கிச்சிலான் அமதுர் றஹீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிச்சிலான் அமதுர் றஹீம்
பிறப்புஜனவரி 15, 1945
கம்பகா, நீர்கொழும்பு
பெற்றோர்துவான் தர்மா கிச்சிலான், ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ

கிச்சிலான் அமதுர் றஹீம் (பிறப்பு: ஜனவரி 15, 1945) பல்துறைகளிலும் பங்களிப்பினை நல்கிவரும் மலாய் இனத்தைச் சேர்ந்த இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளரும், கலைஞருமாவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் மேல் மாகாணம், கம்பகா மாவட்டம், நீர்கொழும்பு 'தளுபொத்த' என்ற கிராமத்தில் துவான் தர்மா கிச்சிலான், ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாகப் பிறந்த இவர் நீர்கொழும்பு அல்ஹிலால் மத்திய கல்லூரி, அளுத்கமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாவார். பிள்ளைகள் றோஷான் தாரிக், எம்.எஸ்.காமிலா.

தொழில்[தொகு]

1963 ஆம் ஆண்டில் ஆசிரியையான இவர் 1990 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் உப அதிபராகவும், உடற்கல்விப் போதனாசிரியராகவும், உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகவும், 1978 முதல் 1990 வரை முதன்மை மொழி தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும், மதிப்பீட்டு பரீட்சகராகவும் தனது சேவையை வழங்கியுள்ளார்.

முதல் ஆக்கங்கள்[தொகு]

எழுத்துத் துறையில்[தொகு]

1958 ஆம் ஆண்டில் இவர் பள்ளி மாணவியாக இருக்கும் போது 'வெளிச்சம்' எனும் தலைப்பில் இவரின் கன்னிக் கவிதை கல்லூரி சஞ்சிகையில் இடம்பெற்றது. இதுவரை இருபத்து மூன்று சிறுகதைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள், வானொலிப் பிரதியாக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

வானொலியில்[தொகு]

முதல் வானொலி ஆக்கம் 1975இல் 'சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு' எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. வானொலிப்பிரதி எழுதுதல், சிறுகதையாக்கம், கவிதை, கட்டுரை, உரையாடல்கள், நாடகங்கள் எழுதுதல், வானொலி தொலைக்காட்சி நாடகங்கள் நடித்தல், நடிப்பித்தல், பேச்சு, நிகழ்ச்சிகள் அமைப்பு, பெருநாள் விசேட நிகழ்ச்சிகள் தயாரித்தல், பாடல், பாடலாக்கம், கிராமியப் பாடல்கள் என்ற அடிப்படையில் இவரின் ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டன.

வானொலியில் மாதர் மஜ்லிஸ், இளைஞர் இதயம், இல்முல் இஸ்லாம் ஆகிய நிகழ்ச்சிகளில் குரல் கொடுக்கும் கலைஞராக கடமையாற்றிய இவர் பல நேர்காணல்கள், உரையாடல்களிலும், விசேட உரைச்சித்திரங்களிலும் பங்கேற்றுள்ளார். இவரால் நடிப்பில் பங்கேற்ற நாடகங்களுள் ஒரு ராகம் சுருதி கலைகிறது, அவர்கள் நடிக்கிறார்கள், மகனே எனக்கா இப்படி செய்தாய், வீடு,உண்மைகள் உணரப்படும் போது, இரத்தத்தில் வந்த சொந்தங்கள் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை.

தொலைக்காட்சியில்[தொகு]

தொலைக்காட்சிக்கென இவரால் பிரதியாக்கம் செய்யப்பட்ட இசைநாடகம் 'நீதி' எனும் தலைப்பில் 1985ஆம் ஆண்டில் இலங்கை ரூபவாஹினியில் ஒளிபரப்பாகியது.

இசைத்துறை[தொகு]

பாடுவதிலும், பேச்சாற்றலிலும் ஆற்றல் கொண்டிருந்த இவர் 1972ஆம் ஆண்டில் பொதுமேடைகளில் தனது திறமையை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இச்சந்தர்ப்பத்தினை 'கல்பனா இசைக்குழு' இவருக்கு வழங்கியது.

சிங்களமொழித் தேர்ச்சி[தொகு]

தமிழ்மொழியினைப் போலவே சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்ற இவர் பெண்களின் நல உரிமைகள் சம்பந்தப்பட்டதும், சமூக உணர்வுமிக்கதுமான பல கட்டுரைகளை சிங்களப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார். இந்த அடிப்படையில் சிங்கள மொழியில் எழுதப்பட்ட இவரது முதலாவது ஆக்கம் 'சஹன' எனும் பத்திரிகையில் 1991 இல் பிரசுரமானது. இதேயாண்டில் இவரால் எழுதி, தயாரிக்கப்பட்ட 'வினிச்ஷய' எனும் சிங்கள இசைநாடகம் இலங்கை ரூபாவாஹினியில் ஒளிபரப்பாகி நேயர்களின் வரவேற்பினைப் பெற்றது.

'மிமிக்ரி' கலை[தொகு]

'மிமிக்ரி' கலையிலும் இவர் பங்களித்துள்ளார். ஒரு நடிகரைப் போல அல்லது ஒரு அரசியல்வாதியைப் போல அல்லது ஒரு பிரபல்யமானவரைப் போல அவரின் குரலால் பேசுவதும், அவரின் அபிநயங்களை வெளிப்படுத்துவதும் அனைவராலும் செய்ய முடியாததொன்று. 1986 ஆம் ஆண்டில் இவர் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை இளைஞர் இதயத்தில் 9 பாத்திரங்கள் கொண்ட பத்து நிமிட நாடகத்தினை தனியொருவராக குரல்கொடுத்து நடித்தமை இவரின் திறமைக்கு சான்றாக அமைந்து. இவரின் வானொலி நாடகத்துறையில் இந்நாடகம் ஒரு திருப்புமுனையை அமைத்தது. பல மேடை நிகழ்ச்சிகளிலும் இவர் மிமிக்ரி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

சாரணீயம்[தொகு]

பெண் சாரணீய 37வது குழுத்தலைவியாகக் 1974 இல் கடமையாற்றியுள்ளார்.

எழுத்தணி[தொகு]

1965இல் அரபு எழுத்தணிக்காக வெண் கலப்பரிசிலையும், சீலை ஓவியந்தீட்டலுக்காக தேசிய விருதினையும் (லயன்ஸ் கழகத்திலிருந்து) பெற்றுள்ளார்.

பாரிசவாதம்[தொகு]

இவர் தற்போது ஒரு பாரிசவாத நோயாளி. நான்கு ஆண்டுகளாக இவர் மேற்கொண்ட புனருத்தாபன பௌதீக சிகிச்சையின் மூலமாக இடதுபக்க இயக்கம் மீளவே தனது வழமையான வேலைகளை சிறுகச் சிறுக செய்ய இடது கையைப் பழக்கிக் கொண்டார். (இவர் ஏற்கெனவே வலது கையால் எழுதியவர்)

சிகிச்சை பெற்றுவந்த காலகட்டங்களில் புனருத்தாபன மருத்துவமனையில் வலது குறைந்தவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று 'தனிநபர்' நாடகத்தில் முதலிடத்தையும், பாடுவதில் இரண்டாமிடத்தையும் பெற்றிருக்கிறார். வலங்குறைந்த இடது கையைப் பயன்படுத்தி இவரால் வரையப்பட்ட சித்திரம் மேற்படி மருத்துவமனையில் தற்போதும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயற்கையான பாரிசவாதத்தால் இவர் பாதிக்கப்பட்ட போதிலும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இன்றும் இலக்கியப் பணியாற்றுகின்றார்.

வெளியிட்ட நூல்[தொகு]

  • 'கவிக்குழந்தை' கவிதைத்தொகுதி

பட்டதும் சுட்டதும், சிந்தையில் சிந்தியவை, கவிக்குழந்தை - இரண்டாம்பாகம், அனுபவங்கள் ஆகிய புத்தகங்களை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விருதுகள்[தொகு]

  • இலங்கை அரசால் வழங்கப்படும் -கலாபூசணம் விருது. 2009

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிச்சிலான்_அமதுர்_றஹீம்&oldid=2106873" இலிருந்து மீள்விக்கப்பட்டது