கிசி பொகொஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசி பொகொஸ்ட்
உள்ளூர் பெயர்
Кижский Погост
இரு தேவாலயங்களின் காட்சி
அமைவிடம்ஓனேகா ஏரி, கரேலியா, உருசியா
கட்டப்பட்டது17-18 ஆம் நூற்றாண்டு
அலுவல் பெயர்Kizhi Pogost
வகைகலாச்சாரம்
வரன்முறைi, iv, v
தெரியப்பட்டது1990 (14வது தொடர்)
உசாவு எண்544
பிராந்தியம்ஐரோப்பா, வட அமெரிக்கா
கிசி பொகொஸ்ட் is located in Northwestern Federal District
கிசி பொகொஸ்ட்
வடமேற்று உரசியாவில் அமைவிடம்

கிசி பொகொஸ்ட் (Kizhi Pogost; உருசியம்: Кижский Погост) என்பது கிசி தீவில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டுக்குரிய வரலாற்று இடமாகும். இத்தீவு உருசியாவின் கரேலியாவிலுள்ள ஓனேகா ஏரியில் அமைந்துள்ளது. பொகொஸ்ட் எனப்படும் பகுதியில் மரத்தாலான இரண்டு பெரிய கிறித்தவ தேவாலயங்களையும் (22 குவிமாட உருமாற்றத் தேவாலயம், 9 குவிமாட பரிந்துபேசும் தேவாலயம்) மற்றும் ஒரு மணிக் கோபுரத்தையும் கொண்டுள்ளது. பொகொஸ்ட் அதனுடைய அழகிற்கும் நீண்ட கால இருப்புக்கும் முக்கியத்துவம் பெற்றதெனினும், அது மரத்தினால் கட்டப்பட்டது. 1990 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் கள இடமாக உள்வாங்கப்பட்டது.[1] 1993 இல் உரசிய கலாச்சார பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டது.[2]

பொதுத் தகவல்[தொகு]

கிசித் தீவின் தென் பகுதியில், ஒனேகா ஏரிமட்டத்திலிருந்து 4 மீட்டர் உயரத்தில் பொகொஸ்ட் கட்டப்பட்டது. இதன் பிரதான அடிப்படைக் கட்டமைப்பு கிட்டத்தட்ட 30 செ.மீ. விட்டமும், 3 – 5 மீட்டர் உயரமும் கொண்ட ஸ்கொட் ஊசியிலை (Pinus sylvestris) மரக்கட்டைகளால் கட்டப்பட்டது. கிசி பொகொஸ்ட் ஒரு ஆணியும் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது. அக்காலத்தில் இருந்த சிக்கலான பொருள் விநியோக நிலைமையிலும், கட்டுமானத்திற்காகப் பிரதான நிலப்பகுதியில் இருந்து அங்கு பல ஆயிரம் மரக்கட்டைகள் கொண்டு வரப்பட்டன.[3]

உருமாற்றத் தேவாலயம்[தொகு]

உருமாற்றத் தேவாலய உட்பகுதி

உருமாற்றத் தேவாலயம் பொகொஸ்ட்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதியாகும். இது சூடாக்கப்பட்ட அமைப்புக் கொண்டதல்ல. எனவே இங்கு குளிர்காலத்தில் ஆராதனைகள் நடைபெறுவதில்லை. அதனால் இது கோடை காலத் தேவாலயம் என அழைக்கப்படுகிறது. தேவாலயத்தில் உள்ள சிலுவை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளதன்படி, இதன் பீடம் 6 சூன் 1714 அன்று கட்டப்பட்டது. மின்னலால் எரிந்துபோன பழைய தேலாலயத்தின் அமைவிடத்தில் மறுபடியும் இத்தேவாலயம் கட்டப்பட்டது. இதனைக் கட்டியவர் யாரென்று தெரியாது. அங்குள்ள கதையின்படி, பிரதானக் கட்டடவியலாளர் முழுக் கட்டுமானத்திற்கும் ஒரு கோடாரியைப் பாவித்தார் என்றும், வேலை முடிந்ததும் "இதற்கு இணையாக ஒன்று இருந்ததுமில்லை, இனி இருக்கப்போவதுமில்லை" என்று குறிப்பிட்டுக் கோடாரியை ஏரியில் எறிந்தார் என்றும் சொல்லப்படுகிறது.[4][5]

இத்தேவாலயம் 22 குவிமாடங்களை 37 மீட்டர் உயரத்தில் கொண்டு, வட உருசியாவில் உள்ள உயரமான மரத்தாலான தேவாலயங்களில் ஒன்றாகவுள்ளது. இதனுடைய சுற்றளவு 20×29 மீட்டர்கள் ஆகும். இது ஒனேகா ஏரியின் தென் கரையில் 1708 இல் கட்டப்பட்டு 1963 இல் நெருப்பினால் அழிந்துபோன, 18 குவிமாடங்களைக் கொண்டிருந்த தேவாலயத்தை முன்மாதிரியாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது.[6] அக்கால உருசியாவில் இருந்த தச்சு வேலைப் பாரம்பரியத்தின்படி, உருமாற்றத் தேவாலயம் ஆணியற்று, மரத்தினால் உருவாக்கப்பட்டது.[7][8] எல்லாக் கட்டமைப்புகளும் குறியீடு-பொருத்தப்பட்ட கிடையான மரக்கட்டைகளினால் உருவாக்கப்பட்டன. அவை மூலை இணைப்பு உள்ளகப் பூட்டு, வட்ட வடிவ வெட்டுத்தடம் அல்லது கோடாரியால் வெட்டப்பட்ட இணைப்புக் கூர் பொருத்தம் அமையப்பெற்றிருந்தன. கட்டமைப்பின் அடிப்படை நான்கு இரு-படி பக்க இணைப்புடனான எண்முகச் சட்டத்தைக் கொண்டது. கிழக்கில் தட்டையாக நீட்டிக் கொண்டிருக்கும் பகுதி ஐங்கோண வடிவம் கொண்டதும், பீடத்தை உடையதும் ஆகும். இரு சிறிய எண்கோணங்களையொத்த வடிவங்கள் பிரதான எண்கோணத்தின் மேல் பூட்டப்பட்டது. இதன் கட்டமைப்பைச் சுற்றி 22 வேறுபட்ட அளவிலும் வடிவத்திலும் குவிமாடங்கள் மேலிருந்து பக்கமாகச் செல்கின்றன. உணவுக்கூடம் மூன்று-சாய்வுக் கூரையினால் மூடப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில், தேவாலயம் மரப்பலகையினால் அலங்கரிக்கப்பட்டும், சில பகுதிகள் உருக்கினால் மூடப்பட்டும் இருந்தன. 1950 களில் இதனுடைய மூல வடிவத்திற்கு மீளமைக்கப்பட்டது.[3][9]

1870 இல் கட்டப்பட்ட அடித்தளத்திற்கான மேற்குத் திருச்சுற்று தவிர்ந்த தேவாலய பணிச்சட்டம், ஆழமான அடித்தளமின்றி கல் தளம் மீது சார்ந்து இருந்தது. தட்டையான கூரை மீது உள்ள பல மரங்கள் ஊசியலை மரப்பலகையினால் ஆனவை. குவிமாடம் காட்டரசுமரத்தினால் மூடப்பட்டது.

திரைத்தட்டிகள் நான்கு மட்டங்களையுடன் 102 உருவப்படங்களைக் கொண்டது.[6] இவை 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதி முதல் ஆரம்ப 19 ஆம் நூற்றாண்டு வரையான காலத்துக்குரியன. உருவப்படங்கள் மூன்று காலத்திற்குரியவை. இரு பழைய உருவப்படங்கள் ("உருமாற்றம்", "பாதுகாப்பு") 17 ஆம் நூற்றாண்டுக்குரியவையும் வடக்கு வகை தனிச்சிறப்பும் கொண்டன. மத்திய உருவப்படங்கள் 18 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதிக்குரியனவையும் உள்ளூர் வகையும் ஆகும். மூன்று மேற் வரிசையின் பல உருவப்படங்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியதும், உருசியாவின் பல பகுதிகளிலிலிருந்தும் கொண்டு வரப்பட்டன.[9]

குவிமாடங்களின் விபரம் (உருமாற்றத் தேவாலயம்) கன்னி மரியாளின் பரிந்து பேசுதல் தேவாலயம்

உசாத்துணை[தொகு]

  1. Kizhi Pogost at UNESCO
  2. Decree N 1847 on நவம்பர் 6, 1993, by the President of Russia (in Russian)
  3. 3.0 3.1 Stephen J. Kelley, ed. (2000). Wood structures: a global forum on the treatment, conservation, and repair of cultural heritage. ASTM International. pp. 42–47. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8031-2497-X.
  4. Stephen J. Kelley, Joseph R. Loferski, ed. (2000). Wood structures: a global forum on the treatment, conservation, and repair of cultural heritage. ASTM International. p. ix. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8031-2497-X.
  5. Robin Milner-Gulland (2000). The Russians. Wiley-Blackwell. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-631-21849-1.
  6. 6.0 6.1 Ethnographic and open-air museums, UNESCO, pp. 170-173
  7. William Minor (1995). Unzipped souls: a jazz journey through the Soviet Union. Temple University Press. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56639-324-8.
  8. John Onians (2004). Atlas of world art. Laurence King Publishing. p. 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85669-377-5.
  9. 9.0 9.1 Церковь Преображения Господня (in Russian) Kizhi Museum site

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kizhi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசி_பொகொஸ்ட்&oldid=2607887" இலிருந்து மீள்விக்கப்பட்டது