கிரகாம் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரகாம் விதி (Graham’s law) அல்லது கிரகாமின் வளிம விரவுதல் விதி (Graham's law of effusion) என்பது இசுக்காட்டிய வேதியியலாளரான தாமசு கிரகாம் என்பவரால் உருவாக்கப்பட்டது. மாறாத வெப்ப, அழுத்த நிலைகளில் வளிமங்களின் விரவுதல் வீதமானது அவற்றின் மூலக்கூற்று நிறையின் வருக்கமூலத்திற்கு நேர்மாறுவிகிதசமனாக இருக்கும்[1] என்று இவர் சோதனைகளின் மூலம் கண்டறிந்தார். கணித முறைப்படி இவ்விதியை இவ்வாறு எழுதலாம்:

இங்கு:-

  • வீதம் 1 (Rate1) - முதலாவது வளிமத்தின் வெளிப்பரவல் வீதம், அதாவது, ஓரலகு நேரத்தில் வெளிப்பரவும் மூலக்கூறுகளின் அளவு அல்லது மோல்களின் எண்ணிக்கை
  • வீதம் 2 (Rate2) - இரண்டாவது வளிமத்தின் வெளிப்பரவல் வீதம்
  • M1 - முதலாவது வளிமத்தின் மூலக்கூற்று நிறை
  • M2 - இரண்டாவது வளிமத்தின் மூலக்கூற்று நிறை

அதாவது, ஒரு வளிமத்தின் மூலக்கூற்று எடை மற்றொரு வளிமத்தின் மூலக்கூற்று எடையை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தால் அவ்வளிமம் இரண்டாவது வளிமத்தின் விரவுதற் கதியின் சரிபாதியான குறைவான வீதத்தில் நுண்டுளை அடைப்பு அல்லது ஒரு சிறிய குண்டூசித் துளை வழியாக விரவிச்செல்லும். ஏனெனில், கனமான வளிமங்கள் குறைவான கதியிலே தான் விரவும். பின்னாளில் வெளியிடப்பட்ட வளிமங்களின் இயக்கவியற் கொள்கையில் கிரகாம் விதியின் கோட்பாடுகள் முழுமையாக விளக்கப்பட்டுள்ளன. விரவுதல் மூலமாக ஓரிடத்தான்களைப் பிரிக்கவியலும் என்ற கொள்கைக்குக் கிரகாம் விதி வித்திட்டது என்பதோடு அணுகுண்டு உருவாக்கும் முயற்சியிலும் இவ்விதி முக்கிய பங்காற்றியது.[2]

ஒரு சிறுதுளை வழியாக வளிம மூலக்கூறுகள் வெற்றிடம் நோக்கிச் செல்வதை விரவுதல் (effusion) என்கிறோம். இவ்விரவுதற் செயலுக்குக் கிரகாம் விதி மிகச்சரியாகப் பொருந்துகிறது. ஒரு வளிமம் மற்றொரு வளிமத்தில் பரவலுக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை. ஏனெனில், இங்கு ஒன்றுக்கு மேற்பட்ட வளிமங்கள் இயங்குகின்றன.[2].

மாறாத வெப்ப, அழுத்த நிலைகளில் மூலக்கூற்று நிறையானது அடர்த்திக்கு நேர்விகிதசமனாக உள்ளது. எனவே, வெவ்வேறு வளிமங்களின் விரவுதல் வீதமானது அவற்றின் அடர்த்திகளின் வருக்கமூலத்திற்கு நேர்மாறுவிகிதசமனாக இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Keith J. Laidler and John M. Meiser, Physical Chemistry (Benjamin/Cummings 1982), pp.18-19
  2. 2.0 2.1 R.H. Petrucci, W.S. Harwood and F.G. Herring, General Chemistry (8th ed., Prentice-Hall 2002) p.206-8 ISBN 0-13-014329-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரகாம்_விதி&oldid=2696616" இருந்து மீள்விக்கப்பட்டது