கும் எதிர்மறை பண்புகளை வென்ற நீதியுள்ள ஆட்சியானாகச் சித்தரிக்கிறது.[9] சிற்றின்ப சிற்பங்களைக் கொண்ட முந்தைய கஜுராஹோ கோயில்களைப் போலன்றி, கீர்த்திவர்மனின் ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பின்னரும் கட்டப்பட்ட கோயில்களில் பாலியல் உருவங்கள் இடம்பெறவில்லை. கீர்த்திவர்மன் சந்தேலர்களின் தலைநகரை கஜுராஹோவிலிருந்து மஹோபாவிற்கு மாற்றியதாக வரலாற்றாசிரியர் எம். எல். வரத்பாண்டே நம்புகிறார். கீர்த்திவர்மனின் ஆட்சியின் போது கிருட்டிண மிசுராவால் இயற்றப்பட்ட 'பிரபோதன-சந்திரோதயம்' என்ற நாடகம், சிற்பக் கலையில் வெளிப்படையான பாலியல் கற்பனையை விமர்சிக்கின்றது.[10] இது காபாலிகர்கள் போன்ற தீவிர தாந்த்ரீக பிரிவுகளை கேலி செய்கிறது.[11]

அஜய்கரிலுள்ள பர்மலா ஏரிக்கு அருகிலுள்ள சிவன் கோவிலின் சுவரில் 'சிறீ-கீர்த்தி-செயேசுவரரின் புராணம்' உள்ளது. இது அநேகமாக கீர்த்திவர்மனைக் குறிப்பதாக இருக்கலாம்.[12]

நாணயம்[தொகு]

தற்போது கிடைத்துள்ள சந்தேல நாணயங்களில் முதன்மையானது கீர்த்திவர்மனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது. இவை அனைத்தும் 31 முதல் 63 வரை எடையுள்ள தங்க நாணயங்களாகும். நாணயங்களில் ஒருபுறம் அமர்ந்திருக்கும் ஒரு பெண் தெய்வமும், மறுபுறம் சிறீமத் கீர்த்திவர்மதேவன்' உருவமும் இடம்பெற்றுள்ளனர். இந்த பாணி முதலில் காலச்சூரி மன்னர் கங்கேயதேவனால் அறிமுகப்படுத்தப்பட்டது. கங்கேயனின் மகன் இலட்சுமிகர்ணனை வென்றதை நினைவுகூரும் வகையில் கீர்த்திவர்மன் இந்த பாணியை பின்பற்றியிருக்கலாம்.[13]

சான்றுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]